இந்த பதிவில் “உறவுகளின் முக்கியத்துவம் கட்டுரை” பதிவை காணலாம்.
பிறரிடம் வன்சொல் பேசாது அனைவரிடத்தும் இன்சொல் பேசி நமக்கான வாழ்வினை மகிழ்வாக உறவுகளை மதித்து வாழ வேண்டும்.
Table of Contents
உறவுகளின் முக்கியத்துவம் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- யாவரும் கேளீர்
- உறவுகளின் அவசியம்
- ஒற்றுமையின் பலன்
- வேற்றுமையின் விளைவு
- முடிவுரை
முன்னுரை
மனிதன் ஒரு குழுவாக வாழும் இயல்புடையவன் ஆதி காலங்களில் இருந்தே மனிதன் குழுவாகவே தனது சவால்களையும் மற்றும் சுக துக்கங்களையும் சமாளித்து இன்றைய நிலையினை அடைந்திருக்கின்றான்.
அந்தவகையில் மனிதனுடைய குடும்பம், உறவினர்கள், நண்பர்கள் எனும் அலகுகள் மனிதனுடைய வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாக விளங்கி வருகின்றன. இவை எந்தளவிற்கு முக்கியமானவை என்பது யாவரும் அறிந்த ஒன்றேயாகும். இக்கட்டுரையில் உறவுகளின் முக்கியத்துவம் பற்றி நோக்கலாம்.
யாவரும் கேளீர்
சங்கப்புலவர் கணியன் பூங்குன்றனார் அவர்கள் “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற வரிகளின் மூலமாக இவ்வுலகத்தில் வாழும் மக்களிடையே சமத்துவத்தை விதைத்திருந்தார்.
எம்மை சுற்றி வாழுகின்ற எம்மை போன்ற மனிதர்கள் யாவருமே நமது உறவினர்கள் போன்றவர்கள் என்பது இதன் ஆழமான கருத்தாக உள்ளது.
பொதுவாகவே மனிதன் தனித்து இங்கே வாழ்வது கடினமானதாகும். மனிதனின் உணர்வுகளிலும் கடினங்களிலும் ஆபத்துக்களிலும் இருந்து பாதுகாக்க இன்னொரு மனிதனுடைய உதவி கட்டாயம் தேவையானது என்பதை யாராலும் மறுக்க முடியாதது.
உறவுகளின் அவசியம்
“கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்றனர் நமது முன்னோர்கள் அன்றைய காலங்களில் ஒரு நாட்டின் மக்கள் ஒரு கூட்டு பறவையாக ஒற்றுமையாக வாழ்ந்தனர்.
இதனால் தான் நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத விடயங்களை கூட அவர்களால் சாதிக்க முடிந்தது.
நல்லோரினை உறவாக நாம் கொண்டிருந்தால் நமது வாழ்வு மேன்மையடையும் மகிழ்ச்சிக்கும் அன்புக்கும் பஞ்சமே இருக்காது.
ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமையாக வாழ்ந்தால் வாழ்வு வண்ணமயமாக இருக்கும். இதன் காரணமாக தான் மனிதன் குடும்பம், உறவுகள், நண்பர்கள், அயலவர்கள் என்ற ஒரு சமூக அமைப்பிற்கு உட்பட்டு வாழ்ந்து வருகின்றான்.
ஒற்றுமையின் பலம்
“அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” என்ற முதுமொழியினை போல மனிதன் ஒன்றுபட்டு சிந்திக்கவும் செயலாற்றவும், பல அபாயங்களில் இருந்து தப்பி வாழவும், தமக்கான உணவை தேடவும் தொழில்களை ஆற்றவும்,
பல போர்களை சந்திக்கவும் உறவினர்கள், வேண்டியவர்கள் என்ற ஒரு நெருக்கமான பிணைப்பு தேவையாக இருக்கின்றது. இதற்கு எந்த மனிதர்களும் விதிவிலக்காக இருக்க முடியாது.
இதனை நமது மனித குலமானது காலம் காலமாக கடைப்பிடித்து வருகின்ற உறவுமுறைகள் நமக்கு புலப்படுத்தி நிற்கின்றன.
வேற்றுமையின் விளைவு
“ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வே” என்பது போல மனிதர்கள் உறவினர்களோ அன்றி நண்பர்களோ இன்றி ஒரு சமூகதத்தில் மகிழ்ச்சிகவோ நிம்மதியாகவோ வாழ முடியாது.
ஒரு சமூகத்தில் தனித்து விடப்படல் என்பது மன அழுத்தம் மற்றும் பாரிய பிரச்சனைகளை மனிதர்களுக்கு ஏற்படுத்தும் என்பதனை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
முடிவுரை
“குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை” என்ற ஒளவையாரின் கருத்தின் படி நாம் பிற மனிதர்களோடு புரிந்துணர்வோடும், விட்டுக்கொடுப்போடும் இருக்கின்ற போது தான் எம்மோடு ஒன்றாக பயணிக்க கூடிய உறவினர்களையோ நண்பர்களையோ நம்மால் உருவாக்கி கொள்ள முடியம்.
எனவே தவறான புரிந்துணர்வால் பிறரிடம் வன்சொல் பேசாது அனைவரிடத்தும் இன்சொல் பேசி நமக்கான வாழ்வினை மகிழ்வாக வாழ்வோமாக.
Read more: உடல் சூட்டை குறைக்க வழிகள்