இலக்கிய உலகில் காப்பியம் ஒரு தனி இடத்தைப் பெற்றுள்ளது. காப்பியத்தை செவ்விலக்கிய வகையில் (Classical Literature) அடக்குவர். தமிழ் இலக்கிய வரலாற்றில் வீரயுகத்தை அடுத்துத்தான் காப்பியக் காலம் தொடங்குகிறது.
தமிழ் இலக்கிய வரலாற்றில் காப்பிய எழுச்சிக்கு வித்திட்டவர் இளங்கோவடிகள் ஆவார். இளங்கோவடிகளால் எழுதப்பட்ட சிலப்பதிகாரமே முதல் காப்பியம் என்று அறியப்படுகின்றது.
எனினும் சிலப்பதிகாரத்திற்கு முன்பே காப்பியங்கள் எழுந்திருக்கலாம் என அறிஞர்கள் தெரிவிக்கின்ற போதிலும் அவையாவும் ஊகங்களாகவே உள்ளன.
Table of Contents
காப்பியம் என்றால் என்ன
காப்பியம் என்பது ஓர் இலக்கிய வகை ஆகும். காப்பியம் என்ற இலக்கியமே வரலாற்றுக்கு முற்பட்ட சமூக – சமய – அரசியல் வரலாற்றையோ அல்லது வரலாறாக நம்பப்படுவதையோ பாடுபொருளாகக் கொண்டுள்ளது.
வடமொழியில் ‘காவ்யா’ என்றால் பாட்டு என்பது பொருள். கவியால் படைக்கப்படுவன அனைத்தும் காவியமே. எனவே காவ்யா – காவியம் – காப்பியம் என ஆகியது என்பர்.
தமிழில் காப்பு + இயம் = காப்பியம் என்ற சேர்க்கையால் கருதப்படுகின்றன. உதாரணம் தொல்காப்பியம்.
காப்பியங்கள் வகைகள்
காப்பிய வகைகள் எத்தனை அவை யாவை?
பொதுவாக தமிழில் காப்பியங்கள் ஐம்பெரும் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்ற இரண்டு வகைகளுக்குள் அடங்குகின்றன.
கொங்குவேளிர் இயற்றிய பெருங்கதை என்ற ஒரு மிகச் சிறந்த காப்பியமும் உள்ளது. பெரியபுராணம், கம்பராமாயணம், வில்லிபாரதம் என்பனவும் தமிழில் தோன்றிய மிகச் சிறந்த காப்பியப் படைப்புகளேயாகும்.
இருபதாம் நூற்றாண்டிலும் காப்பியம் என்ற பெயரில் பல படைப்புகள் வெளி வந்துள்ளன. இவை இதிகாசம், புராணம், பெருங்காப்பியம், சிறுகாப்பியம், மறைந்துபோன தமிழ்க் காப்பியம், மொழிபெயர்ப்புக் காப்பியம், இசுலாமிய சமயக் காப்பியம், கிறித்தவ சமயக் காப்பியம், தற்காலக் காப்பியம் மற்றும் கதைப் பாடல்கள் என்றவாறு வகைப்படுத்தப்படுகின்றன.
வடமொழி மரபை ஒட்டி எழுந்த தண்டியலங்காரமே முதல் முதலில் காப்பிய இலக்கணம் பற்றி விரிவாகப் பேசுகின்றது. தொடர்ந்து பன்னிரு பாட்டியல், நவநீதப் பாட்டியல், மாறன் அலங்காரம் முதலான பாட்டியல் நூல்கள் இவ்விலக்கணம் பற்றிப் பேசுகின்றன.
ஐம்பெருங்காப்பியங்கள்
பெருங்காப்பியம் தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனைப் பற்றிய கதையாக அமைய வேண்டும் என்று தண்டியலங்காரம் கூறுகிறது. அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நாற்பொருளையும் தன்கண் கொண்டு விளங்க வேண்டும் என்பது இலக்கண நூலார் அனைவரதும் கருத்தாகும்.
பெருங்காப் பியமே காப்பியம் என்றாங்கு
இரண்டாய் இயலும் பொருள்தொடர் நிலையே (தண்டியலங்காரம்-7)
தமிழில் ஐம்பெருங்காப்பியங்கள் என்பன
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை
- சீவக சிந்தாமணி
- வளையாபதி
- குண்டலகேசி
இவற்றுள் சிலப்பதிகாரம் மணிமேகலை இரண்டையும் இரட்டைக் காப்பியங்கள் என்பர்.
ஐஞ்சிறு காப்பியங்கள்
பெருங்காப்பியம் தரும் நாற்பொருளில் சில குறைந்து இயல்வது சிறு காப்பியம் என்பர். அதாவது அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய உறுதிப்பொருள்கள் நான்கினுள் ஒன்றோ இரண்டோ குறைந்து வரும் காப்பியம் சிறுகாப்பியம் எனப்படும்.
அறமுதல் நான்கினும் குறைபாடு உடையது
காப்பியம் என்று கருதப் படுமே (தண்டியலங்காரம்-10)
இங்கு அடைமொழி இன்றிக் காப்பியம் என்று சுட்டப் பெறுவதைச் சிறுகாப்பியம் என அடைமொழி கொடுத்துச் சுட்டுவதும் உண்டு.
- யசோதரகாவியம்
- உதயணகுமார காவியம்
- நாககுமார காவியம்
- நீலகேசி
- சூளாமணி
ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்களுள் அடங்கும்.
You May Also Like : |
---|
ஐஞ்சிறு காப்பியங்கள் யாவை |
ஐம்பெரும் காப்பியங்கள் யாவை |