உலகளவில் செவ்வியல் என்பதற்கு கிளாஸ்சியம் (Classism) என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர். இது கிளாசிக்கஸ் (Classicus) எனும் லத்தீன் சொல்லை மூலச் சொல்லாகக் கொண்டுள்ளது.
Table of Contents
செவ்வியல் என்றால் என்ன
தமிழில் செவ்வியல் என்பதன் மூலச் சொல் “செம்மை” என்பதாகும். செம்மை+இயல்=செவ்வியல் ஆகும்.
செம்மை என்பதற்கு சொற்பம், சொவ்வை, செலவி, நற்சீரடைதல், ஒழுங்குபடுத்துதல், பண்படுத்துதல் என பலவாறு பொருள் கொள்ளலாம்.
மேலும் சமநிலை, நிதானம், முழுமை போன்றவை கொண்ட ஆக்கங்களை செவ்வியல் என்கிறார்கள்.
செவ்வியலுக்கான தன்மைகள்
தொன்மை, பிற மொழித் தாக்கமின்மை, தூய்மை, தனித்தன்மை, இலக்கியவளம், இலக்கணச் சிறப்பு, பொதுமை பண்பு, நடுவுநிலை, பண்பாடு, பட்டறிவு வெளிப்பாடு, உயர் சிந்தனை வெளிப்பாடு, மொழிக் கோட்பாடு போன்ற தகுதிகளே ஒரு மொழி செவ்வியல் மொழி என்பதற்கான சிறந்த அடையாளங்களாக உள்ளன.
செவ்வியல் இலக்கியங்கள்
பழமையும், இலக்கிய இலக்கண பாரம்பரியமும் உள்ளவையே செவ்வியல் இலக்கியங்கள் என அழைக்கப்படுகின்றன.
செவ்வியல் மொழிகளில் தான் செவ்வியல் இலக்கியங்கள் தோன்றும். ஒரு மொழி நிலைத்திருக்க பழமையும், வளமையும் மட்டும் போதாது.
அம்மொழியானது பேச்சு மொழியாகவும், எழுத்து மொழியாகவும், ஆட்சி மொழியாகவும், நீதி மொழியாகவும், பயிற்சி மொழியாகவும் நிலைத்திருக்க வேண்டும்.
ஒரு மொழியானது எழுத்து உருவான பின்னரே முழுமை அடைய முடிகின்றது. அதனைத் தொடர்ந்து அம்மொழி வளர்ந்து செழுமையுற்று செவ்வியல் இலக்கியப் படைப்புகளை படைக்கும் திறனை பெறுகின்றது.
எனவே ஒரு மொழி செவ்வியல் இலக்கியங்களை படைப்பதற்கு எழுத்து வடிவமே இன்றியமையாததாக உள்ளது.
பொருளாதார வளம், வணிகம், தொழில், பண்பாடு, கலை போன்ற பல துறைகளிலும் மிகுந்த வளர்ச்சியை எட்டிய சமுதாயத்தில் இருந்து தான் செவ்வியல் இலக்கியங்கள் தோன்றுகின்றன.
உலகில் தமிழ், சீனம், சமஸ்கிருதம், லத்தீன், ஹிப்ரூ, கிரேக்கம் போன்ற செவ்வியல் மொழிகள் அனைத்துமே எழுத்து வடிவத்தைப் பெற்றதன் பிற்பாடே செவ்வியல் இலக்கியங்களை உருவாக்கிக் கொண்டன.
தமிழ் செவ்வியல் இலக்கியங்கள்
தமிழ்ச் சமூகமானது பல துறைகளிலும் உயர் வளர்ச்சியடைந்த சமூகமாக இருந்துள்ளதன் காரணத்தால் தமிழில் உலகளாவிய உயர் மனித விழுமியங்களைக் கொண்ட செவ்வியல் இலக்கியங்களை படிக்க முடிந்தது.
தமிழ் மொழியானது தனித்தன்மை கொண்டதாகவும், தூய்மை நிலை, செப்பமான ஒழுங்கு போன்றவற்றைக் கொண்டதாலும் “செந்தமிழ்” என்றும் தமிழ் இலக்கியங்களை “செவ்வியல்” என்றும் அழைத்தனர்.
தமிழில் செவ்வியல் தன்மைக்கு சான்றாக சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன என்றால் அது மிகையல்ல. உலக மொழியில் அறிஞர்கள் சங்க இலக்கியங்களை செவ்வியல் இலக்கியங்களாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.
பத்துப்பாட்டும், எட்டுத்தொகையுமாக 18 நூல்களும் சங்க இலக்கியங்கள் என அறியப்படுகின்றன. இவை தமிழர்களின் அக (காதல்) மற்றம் புற (வீரம்) வாழ்வியல் கூறுகளை அறிய உதவுகின்றன.
சங்க காலத்தில் புலவர்கள் மட்டும் பரம்பரையாக பாட்டு பாட வேண்டும் என்று இல்லாமல், அரசர், வணிகர், மருத்துவர், கனியர் போன்ற சமூகத்தின் பல்வேறு அங்கத்தினரும் நல்லிசைப் புலவர்களாக விளங்கினர்.
அது மட்டுமன்றி பெண்பாற் புலவர்களும் தனிச்சிறப்பு பெற்றவர்களாக இருந்தனர். சங்க புலவர்களைச் சான்றோர் எனச் சுட்டுவது தமிழ் மரபாக உள்ளது.
உலகில் மிகப் பழமையான செவ்வியல் மொழி இலக்கியங்களில் தொன்மைக்கும், செறிவிக்கும் சற்றும் குறைவில்லாத வளம்முடையவை சங்க இலக்கியங்களாகும்.
Read more: சங்க இலக்கியத்தின் சிறப்புகள்