இந்த பதிவில் “ஊழல் பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.
ஊழலற்ற ஒரு நாடாக ஒரு நாடுமாறும் போதுதான் பொருளாதாரமும் மக்களின் வாழ்க்கை தரமும் வளர்ச்சி அடையும். ஊழல் லஞ்சத்தை ஒழிக்க வேண்டியது ஒவ்வொருவரினதும் கடமையாகும்.
Table of Contents
ஊழல் பற்றிய கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- இந்தியாவில் ஊழல்
- ஊழலால் ஏற்படும் பாதிப்புக்கள்
- ஊழலை ஒழிக்க மேற்கொள்ளும் வழிமுறைகள்
- தனிநபர் பொறுப்பு
- முடிவுரை
முன்னுரை
ஊழல் என்பது இந்தியாவில் மட்டுமன்றி அனைத்து உலக நாடுகளிலும் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. ஊழல் காரணமாக அனைத்து நாடுகளினதும் ஜனநாயகம் பாதிப்படைகின்றது.
இதனால் பாரிய பிரச்சனைகளை ஒவ்வொரு நாடுகளும் எதிர்கொண்டு வருகின்றன. சிறு ஊழல் கூட அரசினைப் பெரிதும் பாதிக்கின்றது.
இத்தகைய ஊழலானது தீராத நோயாகவே சமூகத்தில் இன்று வரை வளர்ந்து கொண்டிருக்கின்றது. இதனை அழித்தொழிப்பது என்பது அவசியமான ஒன்றாகும். ஊழல் பற்றிய இக்கட்டுரையில் காண்போம்.
இந்தியாவில் ஊழல்
“லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்ˮ இந்தியாவில் ஊழல் ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது. இது இந்தியாவின் பொருளாதாரத்தை மோசமாகப் பாதிக்கின்றது.
2011ஆம் ஆண்டில் இந்தியா திரான்சிபரன்சி இன்டர்நேசனலின் ஊழல் மலிவுச் சுட்டெண்ணில் (Corruption Perceptions Index) 178 நாடுகளில் 95வது இடத்தில் இருந்தது.
“பண மோசடித் தடுப்புச் சட்டங்கள்”, “ஊழல் தடுப்பு சட்டம்-1988” போன்ற பல சட்டங்கள் இந்தியாவிலுள்ள போதிலும் ஊழல் மோசடிகள் லஞ்சம் போன்றன சமூகத்தில் அதிகமாகவே காணப்படுகின்றன.
ஊழலால் ஏற்படும் பாதிப்புக்கள்
ஊழல் தனிமனிதனை மட்டுமன்றி ஒட்டுமொத்த தேசத்தின் வளர்ச்சியையும் முற்றாக முடக்கி விடும். திறமை மிக்கவர்களது வாய்ப்புக்கள் ஊழலினால் பறிக்கப்படுகின்றன. மக்களுக்கு சேவை செய்பவர்களே தவறு செய்யும் போது பாமர மக்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர்.
அரசினால் கிடைக்கும் சலுகைகள்⸴ நன்கொடைகள் உரிய முறையில் ஏழை மக்களுக்கு சென்றடைவதை ஊழல் மோசடிகளினால் தடுக்கப்படுகின்றது. ஊழல் மூலம் தவறுகள் கண்டுகொள்ளாமல் விடப்படுகின்றன.
ஊழலை ஒழிக்க மேற்கொள்ளும் வழிமுறைகள்
லஞ்ச ஒழிப்பு என்பது ஒரு நாள் காரியம் அல்ல. இதனை தனிநபர்கள் தொடக்கம் அரசு வரை இணைந்து ஏற்படுத்தினால் மட்டுமே சாத்தியமாகும். லஞ்சம் தொடர்பாக ஒவ்வொரு அலுவலகத்திலும் புகார் எண்⸴ முகவரி இடம்பெற வேண்டும்.
அரசுத் திட்டங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட வேண்டும். பல வலுவான சட்டங்களைக் கொண்டு வரவேண்டும். ஏற்கனவே உள்ள சட்டங்கள் புதிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
தினசரி ஊழல் வழக்குகளை விசாரிக்க வேண்டும். ஊழல் தொடர்பான தகவல்களை வழங்குபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படல் வேண்டும். இவை போன்றவை அரசினால் மேற்கொள்ளப்படும் போது ஊழல்கள் தடுக்கப்படும்.
தனிநபர் பொறுப்பு
ஒரு அதிகாரியின் அதிகாரத்தினால் மட்டும் ஊழல் நடைபெறுவதில்லை. சுயநலம் உள்ள மனிதர்கள் தம் தேவைகளுக்காகவும்⸴ விருப்பங்களுக்காகவும் லஞ்சம் கொடுக்கின்றனர். லஞ்சம் பெறுவது போல் லஞ்சம் கொடுப்பதும் தவறாகும்.
ஊழலற்ற இந்தியாவாக நம் நாடு மாறவேண்டும் எனில் தனி மனிதர் ஒவ்வொருவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். ஊழல் தொடர்பான விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். ஊழல் நடைபெறுவதைத் தடுக்க நம்மாலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஊழல் நடைபெறுவதைக் கண்டால் அதனை வெளிக்கொணர்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வது நமது கடமை என்பதை அனைவரும் உணர்ந்து செயற்படல் நன்று. தனிமனிதர் ஒவ்வொருவரிலும் மாற்றங்கள் ஏற்படும் போது தான் ஊழலை ஒழிக்க முடியும்.
முடிவுரை
ஊழல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் போது ஊழல் குறைவடையும். ஊழலற்ற ஒரு நாடாக இந்தியா மாறும் போது இந்தியாவின் பொருளாதாரமும் வளர்ச்சி அடையும். அரசினுடைய சலுகைகள்⸴ காப்பீடுகள் உரிய வகையில் மக்களுக்குச் சென்றடையும். ஊழலை ஒழிப்போம் ஊழலற்ற இந்தியாவை வளர்த்தெடுப்போம்.
You May Also Like :