தீண்டாமை ஒழிப்பு பற்றிய கட்டுரை

Theendamai Olippu Katturai

இந்த பதிவில் “தீண்டாமை ஒழிப்பு பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

காலம் காலமாக இருந்து வரும் இந்த தீண்டாமை, சாதிய கொடுமைகள் என்பவற்றுக்கு எதிராக எமது முன்னோர்கள் போராடியிருக்கிறார்கள். இன்றும் இது தொடர்வது வேதனைக்குரியதாகும்.

தீண்டாமை ஒழிப்பு பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. தீண்டாமை எனும் கொடுமை
  3. இந்தியாவின் சாபம்
  4. முன்னோர்களின் கருத்து
  5. அம்பேத்கரின் பங்கு
  6. முடிவுரை

முன்னுரை

“சாதிகள் இல்லையடி பாப்பா குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம். நீதி உயர்ந்த மதி கல்வி அன்பு நிறைய உடையோர் மேலோர்” என்று பாடுகிறார் மகாகவி பாரதியார். அதாவது மனிதர்களில் உயர்வானவர்கள் எனப்படுபவர்கள் நீதியும் அறிவும் நிறைய அன்பும் உடையவர்கள் தான் உயர்ந்தவர்கள் என்று பாடியிருக்கிறார்.

ஆனால் அன்று தொட்டு இன்று வரை எமது நாடு தீண்டாமை என்ற அடக்கு முறையினால் சக மனிதர்களையே கொடுமைப்படுத்தும் மிருகங்களாக வாழ்வதனை என்னவென்று சொல்வது? இக்கட்டுரையில் தீண்டாமை ஒழிப்பு பற்றி நோக்குவோம்.

தீண்டாமை எனும் கொடுமை

மத நம்பிக்கைகள் எனும் பெயரினால் உருவான முட்டாள்தனமான சில கொள்கைகளினால் எமது சமூகத்தில் உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற சாதிய வேற்றுமைகளில் துவங்கி மனிதர்களை இழிவாக நடாத்துவதும்

அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அந்தஸ்த்து, மரியாதை, உரிமைகளை பறிப்பதும் அவர்களை சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைப்பது போன்ற கொடூரமான மனநோய் இந்த சமூகத்தில் உள்ள மனிதர்களிடம் காணப்பட்டது.

இதன் விளைவால் அப்பாவி மக்கள் மிகவும் மோசமாக அடிமைகள் போல தீண்ட தகாதவர்களாக நடாத்தப்பட்டமை ஒரு மோசமான வரலாறாகும்.

இந்தியாவின் சாபம்

மதங்களை மையமாக கொண்ட அரசியல், சாதிகளை முதன்மைப்படுத்தும் சமூகம் இவை தான் இந்தியாவை வளர்ச்சி அடைய விடாமல் தடுக்கும் கொடிய நோய்கள். ஏனைய நாடுகள் இவற்றில் இருந்து விடுபட்டு பல வழிகளில் முன்னேறி சென்று விட்டன.

ஆனால் இன்றும் கூட இந்தியாவில் தீண்டாமை, மத கலவரங்கள், சாதி கொலைகள் போன்றன நிகழ்வது இந்தியாவின் சாபம் என்றே கூறலாம். இதனை ஒழிக்க பலர் போராடினாலும் இதனை மாற்ற முடியாமல் இருப்பது வேதனை தரும் விடயமாக இருக்கின்றது.

முன்னோர்களின் கருத்து

காலம் காலமாக இருந்து வரும் இந்த தீண்டாமை, சாதிய கொடுமைகள் என்பவற்றுக்கு எதிராக எமது முன்னோர்கள் போராடியிருக்கிறார்கள் இந்த சமூகத்துக்கு நல்வழி காட்டியிருக்கிறார்கள்.

அந்த வகையில் ஒளவையார் “சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையில் இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தார்” என்று பாடுகின்றார். நல் எண்ணங்களோடு அடுத்தவர்க்கு கொடுத்து உதவுபவர்கள் தான் உயர்ந்தவர்கள் என்பது இதன் கருத்தாகும்.

உயர்ந்த அறிவுடைய பெரியோர்கள் ஒருபோதும் தீண்டாமையை ஆதரிக்க மாட்டார்கள். பாரதியார், பாரதிதாசன் போன்ற புரட்சி மிகு கவிஞர்கள் தீண்டாமை ஒழிய வேண்டும் என கனவு கண்டவர்கள்.

தமிழக அரசியலில் வந்த “காமராஜர், பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார்” போன்ற தலைவர்கள் தீண்டாமை ஒழிய வேண்டும் என உழைத்தவர்களாவர்.

அம்பேத்கரின் பங்கு

தீண்டாமை, பெண்ணடிமைத்தனம், மூடநம்பிக்கைகள் என்ற சாக்கடையில் வீழ்ந்து கிடந்த இந்திய அரசியலை ஒரு புது வழியில் கொண்டு வந்து நிறுத்திய பெருமை அண்ணல் அம்பேத்கரை சாரும்.

தாழ்ந்த குலத்தில் பிறந்த மக்கள் படும் இன்னல்களை நன்குணர்ந்து விடாமுயற்சியால் மிக்சிறந்த மாமேதையாக உருவாகி உலகில் சிறந்த கல்வியாளராக வந்து இந்திய அரசியலமைப்பு சட்டத்தினை மாற்றி எழுதினார். இதன் மூலம் இந்தியாவின் தலை எழுத்தை மாற்றி அமைத்தார்.

இதனை தொடர்ந்து தான் இந்த தவறான வழக்கங்கள் படிப்படியாக குறைய துவங்கியது. கல்வி, நீதி, அரசியல் போன்ற அனைத்து துறைகளிலும் அனைத்து பிரஜைகளும் பங்குபற்ற முடியும் என்ற சமத்துவ சட்டங்களை உருவாக்கிய பெருமை இவரை சாரும்.

முடிவுரை

“யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்று பாடிய கணியன் பூங்குன்றனாரது வரிகள் உலகத்து மக்களையே ஒன்றிணைத்தது.

ஆனால் சொந்த தேசத்து மக்கள் விதி விலக்காக இருப்பது ஆச்சரியம் தான் பிரிவினைகளும் அடக்குமுறைகளும் நமது தேசத்தை ஒருபோதும் வளர செய்யாது அதுபோல எம்மையும் நிம்மதியாக வாழ விடாது.

நாம் அனைவரும் இந்தியர்கள் ஒரு தாயின் பிள்ளைகள் போல ஒற்றுமையாகவும் மகிழ்வாகவும் வாழ்வது தான் அனைவருக்கும் பயனுடையதாக இருக்கும்.

You May Also Like :

தேசிய ஒருமைப்பாடு பற்றிய கட்டுரை

கருணை பற்றிய கட்டுரை