Table of Contents
அறிமுகம்
மனிதன் சமூகத்தின் ஒரு அங்கம் எனவே மனிதன் பேசும் மொழி, அணியும் ஆடை, உண்ணும் உணவு, வாழும் முறை, செய்யும் பணி, எண்ணங்கள் ஆகியவை அவன் சார்ந்த சமூகத்தின் பண்பாட்டை வெளிப்படுத்துவதாக காணப்படுகின்றன. ஒவ்வொரு மனித சமூகத்திற்கும் ஒரு பண்பாடு உண்டு.
பண்பாடு என்றால் என்ன
பண்பாடு என்பதன் பொருள் பண்படுத்துவது என்று அர்த்தமாகிறது. சீர்படுத்துவது திருத்தமாய் இருப்பது என்றும் கூறலாம்.
பண்பாடு என்பது விழுமிய பண்புகளால் நிரம்பப் பெற்று குடும்பத்தாருடனும், உலகத்தாருடனும் பொருந்தி அன்புற்று வாழும் மனப்பக்குவத்தை குறிக்கின்றது.
மேலும் பண்பாடு என்பது, பொதுவாக மனித செயற்பாட்டுக் கோலங்களையும், அத்தகைய செயற்பாடுகளுக்குச் சிறப்புத் தன்மைகளையும், முக்கியத்துவத்தையும் கொடுக்கும் குறியீட்டு அமைப்புக்களையும் குறிக்கின்றது.
பண்பாடு என்ற பொருளில் சால்பு, சான்றாண்மை, குணநலம் முதலிய பல சொற்கள் இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. உலக நடைமுறைக்கு ஏற்றாற்போல் ஒத்து நடப்பதே பண்பாடு என்று சங்கப் புலவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழ் இலக்கியங்கள் கூறும் பண்பாடு
கலித்தொகையில் “பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்” என இடம்பெறும் பகுதியில் பண்பாட்டினைப் புரிந்து கொள்ள முடிகின்றது. மனிதர்களின் ஐம்புலன்களையும் மனதையும் சீலம், நெறி, ஒழுக்கம் முதலிய உணர்வுகளால் உழுது பண்படுத்தி நல்வாழ்க்கைக்கு உரியதாக செய்யும் முயற்சியைப் பண்பாடு எனலாம்.
திருக்குறளிலும் பண்பாடு பற்றிய கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. உலகப் பொதுமறையாம் திருக்குறளின் பண்பாட்டின் பெட்டகமாக விளங்குகின்றது எனலாம். பெருமை என்ற அதிகாரத்தில்
“பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து”
“அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான் குற்றமே கூறி விடும்”
என்று பணிவுடமையையும், பிறர் குற்றம் காணாமலும் சிறந்த பண்பாடாக குறிப்பிடப்பட்டுள்ளன.
சான்றாண்மை என்ற அதிகாரம் முழுமையும் மாந்தரின் பண்பாட்டை விழித்துரைப்பது அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை என்ற ஐந்தும் பொருந்தியவரே சான்றோர்! அவர்களே பண்பாட்டாளர் எனப்படுகின்றனர். பண்புடைமை என்ற அதிகாரம் முழுமையும் பண்பாட்டின் விளக்கமாகவே உள்ளன.
மேலும் ஒருவனுக்கு அறிவுடமை தேவையானது தான் எனினும் பண்பாடு அமையவில்லை என்றால் அறிவினால் பயனில்லை. அறிவை விட பண்பாட்டிற்கு திருவள்ளுவர் முதன்மை தந்து உள்ளமையை இதன் மூலம் அறியலாம்.
படிக்காத பாமரர்கள் கூட பண்பாடு படைத்தவர்களாக விளங்குகின்றனர். பண்பாடு இல்லாத வறிய அறிவினரை மரம் என்று வள்ளுவர் எடுத்துரைக்கின்றார்.
“அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண் பில்லா தவர்”
மக்களாக இருந்தும் மக்களுக்கு உரிய பண்புகளை பெறாதவர்களை உயர்திணையா கருதாமல் அஃதிணையாகவே தொல்காப்பியரும் கருதினார். பண்பாடு படைத்த மாந்தரையே மக்கட் பண்புடையார் என்று மதித்துள்ளார்.
மனப்பக்குவம் பல நிலைகளில் பண்பாடாக வெளிப்படுகின்றது. பொறுமை, சால்பு, விட்டுக் கொடுத்தல், புறங்கூறாமை, தற்சார்பு, பெருமிதம் கொள்ளாமை என்ற பல வடிவங்களில் ஒருவரின் பண்பாடு புலப்படுகின்றது. இத்தகைய பண்பாட்டு வாய்ந்த நல்லோர் நட்பினையே நாலடியார் பரிந்துரைக்கின்றது.
தமிழர் பண்பாடு
தமிழர்கள் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே பண்பாட்டிலும், நாகரிகத்திலும் உலகிலுள்ள மற்ற இனத்தவர்களையும் விட முழு வளர்ச்சி அடைந்தனர் என்பதை பல சான்றுகள் விளக்குகின்றன.
மொழிக்கு இலக்கணம் வகுத்த தமிழர்கள் மனித வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்து வாழ்ந்தவர்கள் ஆவர்.
தமிழ் மொழி தோன்றிய காலம் முதலே மக்களின் நாகரிகம் பண்பாடு, பழக்கவழக்கம், வாழ்வியல் முறை, அரசு, ஆட்சி முறை, போர், வீரம், காதல் போன்றவை வெளிப்படுத்தி நிற்கின்றது.
You May Also Like : |
---|
சமூகம் என்றால் என்ன |
கலாச்சாரம் என்றால் என்ன |