கணினியின் சுயசரிதை

kaniniyin suyasarithai katturai

இந்த பதிவில் “கணினியின் சுயசரிதை” என்ற தலைப்பில் இரண்டு (02) பதிவுகளை காணலாம்.

அத்தியாவசியமான கருவிகளில் ஒன்றாக கணினி விளங்குகின்றது. மனிதர்களிற்கு கணினி வழங்கும் பயன்கள் அளவிட முடியாது.

கணினியின் சுயசரிதை – 1

மனிதர்களின் வாழ்க்கையை இலகுபடுத்த பல்வேறு கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை மனிதர்களின் வேலையை இலகுபடுத்துவது மட்டுமின்றி, நேரத்தையும் மிச்சப்படுத்தி தருகின்றன.

அவற்றில் மிகமுக்கியமானவனாக கருதப்படும், இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்புக்களில் ஒன்றான நான் ஒரு கணினியாவேன். பரந்து விரிந்த இந்த உலகம் சுருங்கி ஒரு கிராமமாக ஆகிவிட்டதென கூறுவர்.

இதற்கு காரணம் என்னுடைய அதீத வளர்சியே ஆகும். வணிகம், போக்குவரத்து, வைத்தியம், கல்வி என நான் பயன்படாத துறைகளே இல்லை எனலாம்.

இத்தனை சிறப்புக்களை கொண்ட நான், கி.பி 1833ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த “சார்லஸ் பபேஜ்” என்பவரால் உருவாக்கப்பட்டேன். ஆரம்பத்தில் கணக்கிடல், மற்றம் கணிதச் செயற்பாட்டிற்கு தேவையான கட்டளைகளை வழங்குவதற்கு மட்டுமே பயன்பட்டேன்.

பின்பு அதிகரித்த தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பல்வேறு கருமங்களை செய்யக் கூடியவாக நான் உருவமைக்கப்பட்டேன். இன்று கையடக்க கணினி, மடிக்கணினி என பல்வேறு வகைகளில் காணப்படுகின்றேன்.

வன்பொருள், மென்பொருள் என இருபெரும் பகுதிகளில் உள்ளடக்கபட்ட பல பாகங்களைக் கொண்டவனாக நான் காணப்படுகின்றேன்.

மனித உடலில் காணப்படும் குறைபாடுகளை கண்டறிந்து தக்க சிகிச்சை அளிக்க உதவுவதோடு, மாணவர்கள் கல்வியில் உயரிய சாதனை புரியவும் உதவுவேன்.

இணையத்தை பயன்படுத்தக் கூடிய வசதி காணப்படுவதனால் மனிதர்களிற்கு சிறந்த பொழுதுபோக்கை அளிப்பவனாக நான் விளங்குகின்றேன். வானியல் மற்றும் புவியியலில் என்னுடைய பங்களிப்பு அளப்பரியது.

நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்றை அனர்த்தங்கள் ஏற்படும் போது அவற்றை உடனுக்குடன் அறியத்தந்து பல்லாயிரக் கணக்கான உயிர்களை காப்பாற்றும் மகத்தான பணியைச் செய்கின்றேன்.

கணினிஇல்லையேல் இந்த உலகம் இல்லை எனக் கூறும் அளவிற்கு இந்த உலகத்தையே உள்ளங்கையில் கொண்டுவந்து மக்களிற்கு அவசியமானவாக விளங்குகின்றேன்.

கணினியின் சுயசரிதை – 2

இன்றைய உலகில் அனைவராலும் பயன்படுத்தப்படும் அத்தியாவசியமான கருவிகளில் ஒன்றாக கணினி விளங்குகின்றது. மனிதர்களிற்கு கணினி வழங்கும் பயன்கள் அளவிட முடியாது.

அத்தகைய சிறப்புக்களை கொண்ட நான் என் வாழ்நாள் கதையை கூறப்போகின்றேன். நான் யப்பான் நாட்டிலுள்ள ஒரு மிகப்பெரிய தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டேன்.

வெவ்வேறு பாகங்களாக உருவாக்கப்பட்ட நான், இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பின்னர், அவற்றை பொருத்தி என்னை உருவாக்கினர்.

திரையகம், விசைப்பலகை, சுட்டி மற்றும் பல்வேறு மென்பொருட்களைக் கொண்ட இயக்கமுறைமை ஆகியவற்றை கொண்டு காணப்பட்டேன்.

விற்பனை நோக்கத்திற்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்த என்னை, பாடசாலை ஒன்று மாணவர்களது தேவைக்காக கொள்வனவு செய்தது. அப்பாடசாலையின் கணினி அறையில் வைக்கப்பட்டிருந்த என்னை மாணவர்கள் ஆர்வத்துடன் பயன்படுத்தத் தொடங்கினர்.

விளையாட்டுக்கள், நிறந்தீட்டுதல் போன்றவற்றிற்காக சிறுவர்கள் என்னை அதிகம் பயன்படுத்தினர். போட்டி போட்டவாறு என்னை பயன்படுத்துவதற்கு அவர்கள் காட்டிய ஆர்வத்தைப் பார்க்கும் போது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது.

வயதில் கூடிய மாணவர்கள் தம்முடைய கற்றல் செயற்பாடுகளிற்கு தேவைப்படுகின்ற விடயங்களை தேடி அறிவதற்கு இணையத்தை பயன்படுத்துவதற்கு என்னை அதிகம் பயன்படுத்தினர்.

மேலும் பாடசாலையின் தரவுகளை சேமித்து வைக்கவும், கணக்கு வழக்குகளை சரிபாக்கவும் என்னை அதிகம் பயன்படுத்தினர்

இவ்வாறு வருடக்கணக்காக மற்றவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டிருந்த நான், நாட்கள் செல்ல செல்ல என்னுடைய பாகங்கள் பழுதடையத் தொடங்கின.

இதனால் ஒரு நாள் என்னுடைய இயக்கம் முற்றாக நின்று போனது. பயன்படுத்த முடியாத நிலைமையில் இருந்த என்னுடைய பாகங்கள் சிலவற்றை எடுத்துக் கொண்டு, என்னை குப்பைக் கூடைக்குள் எறிந்து விட்டனர்.

You May Also Like :
எங்கள் ஊர் கட்டுரை
எனக்கு சிறகு இருந்தால் கட்டுரை