தமிழ் மொழி பல்லாயிரம் ஆண்டுக் காலப் பழமையான இலக்கிய இலக்கணங்களைக் கொண்ட மொழியாகத் திகழ்கின்றது. இதனால் தமிழ்மொழி நீண்டகால இலக்கிய வரலாற்றினைக் கொண்டிருக்கிறது. இதில் முதன்மையான இலக்கிய வரலாற்றுக் காலமாக சங்க காலம் விளங்குகின்றது. சங்க இலக்கியத்தின் சிறப்புகள் பற்றி இந்த பதிவில் காண்போம்.
சங்க இலக்கியத்தின் சிறப்புகள்
#1. சங்க இலக்கியங்களை எழுதிய புலவர்கள்.
சங்க இலக்கியம் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வரை 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது. இப்புலவர்களுள் பல தரப்பட்ட தொழில் நிலையுள்ளோரும் பெண்களும், நாடாளும் மன்னரும் உண்டு.
#2. சங்க இலக்கிய பாடல்கள் அகம் (உள்), புறம் (வெளி) என்ற இரண்டு பகுதிகளைக் கொண்டது.
ஒருவரின் காதல், இல்லறம் சார்ந்த தகவல்களைக் கூறுவதே அகத்திணை ஆகும். புறம் என்பது, ஒருவர் செய்த கொடை, அவரின் வீர செயல்கள் ஆகியவற்றைக் குறிக்கும்.
#3. தமிழ் மொழிக்கு செம்மொழி என்ற தகுதியை பெற்றுத்தந்திருக்கின்றன.
செம்மொழித் தகுதியானது ஒரு மொழியின் இலக்கியப்பழமை அடிப்படையிலும் பிற பண்புத் தகுதிகளின் அடிப்படையிலும் செய்யப்படும் வகைப்பாடு ஆகும். உலகில் பல ஆயிரம் மொழிகள் இருக்கின்றன. ஆனால் செம்மொழித் தகுதியினை குறிப்பிட்ட சில மொழிகளே கொண்டுள்ளன அதில் தமிழ் மொழியும் ஒன்றாகும்.
#4. தமிழர்களுக்கு பெருமை சேர்த்த இலக்கியங்கள் சங்க கால இலக்கியங்கள் ஆகும்.
தமிழர்களுக்கு என வரலாறு, இலக்கியம், பெருமை உண்டு என உலக அரங்கில் தன்னை நிலை நிறுத்திக்கொண்டதற்கு ஆதாரமாக இருந்த நூல் சங்க இலக்கியங்களாகும்.
#5. சங்க இலக்கியத்தில் தமிழ் கலாச்சாரத்தின் அடித்தளத்தை காணலாம்.
பண்டைத்தமிழரது காதல், போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம் போன்ற நடப்புகளை சங்க இலக்கியப் பாடல்கள் அறியத்தருகின்றன.
#6. தமிழர் வாழ்வியல் முறைகளை பறைசாற்றும் இலக்கியங்களாக சங்க கால இலக்கியங்கள் விளங்குகின்றன.
தொழிலை தரத்தோடு செய்ய வேண்டும், ஏமாற்றக்கூடாது என்றும், உறவினர்களுக்கு உதவ வேண்டும் எனவும், வசதி உள்ளவர்கள் பிறருக்கு தானம் செய்ய வேண்டும் எனவும் அறம் சார்ந்த வாழ்க்கை முறைகளை வெளிப்படுத்தி நிற்கின்றது.
#7. இயற்கை இலக்கியங்களாக திகழ்கின்றன.
பறவைகள், விலங்குகள், பூச்சிகள், நீரில் வாழும் உயிரினங்கள், மரங்கள், செடிகள், கொடிகள், மலைகள், ஆறுகள் யாவற்றையும் இவ்விலக்கிய பாடல்களில் காணலாம்.
#8. சங்ககால இலக்கிய மொழிகள் மிகப் பழமையானவை.
சங்ககால இலக்கிய மொழிகள் வாசிப்பதற்கு தனியாகப் பயிற்சி எடுத்துக்கொள்ளத்தான் வேண்டும். அது மொழியின் பழைய சொற்களஞ்சியத்தை, பழைய இலக்கணத்தை, பழைய சொற்கூட்டு முறையை அறிந்து கொள்வதாகவே இருக்க முடியும்.
#9. நாட்டின் வளர்ச்சிக்குக் காரணமான வணிக மேலாண்மை குறித்த சிந்தனைகளை கலை இலக்கியங்கள் வெளிப்படுத்துகின்றன.
சங்ககாலத்தில் உள்ளூர் அளவில் பண்டமாற்றுமுறை வணிகமே பெரும்பான்மையாக நடைபெற்று வந்தது என்பதனை சங்ககாலப் பாடல்கள் மூலம் அறியலாம். தமிழர்கள் அயல்நாட்டினரோடு கொண்டிருந்த தொடர்பை பட்டினப்பாலை என்னும் பத்துப்பாட்டு இலக்கிய பாடல்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
#10. சங்க காலப் புலவர்களின் தனித்திறனை அறியச் சங்க இலக்கியம் உதவுகிறது.
சங்ககாலப் புலவர்களின் பாடல் திறமைகளையும், அவர்களது ஆற்றல்கள் பற்றியும் சங்க கால இலக்கியங்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது.
You May Also Like : |
---|
பெண்களின் சிறப்பு கட்டுரை |
பத்துப்பாட்டு நூல்கள் |