கார்த்திகை தீபம் பற்றிய கட்டுரை

Karthigai Deepam Katturai In Tamil

இந்த பதிவில் “கார்த்திகை தீபம் பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

இந்த பண்டிகை கொண்டாடப்பட பல காரணங்களும் ஐதீகங்களும் உள்ளன. இவற்றை எல்லாம் இக்கட்டுரையில் காணலாம்.

கார்த்திகை தீபம் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. கொண்டாடப்படுவதற்கான ஆன்மிகக் காரணம்
  3. கார்த்திகைத் தீபத் திருநாள் கொண்டாட்டம்
  4. கார்த்திகை தீபம் ஏற்றும் முறை
  5. கார்த்திகைத் தீபத் திருநாளின் மகத்துவம்
  6. முடிவுரை

முன்னுரை

தீபம் என்றாலே ஒளிதரும் சிறப்பம்சமாகும். தமிழர்கள் தங்கள் இல்லங்களிலும்⸴ கோவில்களிலும் தீபம் ஏற்றி மகிழ்வாக கொண்டாடும் திருநாள் கார்த்திகை விளக்கீடு ஆகும்.

தீபமானது மங்கலப் பொருளாகவும்⸴ ஒளி தரும் சிறப்பு பொருளாகவும் நம் முன்னோர்களால் கருதப்பட்டது. கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நாளன்று ஏனைய கார்த்திகை நாளை விடவும் சிறப்புப் பெறுகின்றது.

இந்நாளிலே மாலை வேளைகளில் தீபம் ஏற்றி கொண்டாடி மகிழ்வர். இதன் பின்னணியில் பல ஐதீகங்களும்⸴ சம்பிரதாயங்களும் நிலவுகின்றன. இக்கட்டுரையில் கார்த்திகை தீபம் பற்றிக் காண்போம்.

கொண்டாடப்படுவதற்கான ஆன்மிகக் காரணம்

புராணகாலத்தில் திருவண்ணாமலைத் திருத்தலத்தில் ஜோதியாக⸴ அக்கினிப் பிழம்பாக காட்சியளித்த சிவபெருமானது அடிமுடியைக் காணும் நோக்கில் மகாவிஷ்ணு வராக (பன்றி) அவதாரம் எடுத்து அடியை காணவும்⸴

படைப்புக் கடவுளான பிரம்ம தேவன் அன்னப்பறவை வடிவெடுத்து சிவனின் முடியைக் காணவும் உயரப் பறந்து கொண்டே இருந்தனர். எனினும் இருவராலும் தொடக்கத்தையும் முடிவையும் அறிய முடியவில்லை.

இச்சம்பவம் இறைவன் தொடக்கம் முடிவு இல்லாதவராகவும்⸴ மனிதன் அடையக்கூடிய ஞானம் எனும் உயரிய ஜோதி வடிவானது என்பதையும்⸴ ஞானத்தையடைந்தவர்கள் அகத்திலுள்ள இருளைப் போக்கி ஞான ஜோதியாவார்கள் எனும் தத்துவத்தை பறைசாற்றுவதாகவும் கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகின்றது.

கார்த்திகைத் தீபத் திருநாள் கொண்டாட்டம்

தீபம் என்பது நம் முன்னோர்களால்⸴ பெரியவர்களால் மங்கலப் பொருளாகவும் கருதப்படுகின்றது. ஒளியின்றி எதையும் பார்க்க முடியாது⸴ அதே போல் எதையும் உணர முடியாது. இதே போல் உள்ளத்தில் ஒளியின்றி எதையும் உணர முடியாது.

இதையொட்டியே சிருஷ்டி தொடங்கியது. ஒளியின் விரிந்த ரூபமே தீபமாகும். தமிழர்கள் வாழ்வியலோடு கலந்த தமிழர் பாரம்பரிய வாழ்வே கார்த்திகை தீபத் திருநாள் ஆகும்.

வீட்டைச் சுத்தம் செய்து மாலை வேளைகளில் வீடுகளிலும்⸴ வெளிப்புறங்களிலும் வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவர்.

ஆலயங்களிலும் தீபம் ஏற்றி வழிபடுவர். இல்லங்கள் முழுவதும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். ஒளிவெள்ளத்தில் இல்லங்கள் மிதந்திடும்.

கார்த்திகை தீபம் ஏற்றும் முறை

27 விளக்குகளுக்கு மேல் எத்தனை விளக்குகளும் ஏற்றலாம். வீடு முழுவதும் விளக்கேற்றலாம். வெளிவாசல்⸴ நிலவாசல்⸴ பூஜை அறை⸴ படுக்கை அறை⸴ அடுப்பங்கரை⸴ வேப்ப மரம் போன்ற மரங்கள் அடியில்⸴ கழிவறை போன்ற இடங்களில் முக்கியமாக தீபமேற்ற வேண்டும்.

நாம் ஏற்றும் அகல் தீபமானது கிழக்கு⸴ மேற்கு⸴ வடக்கு போன்ற திசைகளில் ஏற்ற வேண்டும். ஆனால் தெற்குத் திசையில் மட்டும் எக்காரணம் கொண்டும் தீபம் ஏற்றக்கூடாது.

இந்நாளில் நைவேத்தியமாக அவல்⸴ கடலை⸴ நெல்பொரி⸴ அப்பம் முதலானவற்றை இறைவனுக்குப் படைப்பர்.

கார்த்திகைத் தீபத் திருநாளின் மகத்துவம்

ஆதியும் அந்தமும் இல்லாதவர் சிவபெருமான் வீற்றிருக்கும் தலமே திருவண்ணாமலை கோவிலாகும். இத்திருவண்ணாமலை அருணாச்சல மலையின் கார்த்திகை தீபக் திருநாளன்று ஏற்றப்படும் கார்த்திகை தீபம் சிறப்பம்சம் மிக்கது.

நாம் ஏற்றும் தீபம் கஷ்டங்களை நீக்கும்⸴ கடன் தொல்லையை நீக்கும்⸴ குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்⸴ அனைத்து சௌபாக்கியங்களையும் பெற்றுத் தரும்.

விளக்கு ஒளியால் வீடு நிரப்பப்படுகின்ற அற்புத நாள்தான் தீபத் திருநாளாகும். விளக்கு இருளை அகற்றும். தீபம் ஏற்றுவதன் மூலம் ஐஸ்வரியங்கள் அதிகரிக்கும்.

முடிவுரை

வீடுகளிலும்⸴ கோவில்களிலும் விளக்கேற்றி அனைத்துச் செல்வங்களையும் பெற்று வாழ்வது மட்டுமின்றி அனைவருக்காகவும் வேண்டிக்கொண்டு வழிபட்டுப் பயன் பெறுவதே சிறந்ததாகும்.

பாவ வினைகள் நீங்கப்பெற்று சிவ பெருமானின் அருட் கடாட்சம் பெற்று வாழ கார்த்திகைத் திருநாளைக் கொண்டாடி மகிழ்வோம்.

You May Also Like :

தமிழின் இனிமை பற்றிய கட்டுரை

தேசப்பற்று பற்றிய கட்டுரை