இந்த பதிவில் “பாவேந்தர் பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு” கட்டுரை பதிவை காணலாம்.
இவர் கொண்ட தமிழ் பற்றின் காரணமாக இன்றும் தமிழ் மக்கள் மனதில் அழியாத இடம் பிடித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.
Table of Contents
பாவேந்தர் பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு
அறிமுகம்
இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்து தமிழ் தழைக்கவும்⸴ தமிழின் பெருமை நிலைக்கவும்⸴ தமிழ் நாடு செழிக்கவும் பாடல்கள் பாடியவர் பாவேந்தர் பாரதிதாசன் ஆவார். தமிழ் மீது பற்று கொண்ட இவர் தமிழ் வளர்த்த மாமனிதர் பாவேந்தர் என்று சிறப்பிக்கப்படும் புரட்சிக் கவிஞர் ஆவார்.
புரட்சிக்கவி என்று பெரும்பாலும் அறியப்படும் இவர் தமிழுக்குத் தொண்டாற்றிய கவிஞர் என்றால் அது மிகையாகாது. இவர் ஒரு கவிஞர் மட்டுமல்ல அரசியல்வாதி⸴ திரைக்கதாசிரியர்⸴ எழுத்தாளர் ஆவார்.
இவர் பாரதி மீது கொண்ட ஈடுபாட்டாலும்⸴ அவர் மீது கொண்ட அன்பினாலும் தனது பெயரினை பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டார்.
இயற்பெயர்: | சுப்புரத்தினம் (கனகசுப்புரத்தினம்) |
புனைப்பெயர்: | பாரதிதாசன் |
பிறப்பு: | ஏப்ரல் 29, 1891 |
பிறப்பிடம்: | புதுவை |
பெற்றோர்: | கனகசபை முதலியார் – இலக்குமி அம்மாள் |
துணைவி: | பழநி அம்மையார் |
இறப்பு: | ஏப்ரல் 21, 1964 |
பணி: | தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி |
நாட்டுரிமை: | இந்தியன் |
ஆரம்ப வாழ்க்கையும் கல்வியும்
பாரதிதாசன் அவர்கள் புதுவையில் ஒரு மிகப் பெரிய செல்வந்தரும் முதலியாருமான கனக சபைக்கும்⸴ இலக்குமி அம்மாளுக்கும் மகனாக 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி பிறந்தார்.
இவரது இயற்பெயர் சுப்புரத்தினம் ஆகும். இவர் தந்தையின் மீது கொண்ட அன்பினால் தந்தையின் பெயரின் முதற் பாதியைத் தன்னுடைய பெயரில் இணைத்து கனகசுப்புரத்தினம் என்று அழைத்துக் கொண்டார்.
“திருப்பொழிச்சாமி” என்பவரிடம் ஆரம்ப கல்வியினை பயின்றார். மகாவித்துவான் பெரியசாமி புலவர் என்பாரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களை கற்று தேர்ந்தார். ஆரம்பக் கல்வியை பிரெஞ்சுப் பள்ளியில் தொடர்ந்தாலும் தமிழ் மீது இவருக்கு இருந்த பற்றின் காரணமாக தமிழை முறையாகக் கற்றுக் கொண்டார்.
தமிழ் மொழியில் இளங்கலைப் பட்டத்தை பயின்று பல்கலைக்கழகத்தில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். புலமை மிக்க பாரதிதாசன் அவர்கள் 1919ல் காரைக்காலைச் சேர்ந்த அரசினர் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.
பாரதிதாசன் அவர்கள் தமிழாசிரியராகப் பதவியேற்ற அடுத்த ஆண்டிலேயே அதாவது 1920 ஆம் ஆண்டு பழநி அம்மையார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத் தம்பதியினருக்கு இவர்களின் திருமண வாழ்க்கையில் சரசுவதி, கண்ணப்பன், வசந்தா, தண்டபாணி, இரமணி, சிவசுப்ரமணியன், மன்னர் மன்னன் ஆகிய குழந்தைகள் உள்ளனர்.
பாரதிதாசனின் தமிழ்ப் பற்று
பாரதிதாசன் கவிதைகள் தமிழ், தமிழர், தமிழ்நாடு எனும் முப்பரிமாணங்களில் முத்தமிழை முழுமையாக வலம் வந்திருக்கின்றன. உலகக் கவிஞர்களிலேயே ஒரு மொழியை உயிருக்குச் சமமாக நினைத்துப் பாடியவர் பாரதிதாசன் ஒருவராகத்தான் இருக்க முடியும். இது தமிழ் மீது அவர் கொண்டுள்ள அளவுகடந்த காதலையே வெளிப்படுத்தி நிற்கின்றது.
அன்னைத் தமிழ் மீது அளவில்லாப் பற்றுடையவர் பாரதிதாசனார். இதனாலேயே “தமிழே அவர்; அவரே தமிழ்”. “நல்லுயிர், உடம்பு, செந்தமிழ் மூன்றும் நான் நான் நான்” எனக் கூறினார் பாவலன். தமிழை வானாகவும் தன்னை வெண்ணிலாவாகவும்⸴ மற்றும் தமிழை வாளாகவும் தன்னை வீரனாகவும் மற்றும் தமிழை இசையாகவும்⸴ தன்னை மகரயாழாகவும் மற்றும் தமிழை ஒளியாகவும்⸴ தன்னைக் கண்ணாகவும் குறிப்பிடுகிறார்.
