மென்திறன் என்றால் என்ன

மென்திறன்

மென்திறன் என்றால் என்ன

வாழ்க்கையில் தெளிவான திட்டமிட்ட குறிக்கோளுடன், முயற்சியும், பயிற்சியும் முறையாக இருந்தால், சாதாரண மனிதரும் சரித்திரம் படைக்க முடியும். மென்திறன் நமது தகுதிக்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும்.

ஒருவரின் மென்திறன்கள் புன்னகை, முகபாவனை, உடை நாகரீகம், உடல்மொழி, பேசும்மொழி குரல் ஒலியின் ஏற்ற இறக்கம் போன்றவற்றின் மூலமாக வெளிப்படுகின்றன.

இவை தானாக வெளிப்படுகின்றன என்பதனைவிட நாம்தான் நம்முடைய மென்திறன்களை வெளிப்படுத்துகின்றோம் என்பதே நிதர்சன உண்மையாகும். இதனால்தான் மென்திறன்களை வளர்த்துக் கொள்ள பயிற்சி அவசியமாகின்றது.

மென்திறன் என்றால் என்ன

இன்றைய உலகமயமாக்கல் சூழலில் வர்த்தக வெற்றிக்கு உதவும் திறன்கள் தான் மென்திறன்கள் என அழைக்கப்படுகின்றது.

மேலும், மென்திறன் என்பது ஒரு மனிதனிடம் உள்ள தனிப்பட்ட பழக்க, வழக்க அடிப்படையிலான திறமை அல்லது ஆற்றலாகும்.

மென்திறனின் முக்கியத்துவம்

பட்டமும், சான்றுகளும் அவசியம்தான் என்றாலும் அத்துடன் மென்திறனும் (Soft skills) சேர்ந்திருக்கும் போதுதான் ஒரு சக்தி வாய்ந்த பணித்திறன் உருவாகிறது.

இன்றைய உலகில் அனைத்திற்குமே போட்டிகள் அதிகமாகிவிட்ட சூழலில், ஒருவர் தனது திறன்களை முடிந்தளவு அதிகப்படுத்திக் கொள்வதே வெற்றிக்கு வழிவகுக்கும்.

வாய்ப்புகளை அறிந்து கொள்ளவும் அவற்றை உருவாக்கிக் கொள்ளவும் மென்திறன்கள் முக்கியம் வாய்ந்தவையாகும். தொழில்நுட்ப அறிவில் சிறந்து விளங்கினாலும் மென்திறன்கள் அற்றவர்களை நிறுவனங்கள் ஏற்கத் தயங்குகின்றன.

மென்திறன்களைத் தான் பல நிறுவனங்கள் தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகள் மூலமாக உறுதி செய்து கொண்டு பணி வாய்ப்பைத் தருகின்றன.

மேலதிகாரிக்கோ அல்லது வாடிக்கையாளருக்கோ ஒருவரைப் பற்றிய நம்பிக்கையை அல்லது பாதுகாப்பு உணர்வை அளிக்க உதவுவது அவரது மென்திறன்களே ஆகும். அவை இல்லாத நிலையில் அவரிடம் முக்கியமான பொறுப்புகளை ஒப்படைப்பது கடினமானது.

மேலும் பணியிடத்தில் அலுவலகப் பொறுப்புக்களையும் தாண்டி உறவுகளை வளர்த்துக் கொள்ளவும், ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கவும் மென்திறன் அறிவு முக்கியமானதாகும்.

எனவே மென்திறன் என்பது நாம் அனைவரும் வளர்த்துக் கொள்ள வேண்டிய முக்கிமான திறனாகும். உயர்ந்த பதவி வகிக்கவும், வாழ்வில் சிறந்து விளங்கவும் மென்திறன் என்பது மிகமிக முக்கியமான ஒன்றாக உள்ளது.

மென்திறன்களுக்கான எடுத்துக்காட்டுக்கள்

நல்ல கருத்துக்களை வழங்குதல், பிறருக்கு ஒத்துழைப்பு வழங்குதல், நேரத்தை நிர்வகிப்பதற்கான திறன், ஒழுக்கம், தலைமைத்துவம், ஆளுமை, சமூகம் பற்றிய அறிவு, சிறந்த பண்பாட்டு நெறிமுறைகள்,

அனைவரிடமும் சகயமாகப் பழகும் தன்மை, தொழில் சார்ந்த நாகரீகம், ஒப்பந்தம் செய்யும் திறன், ஊக்க சக்தி, சமூக ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடத்தைப் பண்புகள் மற்றும் இடைத்தொடர்புகள் என்பன மென்திறன்களுக்கான சில எடுத்துக்காட்டுக்களாகும்.

மென்திறன்களை வளர்த்துக் கொள்வதற்கான வழிமுறைகள்

மென்திறன்களை வளர்த்துக் கொள்வதற்காக நாம் அதிகளவில் கலந்துரையாடல்களில் பங்குபற்றிக் கொள்ள வேண்டும். அலுவலகச் சந்திப்பு, மேடைப்பேச்சுக்கள், அதிகாரிகளுடனான சந்திப்பு போன்றவற்றில் கலந்து கொள்வதன் மூலமாக பிறரது மென்திறனைப் பார்த்து கற்றுக் கொள்ள முடியும்.

எத்துறையில் நாம் செல்ல வேண்டும் என்பதனைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளோமா அத்துறை பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். பயிற்சிகளை எடுத்துக்கொண்டு தன்னைத் திறன்மிக்கவாராக மாற்றிக் கொள்ள வேண்டும்.

Read more: ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகள்