இந்த பதிவில் “ஜீவானந்தம் வாழ்க்கை வரலாறு” கட்டுரை பதிவை காணலாம்.
பாட்டாளிகளின் குரலாய் ஒலித்த தோழர் ஜீவானந்தம் அவர்களின் தியாகங்கள் என்றும் மக்கள் மத்தியில் நிலைத்திருக்கும்.
Table of Contents
ஜீவானந்தம் வாழ்க்கை வரலாறு
அறிமுகம்
தோழர் ஜீவா என்றழைக்கப்படும் ஜீவானந்தம் அவர்கள் இந்திய விடுதலை உணர்வு நிறைந்த பேச்சால் ஆங்கிலேயரை அதிர வைத்தவர் ஆவார். காந்தியின் கொள்கை⸴ பெரியாரின் களப்பணி போன்றவற்றை பின்பற்றி ராஜாஜி⸴ காமராஜர் வரிசையில் மார்க்சிசவாதி ஜீவானந்தம் சிறப்பு பெறுகின்றார்.
எல்லோரும் சமம்⸴ எல்லோரும் நிகர்⸴ எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் ஆவார். எதற்கும் அஞ்சாத மாமனிதர் அண்ணாவைப் போலவே அந்தக் காலத்து இளைஞர்களைக் கவர்ந்தவர் ஜீவானந்தம் அவர்கள் ஆவார்.
இவருடைய பேச்சால் இளைஞர்களை வசீகரித்து புதியதோர் தலை முறையை உருவாக்கினார். பொதுவுடமை சமுதாயமான அவருடைய கனவை நனவாக்க வேண்டும் என்று தனது வாழ்நாள் முழுவதும் போராடிய அஞ்சாத சிங்கம் ஜீவானந்தம் என்றால் அது மிகையல்ல.
இவர் பெரும் இலக்கியவாதியாகவும்⸴ பத்திரிகையாளராகவும் திகழ்ந்தார். பாரதியின் பாதையைப் பின்பற்றி பாமரர்களை எழுச்சி பெறச் செய்த பல பாடல்களையும் பாடியுள்ளார்.
பெயர் | ப.ஜீவானந்தம் |
இயற்பெயர் | சொரிமுத்து |
பிறந்த திகதி | 1907 ஆகஸ்ட் 21 |
பிறந்த இடம் | பூதப்பாண்டி, கன்னியாகுமரி, தமிழ்நாடு |
தாய் பெயர் | உமையம்மை |
தந்தை பெயர் | பட்டத்தார் பிள்ளை |
இறப்பு | 1963 ஜனவரி 18, (சென்னை, தமிழ்நாடு) |
தொடக்க வாழ்க்கை
ஜீவானந்தம் அவர்கள் 1907 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதி பூதப்பாண்டி என்கின்ற சிற்றூரில் பிறந்தார். இவரது பெற்றோர் பட்டத்தார் பிள்ளை⸴ உமையம்மை ஆவர். இவர் பிறந்ததும் இவரது பாட்டன் பெயரான சொரிமுத்து என்னும் பெயரே வைக்கப்பட்டது.
குடும்பத்தில் நான்காவது பிள்ளையாக பிறந்த இவர் ஒரு நடுத்தர ஆங்கிலப் பள்ளியில் பயின்றார். நாகர்கோவிலில் உள்ள கோட்டாறு உயர்நிலைப் பள்ளியில் தலை சிறந்த மாணவராக விளங்கினார்.
பள்ளி வகுப்பில் எப்போதும் முதலிடம் தான். கணக்கு இவருக்கு மிகவும் பிடித்திருந்தது. படிப்பை போலவே விளையாட்டிலும் ஆர்வமும்⸴ திறமையும் கொண்டிருந்தார். சிறு வயதிலேயே கவிபாடும் திறனை வளர்த்துக் கொண்ட இவர் பிற்காலத்தில் இலக்கியத்திலும்⸴ அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
தனது பத்தாம் வகுப்பிலேயே நாவல் எழுத ஆரம்பித்தார். இவர் பொதுப் பணியில் நாட்டம் கொண்டதால் தனது சொந்த ஊரான பூதப்பாண்டியிலேயே சங்கம் அமைத்து பணிகளைச் செய்து வந்தார்.
தீண்டாமை எதிர்ப்பை வெளிப்படுத்திய இவர் கதர் பிரச்சாரமும் செய்தார். தனது தாயாரின் இறப்பின் போது ஈமைச் சடங்கு செய்வதற்கு கோடித்துணி கதர் துணியில் கட்ட வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார்.
கதர் துணி கிடைக்காத காரணத்தினால் இவரது தம்பியையே இவருக்குப் பதிலாக ஈமைச் சடங்கு செய்தார். தாழ்த்தப்பட்ட சாதியினருடன் பழகுவதை விருப்பமாகக் கொண்டு அவர்களுடன் பழகி வந்ததால் ஊராருக்கு பிடிக்கவில்லை. இதனால் இவர் வீட்டை விட்டு வெளியேறினார்.
தீண்டாமை ஒழிப்புப் போராட்டம்
உலகில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒரு சூரியனாக ஜீவானந்தம் அவர்கள் உதயமானார். தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக பலரும் குரல்கள் கொடுத்துக் கொண்டிருந்தனர். ஜீவானந்தம் அவர்கள் பள்ளியில் படிக்கும் போதே தீண்டாமைக்கு எதிராகப் போராடிய மகத்தான தலைவர் ஆவார்.
வைக்கம் என்ற ஊரில் தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்திலும் கலந்து கொண்டார். பெரியாரோடு இணைந்து வைக்கம் போராட்டம், சுசீந்திரம் தீண்டாமை இயக்கம் ஆகியவற்றில் ஈடுபட்டு தீண்டாமைக்கு எதிராகப் போராடினார்.
எல்லோரும் சமம் என்ற கருத்தை மக்களிடம் எடுத்துச் செல்லவே காந்தி அரங்கத்தை தாமே தொடங்கினார். இது காரைக்குடி பக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சாதிப்பாகுபாடு இல்லாமலும்⸴ ஆண்⸴ பெண் சமமாகவும் நடத்தப்பட்டனர். பல நூல் நிலையங்களும் இவரால் உருவாக்கப்பட்டது.
பாட்டாளிகளின் தோழன்
இவர் அரசியல் மீது ஆர்வம் கொண்டவர் ஆவார். 1955ஆம் ஆண்டு தமிழக கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக் குழு உறுப்பினரானார். அவருடைய வாழ்க்கை நெடுகிலும் போராட்டம் சிறைவாசம் தான்.
அச்சுத் தொழிலாளர், கள்ளிருக்கும் தொழிலாளர்கள் என்று எல்லோருக்காகவும் குரல் கொடுப்பார். எங்கே தொழிலாளர் பிரச்சினை என்றாலும் அங்கே அவரைக் காணலாம். ஓய்வின்றி பயணம் செய்தார். தடியடி பிரயோகத்திற்கும் ஆளானார். இவை எல்லாம் இவருக்கு இயல்பாகி போனது.
இவர் தனது வாழ்நாளில் பத்து ஆண்டுகளை சிறையில் கழித்தார். அங்கும் சிறைக்கைதிகளின் கோரிக்கைகளுக்காக உண்ணாவிரதம் இருந்தார். பி.அன்ட்சி ஆலைத் தொழிலாளர்களுக்காகப் போராட்டம் நடத்திய போது பொலிஸ் அதனைத் தடுக்க முயற்சித்து துப்பாக்கியை உயர்த்தி “சுடுவோம்” என்று எச்சரித்த போது பயமின்றி “சுடு” என்றார்.
இவர் தன்னை ஒரு அரசியல்வாதியாக அடையாளப்படுத்திக் கொள்வதைவிட தொழிலாளர் தலைவராக அடையாளப்படுத்திக் கொள்வதையே விரும்பினார். ரயில்வே அஞ்சலகத் துறைமுகத் தொழிலாளர் சங்கங்களின் வளர்ச்சியில் இவர் பங்கு அளப்பரியதாகும்.
கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவராக விளங்கிய இவர் சீனாவின் இந்திய படையெடுப்பை கடுமையாக எதிர்த்தார்.
“என் வாழ்நாள் முழுவதும் இந்த பாட்டாளி மக்களுக்காக உழைத்தேன். என் இறுதி காலமும் அத்தகைய மன நிலையிலேயே கழிய வேண்டும். அவர்களிடமிருந்து என்னை தனித்துக் காட்டும் எந்த விஷயமும் எனக்கு தேவை இல்லை” என வாழ்ந்தார்.
ஜீவானந்தம் எழுதிய நூல்கள்
- இலக்கியச் சுவை
- கலை இலக்கியத்தின் புதிய பார்வை
- சங்க இலக்கியத்தில் சமுதாயக் காட்சிகள்
- சமதர்மக் கீதங்கள் 1934
- சோவியத் இலக்கியம் பற்றி ஜீவா
- சோஷலிஸ்ட் தத்துவங்கள் தேசத்தின் சொத்து (தொகுப்பு)
- நான் நாத்திகன் ஏன்? – (பகத்சிங் எழுதிய நூலின் மொழிபெயர்ப்பு)
- புதுமைப்பெண்
- பெண்ணுரிமைக் கீதங்கள் (கடலூர்ச் சிறையில் இயற்றியவை) 1932
- மதமும் மனித வாழ்வும் மேடையில் ஜீவா (தொகுப்பு)
- மொழியைப்பற்றி ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு
- ஈரோடுப் பாதை சரியா?
இவரின் படைப்புகள் அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. இவர் சிறந்த தலைவனாகவும் எளிமையாகவும் இறுதிவரை நேர்மையாகவும் தன் பொதுவாழ்வினை அமைத்துக் கொண்டார்.
உடல் நலம் குன்றிய நிலையில் 1963-ம் ஆண்டு ஜனவரி மாதம் 18- ம் நாள் இயற்கை எய்தினார். ஜீவானந்தத்தின் பொன்னுடலுக்கு கட்சி பேதமின்றி தலைவர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.
பின்னாளில் மத்திய அரசு அவர் தபால் தலையை வெளியிட்டு கௌரவம் செய்தது. இவரது நினைவாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தமிழக அரசு மணிமண்டபம் அமைத்துப் பெருமை சேர்த்துள்ளது.
புதுச்சேரியில் இவரது நினைவாக அரசு மேல்நிலைப் பள்ளிக்கு புதுவை அரசு “ஜீவானந்தம்” என பெயரிட்டது. பாட்டாளிகளின் குரலாய் ஒலித்த தோழர் ஜீவாவின் வாழ்வு என்றும் மக்களிடையே சிறந்து விளங்கும் என்பதில் ஐயமில்லை.
You May Also Like :