மக்களின் படைப்புக்களைக் கொண்டு மக்களைப் படிக்கும் துறை நாட்டுப்புறவியலாகும்.
நாட்டுப்புற இலக்கியங்கள் நாட்டுப்புற மக்களின் நம்பிக்கைகளையும் நம்பிக்கைக்குரிய செயல்களையும், எண்ணங்களையும் பிரதிபலிக்கும் மண்வாசனை கலந்த மகத்தான மக்கள் இலக்கியம் எனலாம்.
கிராமங்களில் வாழும் மக்களின் கலைகளையும், பண்பாட்டையும், இலக்கியங்களையும் பற்றி அறிந்து கொள்ளும் இயலாக நாட்டுப்புறவியல் காணப்படுகின்றது.
Table of Contents
நாட்டுப்புறவியல் என்றால் என்ன
நாட்டுப்புறவியல் என்பது ‘மக்களுடைய அல்லது நாட்டினுடைய அல்லது ஓர் இனத்தினுடைய கற்றல் மற்றும் அறிவு சிறப்பாகப் பழங்காலத்திலிருந்து வழிவழியாக வழங்கி வருவது’ என்பதாகும்.
மேலும் நாட்டுப்புற வழக்குகள் பற்றி அறிவியல் அடிப்படையில் ஆராயும் இயல் நாட்டுப்புறவியல் ஆகும். நாட்டுப்புறவியல் என்பது நாட்டார் மக்களின் பழக்கவழக்கங்கள், பண்பாடு, நம்பிக்கைகள், இலக்கியங்கள், கதைகள், பழமொழிகள், வாய்மொழி வரலாறு, விடுகதைகள், வாய்மொழி பாடல்கள், கலைகள், சடங்குகள் போன்றவற்றை உள்ளடக்கியது ஆகும்.
நாட்டுப்புறத்து மக்களை அதாவது கிராமத்து மக்களை நாட்டார் என்றும் கூறுவதுண்டு. அறிஞர்கள் ‘நாட்டுப்புறவியல்’ என்ற சொல்லுக்குப் பதில் “நாட்டார் வழக்காறு” என்ற சொல்லையும் பயன்படுத்தியுள்ளனர்.
நாட்டுப்புறவியல் – சொல் அறிமுகம்
நாட்டுப்புற வழக்குகள் பற்றி அறிவியல் அடிப்படையில் ஆராயும் இயல் நாட்டுப்புறவியல் ஆகும். இதனை ஆங்கிலத்தில் பலவாறு அழைக்கின்றனர். அதாவது Traditional creation, Popular antiquities, Popular literature, Common mythology, Reminds என அழைக்கின்றனர்.
இவற்றுள் மிகவும் பொருத்தமானது Popular antiquities ஆகும். இது Folklore என்ற சொல்லுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. Popular antiquities என்பதற்கு மாற்றீடாக Folklore என்பதை 1846 ஆம் ஆண்டு வில்லியம் தாமஸ் என்பவர் அம்புரோஸ் மெர்ட்டன் என்ற இதழில் எழுதினார்.
folk என்பதற்கு மக்கள், நாடு, இனம், விவசாய மக்கள், படிப்பறிவில்லாத நாட்டு மக்கள், பொதுவான தொழில், மொழி, சமயம் முதலியவற்றை பின்பற்றும் குழு, கிராமப்புற படிப்பறிவில்லாத மக்கள் எனப் பொருள்படுகின்றது.
Lore என்பதற்கு கற்றல் அறிவு, பழங்காலத்திலிருந்து வழிவழியாக வழங்கி வருவது, ஒரு பிரிவு மக்களின் உடமை, மரபுச் செய்தி தொகுதி, வழக்காறு எனப் பொருள்படும்.
folklore என்பதை folkloristic என்றும் கூறுவர். folklore என்பதனை பல நாடுகளும் பலவாறாகவும் அழைக்கின்றனர். ஜெர்மனியில் Die folklore என்றும், பிரெஞ்சில் Le folklore என்றும், இத்தாலியில் Il folklore என்றும், ரஷ்யாவில் Folklore என்றும் அழைக்கப்படுகின்றது.
நாட்டுப்புறவியல் பற்றி அறிஞர்களின் கருத்துக்கள்
நாட்டுப்புறவியல் பற்றி பல அறிஞர்கள் பலவாறு வரைவிலக்கணப்படுத்தியுள்ளனர். நாட்டுப்புறவியல் என்பதனை வில்லியம் பாஸ்கர் எனும் மானிடவியல் அறிஞர்
“மானுடவியலின் நாட்டார் வழக்காற்றியல் என்ற தொடர் புராண மரபுக் கதைகள், பழமரபுக் கதைகள், நாட்டார் கதைகள், பழமொழிகள், விடுகதைகள், பாடல்கள் வாய் மொழியாக பயன்படும் சில வடிவங்களை உள்ளடக்கிய பொருளை உணர்த்துகின்றது. நாட்டார் வழக்காறுகள் எல்லாம் வாய்மொழியாக வெளிப்படுத்தப்படுபன. எனினும் வாய்மொழி வழியாக வெளிப்படுத்தப்பவை எல்லாம் நாட்டுப்புற வழக்காறுகள் அல்ல” என்கின்றார்.
ஜோனாஸ் பாலிஸ் எனும் அறிஞர் “நாகரிகம் வாய்ந்த மக்களின் மரபு வழி வந்த படைப்புக்களும், நாகரீகமற்ற பழங்குடி மக்களின் (Primitive) மரபு வழி படைப்புகளும் நாட்டார் வழக்காற்றியல் ஆகும்” என்கின்றார்.
பி எ போக்கின் எனும் அறிஞர் “எழுத்து வழக்கற்ற வாய் மொழி சார்ந்த பண்பாட்டில் எல்லாமே நாட்டார் வழக்கியல்” என்கின்றார்.
ரிச்சர்ட் ஏம் டார்சன் எனும் அறிஞர் “நாட்டார் வழக்காறுகள் மக்களின் வாய்வழியே பல தலைமுறைகள் வாழ்ந்தனவாக இருக்க வேண்டும்” என்கின்றார்.
சங்கர் சென் குப்தா எனும் அறிஞர் “எழுதப்பட்ட இலக்கியம் காலம் காட்டும் கண்ணாடி என்றால், நாட்டுப்புற இலக்கியம் சமுதாயத்தைக் காட்டும் கண்ணாடி நாட்டுப்புற இலக்கியம் மக்களின் அனுபவங்களை மட்டுமன்றி அவர்களின் உணர்வுகளையும் பிரதிபலித்து நிற்கின்றது.” என்கின்றார்.
பிரான்சிஸ் லி என்பவர் “வாய்மொழியாகப் பரப்பப்படும் இலக்கியம் நாட்டுப்புறவியலாகும்” என்கின்றார்.
Read more: திருமண பொருத்தம் எத்தனை இருக்க வேண்டும்