சனி பகவான் வழிபடும் முறை

சனி பகவானை வழிபடும் முறை

சனி பகவானை போல நல்லது செய்பவர் யாரும் இல்லை. இருப்பினும் பலரும் சனி பகவானை கண்டு அச்சம் கொள்கின்றனர். நவக் கிரகங்களில் மிகவும் முக்கியமான கிரகமாக சனீஸ்வரர் உள்ளார்.

சனிபகவானின் பலன்கள் நீங்கள் செய்யும் நன்மை, தீமைக்கேற்ப அமையும். சனி பகவானை நேருக்கு நேர் நின்று வணங்காமல் பக்கவாட்டில் நின்றவாறு வணங்க வேண்டும். சனியை “சாய்வாய் நின்று வழிபடு” என்று ஒரு பழமொழியும் உண்டு.

நல்லது நினைப்பவர்களுக்கு சனீஸ்வரர் எப்போதும் தீங்கு செய்யமாட்டார். தீங்கு செய்தவர்களுக்கு தண்டனை கொடுக்காமலும் விடமாட்டார்.

சனிபகவானால் ஏற்படும் தாக்கம் குறைய வேண்டுமாயின் சிவபெருமானை வழிபட வேண்டும். எனவே சிவபெருமானுக்கு திங்கள் கிழமைகளில் பாலபிஷேகம் மற்றும் வில்வ இலையில் அர்ச்சனை செய்தால் சனீஸ்வரனின் தண்டனையிலிருந்து விடுபடலாம்.

தோஷம் நீங்குவதற்கு தேங்காய் ஒன்றை பகவானின் முன்னிலையில் உடைத்து அதில் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். பின் எள்ளை ஒரு துணியில் கட்டி அதை நல்லெண்ணெயில் நினைத்து தீபம் ஏற்றி வழிபட வேண்டும்

இதை சனிக்கிழமை தோறும் செய்து வர வேண்டும். இவ் வழிபாட்டை திருநள்ளாறு சென்று நள தீர்த்தத்தில் நீராடி செய்வது மிகச் சிறந்த பலனை தரும். திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரரையும் அம்பாளையும் சனி பகவானையும் வழிபடுவது சனி தோஷம் தீர்க்கும்.

“நீலாம்பரோ, நீலவபு: கிரீடி
க்ருத்ரஸ்தித: சத்ராஸக ரோ தநுஷ்மான்
சதுர்புஜ: ஸுர்யஸு: ப்ரசாந்த:
ஸதாஸ்து மஹ்யம் வரத: ப்ரஸன்ன:”

இந்த மந்திரத்தை கூறி கொண்டே 9 வாரம் சனிபகவானை வழிபட்டால் நல்ல பயன் கிடைக்கும்.

சனி பகவான் ஸ்தோத்திரப் பிரியர். சனி தோஷம் நீங்க சனிக்கிழமைகளில் விரதமிருந்து சனிபகவானுக்கு இரண்டு அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி தீபமிட்டு எள்ளன்னம் நைவேத்தியம் படைத்து மனமுருக சனிகவசம் மற்றும் சனிஸ்வர அஷ்டோத்ரம் பாராயணம் செய்திடலாம்.

முடிந்தவரை ஏழைகளுக்கு உணவளித்து உதவுதல் வேண்டும். காக்கைக்கு தினந்தோறும் அன்னம் இடுவதும், உளுந்து தானியத்தை தானம் செய்வதும், கோவில்களில் நவக்கிரகங்களை 9 முறை வலம் வந்து வணங்குவதும், நீலக்கல் வைத்த மோதிரத்தை அணிந்து கொள்வதும் சனிக்கிழமை அதிகாலை வேளைகளில் சுந்தர காண்டம் பாராயணம் செய்வதும் ஏழரைச் சனியின் தோஷம் குறைக்கும்.

சனி தோஷத்தினால் துன்பங்கள் அதிகமாகும் நேரங்களில் கறுப்பு தோல் அகற்றாத முழு உழுந்து தானியத்தை 108 என்ற எண்ணிக்கையில் இரவு தலையணை அடியில் வைத்து உறங்கி பின்னர் காலையில் எழுந்து நீராடி சனிபகவானை 108 முறை வலம் வந்து ஒவ்வொரு தடவை வலம் முடிந்ததும் ஒரு உழுந்தை தரையில் இட வேண்டும். உழுந்து தானியம் தானம் செய்வது சனிபகவானின் நல்லாசி கிடைத்திட அருளும்.

சனிபகவானுக்கு உகந்த பூ சங்கு பூ ஆகும். சனி திசை 19 வருடங்கள் நடைபெறுவதனால் அதில் சனி புத்தி 3 வருடம் 3 மாதங்கள் நடைபெறும்.

You May Also Like :
வைகாசி மாத சிறப்புகள்
இறந்தவர்களை வழிபடும் முறை