மானிடரிடையே பல உறவுகள் காணப்பட்டாலும் நட்பு என்ற உறவுக்கு வேறு எந்த உறவும் இணையாகாது. நட்பைப் போல சிறந்த அமுதம் வேறெதுவும் இல்லை.
அதனாலேயே திருவள்ளுவர் இவ்வாறு கூறுகின்றார்.
“செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.”
அதாவது, நட்பைப் போல் ஒருவன் செய்து கொள்வதற்கு அருமையான செயல் எதுவுமே இல்லை எனவும் நட்பைப் போலச் செயல்களுக்கு அருமையான பாதுகாப்பும் எதுவுமில்லை எனவும் கூறுகின்றார்.
சங்ககாலம் தொடக்கம் இன்று வரை ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் தோழி என்ற பாத்திரம் முக்கிய பாத்திரமாக திகழ்கின்றது. அவ்வகையில் சங்ககால தோழியின் வகிபங்கை பார்க்கும் வேளையில் தோழியானவள் சங்ககால தலைவன் தலைவியின் காதலுக்கு தூது செல்லும் கதாபாத்திரமாக காணப்படுகின்றார்.
தலைவி தலைவனின் காதல் வெற்றி அடையும் வரை தோழி என்ற பாத்திரம் துணையாக காணப்பட்டது.
இதற்கு ஆதாரமாக தலைவி மீது காதல் கொண்ட தலைவன் தலைவிக்கு தன் மீது காதல் உள்ளதா என்பதை அறிந்துகொள்ள தளிராடையை தோழியிடம் கொடுத்து அதனை தலைவி அணிகிறாளா இல்லையா என்பதை தோழி மூலமே அறிந்து கொள்வான். இவ்வாறு அவர்களின் காதலின் ஆணிவேர் தோழி ஆவாள்.
மேலும் தலைவிக்கு ஏற்படும் உணர்வுகளை எல்லாம் தலைவியானவள் தோழியிடமே கூறுகின்றாள் எனவே அவ்விடம் தோழியானவள் தலைவியின் உறுதுணையாக அமைகின்றாள். இவ்வாறு சங்க காலத்தில் தோழி என்ற பாத்திரம் இன்றியமையாததாகக் காணப்பட்டது.
தற்காலத்தில் முன்பு போல் சமூக பழக்கவழக்கங்கள் இல்லாவிடினும் தோழி என்ற கதாபாத்திரம் இன்றும் கூட முக்கியமாக காணப்படுகின்றது.
சங்ககால தோழியின் முக்கியம் கருதியே தற்கால திருமண வைபவங்களில் கணவனின் தமக்கையை மணப்பெண்ணின் தோழியாக அமர வைத்து அழகு பார்க்கப்படுகின்றது.
பகவான் கிருஷ்ணர் மகா பாரதத்தில் திரௌபதையை தோழி என அதாவது “சகியே” என அழைத்தார். இதன் மூலம் தோழி என்ற உறவின் சிறப்பு புலப்படுகின்றது.
தோழி வேறு சொல்
- சகி
- சேடி
- பாங்கி
- நண்பி
- மித்திரை
Read more: அன்பு பற்றிய கட்டுரை