“கனிச்சுருள், கரும்புச்சாறு, வெல்லப்பாகு, இளநீர், பசும்பால் ஆகியவற்றின் சுவையை விடச் சுவைமிக்கது தமிழ்” என்று தமிழின் பெருமையை உலகறியச் செய்கிறார்.
“தமிழுக்கு அமுதென்று பெயர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்று தமிழ்பற்றை உலகிற்கு பறைசாற்றுகின்றார். தமிழ்பற்று இல்லாதவருக்கும் தமிழ்பற்று உருவாகும் வகையில் இவரது படைப்புகள் அமைந்திருக்கின்றன.
தமிழனின் வீரத்தை பறை சாற்ற தமிழ்ப் பெண்களை வீராங்கனைகளாகவும் வீரப் புதல்வரைப் பெற்றவர்களாகவும் நினைவூட்டி, தமிழர்களின் வீரத்திற்குச் சான்றாகக் காணப்படுகின்ற புறநானூற்று வீரக்கதைகளை நினைவுபடுத்திடவும் வீரத்தாய் எனும் பெயரில் காவியம் படைத்தளித்துள்ளார் பாவேந்தர் பாரதிதாசன்.
தமிழனின் வீரப் பரம்பரையத்தை நினைவுபடுத்த விரும்பியே வீரத்தாய் காவியத்தில் தன் மகனைத் தாயே வீரனாக்குகின்ற வகையில் படைக்கிறார். சுதர்மனை நோக்கி வீசிய சேனாபதியின் வாளினைத் தனது வாளினால் துண்டித்துவிடும் வீர மகளாக விசயராணி காணப்படுகிறாள்.
“பறித்தெடுத்த தாமரைப் பூம் பார்வையிலே வீரம் பெருக் கெடுக்க நிற்கின்றாய் பிள்ளையே” எனும் வரிகளைப் பிறநாட்டு வேந்தர்கள் மூலம் சுதர்மனின் வீரத்தைப் பேச வைக்கிறார் கவிஞர் பாரதிதாசன்.
பாரதிதாசன் படைப்புகள்
பாரதிதாசன் தன் எண்ணங்களைக் கவிதை, இசைப்பாடல், நாடகம், சிறுகதை, புதினம், கட்டுரை ஆகிய வடிவங்களில் வெளியிட்டார். இதுதவிர திருக்குறளின் பெருமையை விளக்கிப் பாரதிதாசன் செப்பலோசையில் அமையப்பெற்ற 5 கட்டளைக் கலித்துறைப் பாடல்களைப் பாடியுள்ளார்.
அவற்றுள் சில:
- அம்மைச்சி (நாடகம்)
- உயிரின் இயற்கை, மன்றம் வெளியீடு (1948)
- உரிமைக் கொண்டாட்டமா?, குயில் (1948)
- எது பழிப்பு, குயில் (1948)
- கடவுளைக் கண்டீர்!, குயில் (1948)⸴
- பிசிராந்தையார், (நாடகம்) பாரி நிலையம் (1967)
- பெண்கள் விடுதலை
- விடுதலை வேட்கை
- வீட்டுக் கோழியும் – காட்டுக் கோழியும், குயில் புதுவை (1959)
- ரஸ்புடீன் (நாடகம்)
- கழைக்கூத்தியின் காதல் (நாடகம்)⸴ கலை மன்றம் (1955)
- கற்புக் காப்பியம், குயில் (1960)⸴
- சத்திமுத்தப் புலவர் (நாடகம்)
- நீலவண்ணன் புறப்பாடு
- அகத்தியன்விட்ட புதுக்கரடி – காவியம் (1948)
விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்
- 1946 – அவரது “அமைதி-ஊமை” என்ற நாடகத்திற்காக அவர் ‘தங்கக் கிளி பரிசு’ வென்றார்.
- 1970 – அவரது மரணத்திற்குப் பின், அவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்காக அவருக்கு ‘சாஹித்ய அகாடமி விருது’ வழங்கப்பட்டது.
- 2001 – அக்டோபர் மாதம் 9ஆம் தேதி சென்னை தபால் துறை மூலமாக ஒரு நினைவு அஞ்சல் தலை அவரது பெயரில் வெளியிடப்பட்டது.
- அறிஞர் அண்ணா, “புரட்சிக்கவிˮ என்ற பட்டமும் பாரதிதாசன் அவர்களுக்கு பெரியார், “புரட்சி கவிஞர்ˮ என்ற பட்டமும், வழங்கினர்.
- தமிழ்நாடு மாநில அரசாங்கம், அவரது நினைவாக ஆண்டுதோறும் ஒரு தமிழ் கவிஞருக்கு “பாரதிதாசன் விருதினைˮ வழங்கி வருகிறது.
- ‘பாரதிதாசன் பல்கலைக்கழகம்’ என்ற பெயரில் ஒரு மாநில பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளியில் நிறுவப்பட்டது.
எழுத்தாளர், திரைப்படக் கதாசிரியர், கவிஞர், அரசியல்வாதி என்று பன்முகம் கொண்ட பாரதிதாசன் அவர்கள், ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி, 1964 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார். பாரதிக்குப் பின் தலைசிறந்த கவிஞராக தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் பாவேந்தர் பாரதிதாசன் என்றால் அதுமிகையாகாது.
You May Also Like :