காந்தியின் அகிம்சை கட்டுரை

Gandhi Ahimsa Essay In Tamil

இந்த பதிவில் இந்தியாவின் தேசப்பிதா “காந்தியின் அகிம்சை கட்டுரை” பதிவை காணலாம்.

தீண்டாமை, மனித உரிமை மீறல் என பலவற்றிற்கு எதிராகவும் மகாத்மா காந்தி குரல் கொடுத்தார்.

காந்தியின் அகிம்சை கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. அகிம்சை
  3. காந்தியின் போதனைகள்
  4. பணிகள்
  5. முடிவுரை

முன்னுரை

குஜராத்தில் பிறந்து குவலயம் போற்றும் வகையில் தாய்நாட்டின் விடுதலைக்கு சத்தியத்தின் வழியில் புதுப்பாதை வகுத்துத் தந்த தேசத்தந்தை மகாத்மா காந்தி ஆவார்.

மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் மாதம் இரண்டாம் திகதி காந்தி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. மகாத்மா என்று அன்போடு அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தினார்.

இதன் காரணமாக “விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை” என்றும் அழைக்கப்படுகிறார். இத்தகைய பெருமை வாய்ந்த மகாத்மா காந்தியின் அகிம்சைவழி பற்றி நோக்குவோம்.

அகிம்சை

மகாத்மா காந்தியின் அடையாளமே அகிம்சை தான். நம்மை யார் அடித்தாலும் பதிலுக்கு அகிம்சையை பதிலாக கொடுப்போம் என்றார். அந்த அகிம்சையும் அந்த அகிம்சை வழி போராட்டமும் தான் நாட்டையே அடிமைத்தளத்திலிருந்து விடுவித்தது.

“கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது” என நாமக்கல் கவிஞர் எழுதிய புகழ் பெற்ற இவ்வரிகள் உரைப்பது அகிம்சையின் மறு உருவமான காந்தியின் உன்னதம் ஆகும்.

ஆயுதங்கள் பல ஏந்தி அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்ட ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராட காந்தி காட்டிய வழி சத்தியம். அந்த வகையில் வன்முறைக்கும் அடக்குமுறைக்கும் எதிராக அகிம்சை எனும் ஆயுதத்தை கையில் எடுத்தார்.

நமது நாட்டில் கொண்டாடப்படும் எண்ணற்ற தேசிய விழாக்களில் அகிம்சை தினமும் ஒன்று. சர்வதேச அகிம்சை தினமாக அக்டோபர்-2 கொண்டாடப்படுகின்றது.

காந்தியின் போதனைகள்

எந்த விசயமாக இருந்தாலும் அதிலிருக்கும் கருத்தை முதலில் முழுவதும் அறிந்து கொள்ள வேண்டும். காந்தியடிகள் கூறியது போல “கண்ணால் காண்பது பொய், காதால் கேட்பது பொய், தீர விசாரித்த பிறகே முடிவு எடுங்கள்”.

எப்போதும் உண்மையே பேசுங்கள். வாய்மையே எப்போதும் வெல்லும் என்கிறார் காந்தி.

இந்திய நோட்டுக்களில் இன்றும் புன்னகைத்துக் கொண்டிருக்கும் மகாத்மா காந்தியின் கொள்கைகளை மீண்டும் முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் மக்கள் அனைவருக்கும் உண்டு என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

பணிகள்

உண்ணாமல் இருந்து உணர்வுகளை புரிய வைத்த உத்தமர். மனித சமுதாயம் அதுவரை கண்டிராத வழியின் மூலம் தாயகம் உய்வுற வழி செய்த மகாத்மா தென்ஆபிரிக்காவிலும் நிறவெறி ஒழிய குரல் கொடுத்தார்.

தன்நலம் கருதாது பிறர்நலம் காத்தவர். இவரது சத்யாகிரகம் என்ற அறவழிப் போராட்டம் இந்திய விடுதலைக்கு வழி வகுத்தது மட்டுமல்லாமல் வேறு சில நாடுகளின் விடுதலை இயக்கங்களுக்கும் அது ஒரு வழிகாட்டியாக அமைந்தது.

சாதி, மத மொழிகளால் பிளவு பட்டு நிற்கும் தேசத்திற்கு அனைவரையும் அரவணைக்கும் ஒரு தலைவன் கிடைப்பது அரிது. அப்படியான மாமனிதனாக கிடைத்தவர் தான் காந்தி.

வன்முறைக்கும் அடக்குமுறைக்கும் எதிராக அகிம்சை எனும் ஆயுதத்தை எடுத்த காந்தி புகழையும் விமர்சனத்தையும் ஒருங்கு சேர மேற்கொண்டார். தீண்டாமை, மனித உரிமை மீறல் என பலவற்றிற்கு எதிராகவும் மகாத்மா காந்தி குரல் கொடுத்தார்.

பாலின பேதமுமின்றி அனைவரையும் சமமாக பாவிப்பது அவரது செயல்களில் முதன்மையானது. அவரது இலட்சிய போராட்டங்களில் பெண்களின் பங்கு அளப்பரியது.

பெண்களை தனது போராட்டங்களில் இணைத்துக் கொண்ட காந்தி மௌனப் போராட்டம், பட்டினி போராட்டம் உள்ளிட்ட பெண்களின் அகிம்சை போராட்டங்களை நாடு தழுவிய தேசத்தின் போராட்டமாக மாற்றினார். அதில் வெற்றியும் கண்டார்.

ஒருபுறம் ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆங்கிலேயர்கள் பிடியில் இருந்து மீட்க வேண்டும். இந்தியாவின் சுதந்திர போராட்ட முகமாக பார்க்கப்பட்டவர் காந்தி. அவரை சுற்றியே இந்திய விடுதலை இருந்தது.

அதேபோல தான் தீண்டாமை, சமூக சமத்துவதுக்கான அவரது குரலும் விடுதலையுடன் சேர்த்து தீண்டாமைக்கு எதிராக பல போராட்டங்களை அவர் முன்னெடுத்தார். இந்து மதம் வாழ்க்கை அமைப்பாக இருக்க வேண்டும் அதற்குள் இருக்கும் தீண்டாமை களையப்பட வேண்டும் என்றார் காந்தி.

எத்தனையோ போராட்டங்களைக் கடந்து அறவழியில் போர் செய்து அடிமைகளாக இருந்த மக்களுக்கு சுதந்திரம் கிடைக்க போராடியவர். இதனால் மக்கள் அவரை பாசத்தோடு “தேசப்பிதா” என்றழைக்கின்றனர்.

முடிவுரை

காந்தியடிகளின் அறப்போராட்டங்களுக்குக் கிடைத்த வெற்றி தான் இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரம். வன்முறை எந்த பிரச்சினைக்கும் தீர்வல்ல.

ஆனால் “அகிம்சையை பின்பற்றினால் மலையையும் மடுவாக்கும் சக்தி அதற்குண்டு”. எந்த விசயமும் அகிம்சை முறையில் கையாண்டால் வெற்றி நிச்சயம்.

அகிம்சை வழியைப் பின்பற்றி நாமும் சண்டையில்லாமல் ஒற்றுமையோடு வாழ்வோம் என்று உறுதி கொள்வோம்.

You May Also Like :
காந்தியின் கொள்கைகள் கட்டுரை
மகாத்மா காந்தி பற்றிய கட்டுரை