உலகளாவிய ரீதியில் இடம்பெறுகின்ற முக்கிய சூழல் பிரச்சனைகளில் ஒன்றாக மண்ணரிப்பு காணப்படுகின்றது.
மனிதனின் துரித செயற்பாடுகள் காரணமாக அண்மைக் காலங்களில் அதிகளவில் மண்ணரிப்பு ஏற்படுகின்றது. அதனால் மனித குலம் உட்பட பல உயிரினங்களும் நேரடி மற்றும் மறைமுகப் பாதிப்புக்களைச் சந்தித்து வருகின்றன.
Table of Contents
மண்ணரிப்பு என்றால் என்ன
மண்ணரிப்பு என்பது நிலத்திலிருந்து மேல் மண் நீரினாலும், காற்றினாலும் அரித்துச் செல்லப்படுவதை குறித்து நிற்கும் செயற்பாடாகும்.
மண்ணரிப்பை ஏற்படுத்தும் காரணிகள்
மண்ணரிப்பு ஏற்படுவதற்கு பல காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. குறிப்பாக மண்ணரிப்பானது இயற்கைக் காரணங்கள் மற்றும் மனிதச் செயற்பாடு காரணமாக நிகழ்கின்றன.
அதிகளவிலான மழைவீழ்ச்சிகள் மண்ணரிப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது.
ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் அதிகளவிலான மழை பொழிகின்ற சந்தர்ப்பத்தில் அதன் பருமன் நிலத்தில் விழும்போது மண்ணானது நீரோடு அடித்து செல்லப்படுகின்றது இதனால் மண்ணரிப்பு ஏற்படுகின்றது.
கடல் அலையின் செயற்பாடுகளும் மண்ணரிப்பிற்கு முக்கியமான இயற்கைக் காரணமாக உள்ளது. கடற்கரையோரத்தில் அலைகளின் தொழிற்பாடு காரணமாக கரையோரத்தில் உள்ள மண் அரித்தல் நிலைக்கு உட்படுகின்றது.
காற்று – மண்ணரிப்பு ஏற்படுவதற்கான மற்றுமோர் இயற்கைக் காரணமாகும். பாறைகள் மற்றும் மண் ஆகியவை பூமியின் மேற்பரப்பில் இருந்து பிரிக்கப்பட்டு வேறு தளத்திற்கு செல்லும் போது இயற்கையாக நிகழும் செயல்முறையாக மண்ணரிப்பு உள்ளது.
இத்தகைய செயல்முறைக்கு முக்கிய காரணமாகக் காற்று விளங்குகின்றது. சகாரா, கோபி, அட்டகாமா, அரிசோனா, பற்றகோனியா ஆகிய பகுதிகளில் இவ்வாறான மண்ணரிப்பு நடைபெறுகின்றது.
மேலும் மண்ணரிப்பு நிகழ்வதில் வெப்பநிலையின் பங்களிப்பும் உள்ளது. தொடர்ச்சியாக பாறைகளில் அதிகப்படியான சூரிய ஒளி படும்போது பாறைகளின் அமைப்பில் மாற்றம் நிகழும்.
ஒரு பிராந்தியத்தில் ஏற்படும் வெப்பநிலையினால் பாறை உடைவதினைத் தெர்மோகிளாஸ்டி என்பர். குறிப்பாக இது பாலைவனங்களில் நிகழ்கின்றது.
பாலைவனங்களில் பகல் நேர வெப்பநிலை இரவு நேர வெப்பநிலையை விட அதிகமாக உள்ளது. இத்தகைய வெப்பநிலை பல ஆண்டுகளாக பாறைகள் மீது படும்போது பாறை உடைகின்றது. இதன் மூலம் மண்ணரிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பாக உள்ளது.
சுரங்கம், விவசாயம், காடழிப்பு, நகரமயமாக்கல் போன்றவை மண்ணரிப்பு நிகழ்வதற்கான காரணிகளின் சில மனித நடவடிக்கைகள் ஆகும். இன்றைய சூழலில் காடழிப்பானது அதிகமாக நிகழ்கின்றது.
காடழிப்பானது பல நோக்கங்களுக்காக நிகழ்வதனைக் காண முடிகின்றது. மேச்சல் நிலங்களை உருவாக்கல், வேளாண்மை, செயற்கை நீர் பாசனம், நகரமயமாக்கல், காட்டு வளங்களை சூறையாடுதல் போன்ற காரணங்களுக்காகக் காடுகள் அழிக்கப்படுவது துரிதமாக்கப்பட்டுள்ளது.
இத்தகைய காடழிப்பை மேற்கொள்ளுவதன் காரணமாக மண்ணினை தாங்கி பிடிக்க கூடிய தன்மை இழக்கப்படுகின்றது. 2008ம் ஆண்டுகளில் அமேசான் காடுகளில் 8% ஆனவை அழிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பிரேசில், ஆர்ஜென்டினா ஆகிய பகுதிகளில் அதிகளவு மண்ணரிப்பு ஏற்படுகின்றது.
மேலும் அதிகரித்த மக்கள் தொகைப் பெருக்கத்தின் காரணமாக இன்று நகரமயமாக்கல் இடம்பெறுகின்றது.
அதுமட்டுமல்லாது உயர் பிரதேசங்களில் கட்டிடங்கள் அமைத்தல் மற்றும் மலைப்பாங்கான இடங்களில் மக்களின் தோட்டக் குடியிருப்புக்கள் அமைத்தல், கேளிக்கை விடுதிகள் அமைத்தல் போன்ற காரணங்களுக்காக மரங்கள் வெட்டப்படுகின்றன. இவைகளும் காடழிப்புக்கு காரணமாகவுள்ளது.
புற்கள் மற்றும் மூடுபயிர்கள் வளர்த்தல், மண்ணின் பாதுகாப்புக்கு அணைகளைக் கட்டுதல், மக்களிடையே மண்ணரிப்புத் தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் காடழிப்பினைக் கட்டுப்படுத்தலாம்.
Read more: சுற்றுப்புறம் என்றால் என்ன