இந்த பதிவில் சிறுவர்களால் அதிகம் விரும்பி கொண்டாடப்படும் “தீபாவளி பண்டிகை பற்றி கட்டுரை” (Deepavali Festival Katturai In Tamil) உள்ளடக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பண்டிகைக்கு பின்னாலும் அது கொண்டாடப்படுவதற்கு ஒவ்வொரு காரணங்கள் இருக்கும். இந்த தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கு பல புராண கதைகளும் வரலாற்று கதைகளும் இருக்கின்றன.
Table of Contents
தீபாவளி பண்டிகை பற்றி கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- தீபாவளி என்பதன் பொருள்
- தோற்றம்
- காலம்
- சிறப்பு
- முடிவுரை
முன்னுரை
“யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற மனிதநேய ஒருமைப்பாட்டை எமது வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழ்வாங்கு வாழ வைப்பவை பண்டிகைகள்.
தனிமனித சமூகத்தின் நல்வாழ்வைக் கருதி நம் முன்னோர்களால் மிகுந்த சிந்தனையுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பல்வேறு பகுதிகளிலும் வாழும் மக்களால் பல்வேறு விதமான பண்டிகைகள் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்து சமயம் தன் பண்பாட்டை ஒழுங்குபடுத்த பல்வேறு முறையியல் தன்மைகளை கொண்டுள்ளது.
அவற்றுள் பண்டிகைகள் முக்கியத்துவம் பெறுகின்றது. அவ்வகையில் தீபாவளி பண்டிகையும் சிறப்புப் பெறுகின்றது.
தீபாவளி என்பதன் பொருள்
தீபம் என்றால் “விளக்கு” “ஆவளி” என்றால் “வரிசை” அதாவது தீபங்களை வரிசையாக ஏற்றி ஒளிமயமான இறைவனை வழிபடும் புண்ணிய தினமே தீபாவளி.
ஒரே விளக்கு ஏனைய விளக்குகளை ஒளி வசீச் செய்யும் அந்த முதல் ஒளியே பரமாத்மா அதனால் ஒளி பெறும் மற்ற விளக்குகள் ஜீவாத்மாக்கள், ஜீவராசிகள் எல்லாவற்றிற்கும் பரம்பொருளே ஆதார ஒளியாகும்.
இந்த உண்மையை உணர்த்தும் வகையில்தான் ஒளிவிளக்கு திருநாளாக தீபாவளி கொண்டாடப்படுகின்றது.
தோற்றம்
தீபாவளி பண்டிகையின் தோற்றம் பற்றி இந்துக்கள் மத்தியில் பல்வேறு ஐதீகங்கள் காணப்படுகின்றன. அவையாவன
- நரகாசுரன் எனும் பழமரபுக் கதையின் அடிப்படையில் தோன்றியது.
- பிதிர்க்கடன் அடிப்படையில் தோன்றியது.
- யமனைப் போற்றும் அடிப்படையில் தோன்றியது.
- பலிச்சக்கரவர்த்தியை போற்றும் வகையில் தோன்றியது.
- ராமன் அயோத்தி நகருக்குத் திரும்பியமையைப் போற்றும் வகையில் தோன்றியது.
இதில் முன்னர் குறிப்பிட்ட நரகாசுரன் எனும் பழமரபுக் கதையின் அடிப்படையில் தோன்றியமையினையே ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.
இதில் மஹாவிஷ்ணு தனது அவதாரங்களில் ஒன்றான வராக அவதாரம் எடுத்தபோது பூமிதேவியை மணந்து பெற்ற பிள்ளையே நரகாசுரன் என்பவனாவான்.
அவன் கடும் தவத்தினால் பல ஆற்றல்களை பெற்றமையினால் அவன் தானே கடவுளிலும் மேலானவன் என்ற மமதை ஏற்பட்டது. இதனால் தேவர்களையும், ரிஷிகளையும் வருத்தினான் நரகாசுரன்.
இவனின் கொடுமை தாங்க முடியாத தேவர்களும், ரிஷிகளும் தம்மை காத்தருளும்படி மஹாவிஷ்ணுவிடம் வேண்டிநின்றார்கள். தேவர்களின் வேண்டுதலுக்கமைய மஹாவிஷ்ணு கண்ணன் அவதாரம் எடுத்தார்.
நரகாசுரன் தன் கடும் தவத்தால் இரவிலோ, பகலிலோ தன்னைக் கொல்ல முடியாத இறவாவரம் வேண்டியிருந்தான்.
பல மாயை விளையாட்டுக்களின் தலைவனான கண்ணன் இரவும் பகலுமற்ற அந்திசாயும் நேரத்தில் சத்தியபாமாவின் உதவியுடன் அவனை சங்காரம் செய்தார்.
இவ் நரகாசுரன் வதம் செய்யப்பட்ட நாளே இருள் நீங்கி ஒளி பெற்ற நாளாக எண்ணி தீபாவளியாக கொண்டாடப்படுகின்றது.
காலம்
ஐப்பசி அமாவாசை முன் தினம் நரக சதுர்த்தசி அன்று கொண்டாடப்படுகின்றது. இந்துகக் ள் மட்டுமன்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர்.
ஐப்பசி மாத அமாவாசை முன் வரும் திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை அதனடுத்த கார்த்திகை சுக்கில பிரதமை இந்த நான்கு நாட்களும் தீபாவளியுடன் சம்பந்தப்பட்ட நாட்களாகும்.
சிறப்பு
தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்லப்படுகின்றது. அன்றைய தினம் அதிகாலையில் எல்லா இடங்களிலும் தண்ணீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும், அரப்பில் சரஸ்வதியும், குங்குமத்தில் கௌரியும், சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுகின்றது.
அன்றைய தினம் எல்லா நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகளிலும், நீர் நிலைகளிலும் “கங்கா தேவி” வியாபித்து நிற்பதாக ஐதீகம் இந்நாளில் எண்ணெய் தேய்த்து நீராடுவோர் கங்கையில் நீராடிய புண்ணியத்தையும் திருமகளின் அருளையும் பெறுவர்.
முடிவுரை
தீபாவளித் திருநாளில் பிரிந்து வாழும் பல குடும்பங்கள் ஒன்று சேர்கின்றன. பகை உணர்வுகளை மறந்து ஒற்றுமையே மேலோங்குகின்றது. வீட்டிலே இரவு ஏற்றும் தீப விளக்குகள் இரவு முழுவதும் அணையாது எரிய விடுவர்.
இதை மாணிக்க தீபம் என அழைப்பர். இவ்வாறு செய்வதன் மூலம் ஸ்ரீ லஷ்மியின் அனுக்கிரகம் கிடைக்கும் என நம்புவதும் இந்து சமய மக்களின் வழக்கமாகும். சமுதாயத்தில் அர்த்தமும் உயிரோட்டமும் உள்ள வாழ்க்கைப்படிமம் என்று கூறலாம்.
இப் பண்டிகை தத்துவம் நிறைந்ததாகவும் ஒழுக்கவியல் கருத்துக்களை முன்னெடுத்துச் செல்பவையாகவும் உள்ளது. இந்நாளில் பகைவர்களும் தம் கோபங்களை மறந்து சகோதரதத்துவத்துடன் வாழ முனைகின்றனர்.
அவ்வகையில் இது வெறும் பண்டிகையாக மட்டுமல்லாது வாழ்வைச் செம்மைப்படுத்தும் ஓர் நிகழ்வாக அமைகின்றது.
You May Also Like :