இந்த பதிவில் “தமிழின் இனிமை பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.
மொழிகளின் தாய் மொழியான தமிழ் மொழி பல சிறப்புக்களையும் பெருமைகளையும் தன்னகத்தே கொண்டது. மொழிகளில் இனிமையான மொழி தமிழ் மொழி என்றால் அது மிகையாகாது.
Table of Contents
தமிழின் இனிமை பற்றிய கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- தமிழ் மொழியின் சிறப்பு
- பாரதிதாசன்
- பாரதிதாசன் கூறும் தமிழின் இனிமை
- தமிழ் மொழியைக் காப்போம்
- முடிவுரை
முன்னுரை
உலகின் மொழிகளுக்கெல்லாம் தொன்மை மொழி தமிழ் மொழியாகும். மொழி என்பது நம் பண்பாட்டின் அடையாளமாகும் மொழி இல்லாத வாழ்க்கை என்பது ஒளி இல்லாத வாழ்க்கைக்கு இணையானது.
மூச்சை போல் நம் வாழ்வில் மொழியும் முக்கியமே. உலகில் எத்தனையோ மொழிகள் உண்டு. அவற்றுள் தமிழ் மொழியே இனிமை என்றால் அது மிகையாகாது. தமிழ் என்பதற்கு இனிமை என்ற பொருள் உண்டு. இத்தகைய தமிழின் இனிமை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
தமிழ் மொழியின் சிறப்பு
தமிழ் மொழியின் சிறப்புப் பற்றி பல இலக்கியங்களில் ஊடாக ஆதிகாலம் தொட்டு இன்றுவரை புலவர்களும்⸴ கவிஞர்களும் பாடியுள்ளனர். தொன்மை வாய்ந்த மொழியாகவும்⸴ மொழிகளுள் மூத்த மொழியாகவும் தமிழ்மொழி விளங்குகின்றது.
தற்கால தமிழ் இலக்கியத்தின் முன்னோடியான பாரதியார் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று தமிழ் மொழியைச் சிறப்பித்துள்ளார்.
தமிழ் மொழி இயல்⸴ இசை⸴ நாடகம் என்னும் முப்பெரும் பிரிவுகள் உடையதாகும். தமிழ்ச்சங்க அடிகளின் மொத்த எண்ணிக்கை 26,350 ஆகும். இவ்வாறாக விரிவாக உருவாகி இயற்றப்பட்ட இலக்கியங்கள் உலகில் எந்த மொழிகளுக்கும் கிடையாது.
பாரதிதாசன்
புதுச்சேரியில் திரு.கனகசபை மற்றும் லட்சுமி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தவர் திரு.கனகசுப்புரத்தினம் அவர்கள். இவர் பாரதியாரின் மீது கொண்ட பற்றினால் தனது பெயரை பாரதிதாசன் என மாற்றி அமைத்துக் கொண்டார்.
பாண்டியன் பரிசு⸴ அழகின் சிரிப்பு⸴ குடும்ப விளக்கு⸴ இருண்ட வீடு போன்ற நூல்கள் இவரின் புகழ் மிக்க சில தமிழ் நூல்களாகும்.
பாரதிதாசன் கூறும் தமிழின் இனிமை
பாரதிதாசன் தமிழின் இனிமை பற்றிக் கூறும் போது நன்கு பழுத்த பலாவின் சுவையையும்⸴ நன்கு முற்றியிருக்கும் செங்கரும்பின் சாறும்⸴ இயற்கையான மலர்களில் இருந்து தேனிகளால் சேகரிக்கப்பட்ட சுவை மிகுந்த தேனும்⸴
பாகு என்றாலே இனிப்பு அந்தப் பாகில் ஊற வைத்த பலகாரத்தின் சுவையையும்⸴ பசுவிலிருந்து தூய்மையான பாலும்⸴ தென்னை மரத்திலிருந்து புதிதாக இறக்கப்பட்ட குளிர்ந்த இளநீரும் பார்த்தாலே இனிமை தரக்கூடியன என்றாலும் இவை எல்லாவற்றின் இனிமையையும் விட தமிழின் இனிமை மேலானது என கூறுகின்றார்.
தமிழ் மொழியைக் காப்போம்
தமிழ் மொழியின் இனிமைக்கு எதுவும் நிகரில்லை. இத்தகைய நம் தாய்மொழியை பேணிக் காக்க வேண்டும். எந்தவொரு மொழி பேசும் மக்களினதும் பாரம்பரியமான கலாச்சாரம் அவர்களது மொழியை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்படுகின்றது.
தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரம் தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்படுகின்றது. எனவே அதைக் காக்க வேண்டியது நமது கடமையே.
தமிழ் மொழியினை நம் முன்னோர்கள் பேணிப் பாதுகாத்து வந்ததுடன் மொழி வளர்ச்சிக்கும் பெரிதும் பாடுபட்டுள்ளனர். இவர்கள் வழி நாமும் நடப்போம்.
முடிவுரை
எல்லா மொழிகளிலுமே இனிய மொழியான தமிழ் மொழியினை பிற மொழி கலப்பில்லாமல் பயன்படுத்துதல் நன்று. பாரதிதாசன் போல் தமிழின் இனிமையை உணர்ந்தும்⸴ தமிழ்மொழியின் இனிமையை மறவாதும் பேணிக் காப்போம்.
You May Also Like :