மருத்துவப் பணி கட்டுரை

Maruthuva Pani Katturai In Tamil

இந்த பதிவில் “மருத்துவப் பணி கட்டுரை” பதிவை காணலாம்.

உலகில் பல்வேறு காலகட்டங்களில் ஏற்பட்ட நோய்த் தொற்று பேரிடர் காலங்களில் மனித இனத்தை பாதுகாத்தது இந்த மருத்துவம் தான்.

மருத்துவப் பணி இல்லையென்றால் உலகில் மனித இனம் என்றோ அழிந்திருக்கும்.

மருத்துவப் பணி கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. மருத்துவப்பணியின் சிறப்பு
  3. மருத்துவத்தின் தோற்றம்
  4. மருத்துவத்தின் வளர்ச்சி
  5. இன்றைய சூழலில் மருத்துவம்
  6. முடிவுரை

முன்னுரை

இன்றைய உலகில் மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளில் ஏதோவொரு வகையில் அறிவியலை பயன்படுத்தியவாறே வாழ்ந்து வருகின்றனர். அவற்றுள் அறிவியலின் உச்சகட்ட வளர்ச்சியால் உருவான, அனைவராலும் போற்றப்படுகின்ற உன்னதமான பணியாக மருத்துவம் விளங்குகின்றது.

எமது உடலில் ஏற்படும் பல்வேறு வகையான குறைபாடுகளிற்கு தீர்வு காணும் முறையாக மருத்துவம் காணப்படுகின்றது. சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை மருத்துவத்தின் தேவையின்றி யாருமே இல்லை.

ஆரம்பகாலத்தில் பெரும்பாலும் நோய்த்தாக்கம் குறைவாகக் காணப்பட்டது. ஆனால் தற்போதைய அதிநவீன உலகில் விரைவான செயற்பாடுகளாலும், முறையற்ற துரித உணவுப்பழக்கத்தாலும் சிறுவயதினிலே நோய்த்தாக்கத்திற்கு ஆளாகின்றார்கள்.

எனவே இன்றைய காலகட்டத்தில் மருத்தவத்திற்கான தேவை அதிகமாக காணப்படுவதோடு, மருத்துவம் இல்லையேல் மனிதன் இல்லை என கூறும் அளவிற்கு இவ்வுலகம் மாற்றமடைந்துள்ளது.

மருத்துவப் பணியின் சிறப்பு

உயிர்காக்கும் உன்னத பணியாகக் கருதப்படுகின்ற மருத்துவப் பணியானது, பல்லாயிரக்கணக்கான உயிர்களின் நிலைத்திருத்தலிற்கு காரணமாய் அமைகின்றது.

உடலிலுள்ள நோய்களை கண்டறிவது மட்டுமின்றி நோய்கள் மனிதரை அண்டாமல் பாதுகாப்பாக இருப்பதற்கும் வழிவகை செய்கின்றது.

மருத்துவப் பணியில் ஈடுபடுபவர்கள் சமூகத்தில் உயர்ந்த இடத்தில் மதிக்கப்படுவதோடு, அவர்கள் கடவுளிற்கு நிகராக போற்றப்படுகின்றனர்.

அதுமட்டுமின்றி மருத்துவத்தை பூரணமாக கற்பதற்கு கடுமையான முயற்சியும், மருத்துவராக பணிபுரிவதற்கு மனப்பூர்வமான அர்ப்பணிப்பும் தேவைப்படுகின்றது. எனவே தான் சேவைகளுள் சிறந்த சேவையாக மருத்துவம் கருதப்படுகின்றது.

மருத்துவத்தின் தோற்றம்

பண்டைய காலத்தில் தொழில்நுட்ப பயன்பாடும், இராசயன மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களின் பாவனையும் குறைவாகக் காணப்பட்டது. இதனால் மனிதர்கள் ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளைப் பெற்றும் வாழ்ந்தார்கள்.

பெரும்பாலும் நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகக் காணப்பட்ட போதும், அவ்வப்போது ஏற்பட்ட நோய்களுக்கு தீர்வாக மருத்துவக் குணமுடைய மூலிகைச் செடிகளை பயன்படுத்தி வந்தனர்.

தமிழர்களின் பாரம்பரிய மருத்துவங்களாக சித்த மருத்துவம், ஆயுள்வேதம் போன்றன காணப்பட்டன. ஆனாலும் நூற்றாண்டுகளிற்கு ஒருமுறை பெருந்தொற்று நோய்கள் உருவாகி பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவுகொண்டன.

