சமத்துவம் என்றால் என்ன

இந்த பதிவில் சமத்துவம் என்றால் என்ன என்பது பற்றி விரிவாக காணலாம்.

சமத்துவம் என்றால் என்ன

அனைவருக்கும் பாகுபாடு இன்றிய சமமான வாய்ப்புகளை அளிப்பதே சமத்துவம் ஆகும்.

சமத்துவம் என்பது ‘ஒரு தனிமனிதன் அல்லது ஒரு குழுவினரிடையே வேறுபாடு காட்டி நடத்தப்படாமல் இருத்தல் அல்லது சிறப்பாக பாதுகாக்கப்பட்ட இயல்புகளான இனம், பாலியல் சார்ந்த போக்கு, வயது அடிப்படையில் குறைவாக நடத்தப்படாமல் “அனைவரும் சமம்” என்ற கருப்பொருளின் அடிப்படையில் செயற்படுதல்’ ஆகும்.

சுதந்திரம் மற்றும் சமத்துவம் என்பது மக்களாட்சியின் இரண்டு அடிப்படை கோட்பாடுகள் ஆகும்.

இயற்கை மனிதர்களை நிறம், திறமை, உடல், உயரம், வலிமை ஆகியவற்றில் சமமாக உருவாக்கவில்லை. இச்சமத்துவமின்மையை எம்மால் சரி செய்யவும் இயலாது. ஒரே மாதிரியான இரட்டையர் கூட தமக்குள் காணப்படும் திறமையின் அடிப்படையில் வேறுபடுகின்றனர்.

ஆனால் சாதி, மதம், இனம், மொழி, பொருளாதாரம் ஆகியவற்றின் அடிப்படையில் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட சமத்துவமின்மையை சரி செய்ய இயலும்.

சமத்துவத்தின் வகைகள்

குடிமை சமத்துவம் :

அனைத்து குடிமக்களும் குடியியல் உரிமைகளை பெறுதல் வேண்டும் என்பதே குடிமை சமத்துவம் ஆகும். குடிமக்களிடையே உயர்ந்தோர், தாழ்ந்தோர், ஏழை, பணக்காரன், சாதி மற்றும் சமயக் கொள்கை ஆகியவை காரணமாக பாகுபாடு இருத்தல் கூடாது.

சமத்துவ உரிமைகள் அனைவருக்கும் கிடைக்கச் செய்வதோடு எந்த உரிமையும் எவருக்கும் மறுக்கப்படுதல் கூடாது.

அரசியல் சமத்துவம் :

குடிமக்கள் அதாவது 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் எவ்வித பாகுபாடுமில்லாமல் வாக்குரிமை அளித்தல், பொது அலுவலகத்தில் பங்குக் கொள்ளும் உரிமை, அரசை விமர்சனம் செய்யும் உரிமை என்பன அரசியல் சமத்துவத்தை குறிக்கிறது.

பாலின சமத்துவம் :

மனித இனங்களில் ஆண், பெண் இருபாலரும் தமது தனிப்பட்ட திறனை மேம்படுத்திக் கொள்ளலாம். தங்களது விருப்பங்களை எவ்வித கட்டுப்பாடுமின்றி ஏற்படுத்தியும் கொள்ளலாம். பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்பட வேண்டும்.

ஆண்களுக்கு அடுத்தப்படியாக இரண்டாம் இடத்தில் அவர்களை வைக்காமல் அவர்களது திறமைக்கும், ஆளுமைகளுக்கும் முக்கியத்துவம் அளித்து சமநிலையில் நடத்துதல் ஆகும்.

சட்டத்தின் முன் சமத்துவம்

சட்டத்தின் முன் சமத்துவம் என்பது ஒரு சட்டத்தின் கொள்கையாகும். இது ஒரு சமூகத்தின் அனைத்து குடிமக்களுக்கும் பொதுவான உரிமைகள், கடமைகள் மற்றும் உத்தரவாதங்களை குறிப்பது ஆகும்.

மனித உரிமைகளுக்கான யுனிவர்சல் அமைப்பு “அனைவரும் சட்டத்தின் முன் சமம், வேறுபாடு இல்லாமல், சட்டத்தின் சமமான பாதுகாப்பிற்கான உரிமை உண்டு” என பிரகடனம் கட்டுரை 7 இல் கூறுகிறது.

பல நாடுகளில் சட்டத்திற்கு முன் சமத்துவம் என்ற கொள்கை அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. ஜனநாயக அமைப்பு அதன் குடிமக்களின் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. இது இங்கிலாந்தில் பின்பற்றப்பட்ட மரபில் இருந்து வந்ததாகும்.

சமத்துவமான பாதுகாப்பு சட்டம்

அனைவருக்கும் சமத்துவமான பாதுகாப்புச் சட்டம் என்பது அமெரிக்க அரசியல் அமைப்பிலிருந்து பெறப்பட்டதாகும்.

சட்டத்தின் வாயிலாக ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமைகள் மற்றும் பொறுப்புகளுக்கு ஏற்ப சூழ்நிலையின் அடிப்படையில் சமமாக நடத்தப்படுவர்.

சமநிலையில் உள்ளவர்களுக்கு சட்டம் பாதுகாப்பை வழங்கும். எந்தப் பாகுபாடும் இல்லாமல் ஒன்றாக கருதப்பட வேண்டும் என்பதை உள்ளடக்கியது.

சமத்துவமின்மையின் விளைவுகள்

  • பொருளாதார வீழ்ச்சி.
  • வேலைவாய்ப்பு இன்மை.
  • திறமையான தொழிலாளர்கள் விரயமாக்கப்படல்.
  • சரியான முறையில் அனைத்து மாணவர்களுக்கும் கல்வியை பெற இயலாமை.
  • இனரீதியான முரண்பாடுகள் ஏற்படல்.
  • சமூக அபிவிருத்தி தடைப்படல்.

சமத்துவத்தை மேம்படுத்தும் வழிகள்

  • அனைவரையும் சமமாகவும், நியாயமாகவும் நடத்துதல்.
  • அனைவரையும் உள்ளடக்கிய ஒரு பண்பாட்டினை உருவாக்குதல்.
  • முழு ஆற்றலையும் மேம்படுத்த ஊக்குவித்தல்.
  • சமமான கல்வி.
  • சமமான சேவைகளும், வாய்ப்புகளும்.
  • சட்டம் மற்றும் கொள்கைகளை வகுத்தல்.
You May Also Like:
பணவீக்கம் என்றால் என்ன
ஊடகம் என்றால் என்ன