அதனை தடுத்து நிறுத்தும் முகமாக பல்வேறு ஆங்கில மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றுக்கு உதாரணமாக 1870இல் நுண்ணுயிரியலின் தந்தை என அழைக்கப்படுகின்ற லூயி பாஸ்டர் நோய் எதிர்ப்பு பக்ரீரியாவைக் கண்டுபிடித்தமையையும்,

அதன் பின் 1928இல் இங்கிலாந்தைச் சேர்ந்து அலெக்சாண்டர் பிளெமிங் பென்சிலினை கண்டுபிடித்தமையையும் குறிப்பிடலாம். இவ்வாறு மருத்துவமானது சிறிது சிறிதாக வளர்ச்சியடைந்து இன்றைய நவீன வடிவத்தை அடைந்துள்ளது.

மருத்துவத்தின் வளர்ச்சி

பண்டைய காலத்தில் இயற்கையோடு இணைந்த மருத்துவ முறைகளையும் தாண்டி அதிநவீன அறிவியலால் உருவான தடுப்பூசிகள், மாத்திரைகள் மட்டுமின்றி, தொழில்நுட்ப வளர்ச்சியில் உருவான கருவிகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சத்திர சிகிச்சை முறைகள் என மருத்துவம் அதன் உயர்நிலையை எட்டியுள்ளது.

மனித உடலின் இயக்கத்திற்கு அவசியமாகவுள்ள மூளை மற்றும் இதயத்தில் ஏற்படுகின்ற பிரச்சனைகள், இரத்த ஓட்டம் மற்றும் நரம்பியல் பிரச்சனைகள் என மனித உடலில் ஏற்படுகின்ற எந்தவொரு நோயையும் சரிப்படுத்தும் வகையில் மருத்துவமானது வளர்ச்சியடைந்துள்ளது.

பல்வேறு அறுவை சிகிச்சை முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதோடு, அறுவைச்சிகிச்சை மருத்துவத்தின் தந்தையாக “அபுல் காசிஸ்” அழைக்கப்படுகின்றார்.

உடலிலுள்ள உறுப்புக்களை பிரிக்காமல் தசைகளினூடே எக்ஸ் கதிர்களை அனுப்பி நோய்களை கண்டறியும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு பல கட்டங்களை கடந்து இன்று மருத்துவம் அதன் உச்சகட்ட வளர்ச்சியை அடைந்துள்ளது.

இன்றைய சூழலில் மருத்துவம்

உலகையே உலுக்கி பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவுகொண்ட கொடிய வைரசான கொரோனா இந்த உலகை ஆட்கொண்டிருக்கும் இன்றைய சூழலில் மருத்துவப்பணியானது மிகப்பெரிய சவாலை எதிர்நோக்கியுள்ளது.

பொதுமக்கள் மட்டுமின்றி தமது உயிரை அர்ப்பணித்து போராடி வருகின்ற பல்லாயிரக்கணக்காண மருத்துவர்களும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ளனர்.

இரவுபகல் பாராது, பசி தூக்கம் மறந்து, தம் குடும்பங்களைப் பிரிந்து சமூகத்திற்காக சேவையாற்ற வேண்டிய கட்டாயம் மருத்துவர்களிற்கு ஏற்ப்பட்டுள்ளது.

மிகவும் இக்கட்டான இக்காலகட்டத்தில் மருத்துவப்பணி என்ற ஒன்று இல்லையேல் மனித இனம் முற்றாக அழிந்துவிடும்.

முடிவுரை

மக்களிற்கு சேவை செய்பவர்களை உயர்வாகக் கருதும் இக்காலகட்டத்தில் தம் உயிரை துச்சமென மதித்து மக்களுக்காக சேவையாற்றும் மருத்துவர்களின் பணியானது மிகவும் போற்றப்பட வேண்டியது.

“நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்” என்ற பழமொழிக்கேற்ப நோயற்று வாழ்வதே ஒரு மனிதன் பெறும் சிறந்த கொடையாகும்.

அதற்கு உறுதுணையாகவுள்ள மருத்துவப்பணியையும், அதில் ஈடுபடுகின்ற வைத்தியர்களையும் போற்றுவோமாக.

You May Also Like :

போதைப்பொருள் பாவனை கட்டுரை

பேரிடர் மேலாண்மை கட்டுரை