இந்து சமயத்தில் மும்மூர்த்திகளில் ஒருவரான பெருமாளை வணங்கி வழிபடும் விரதங்களில் முதன்மையானது ஏகாதசி விரதம் ஆகும்.
எத்தனை விரதங்கள் இருந்தாலும், அத்தனை விரதங்களும் ஏகாதசி விரதத்துக்கு நிகராகாது. மார்கழியின் ஏகாதசி வைகுண்ட ஏகாதசி என்று போற்றப்படுவது போல ஒவ்வொரு மாதமும் வருகிற ஏகாதசியும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
Table of Contents
ஏகாதசி என்றால் என்ன
ஏகாதசி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்து காலக் கணிப்பு முறையில் 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிப்பது ஆகும். அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் பதினோராவது திதி ஏகாதசி என்கின்றனர்.
ஏகாதச எனும் வடமொழிச் சொல்லுக்கு 11 எனப் பொருள். காலக்கணிப்பில் 15 நாட்களைக் கொண்ட தொகுதியில் பதினோராவது நாளாக வருவதால் இந்த நாள் ஏகாதசி என்ற பெயரால் அழைக்கப்படுகின்றது.
அமாவாசையை அடுத்துவரும் ஏகாதசியைச் சுக்கில பட்ச ஏகாதசி என்றும், பூரணையை அடுத்த ஏகாதசியைக் கிருஷ்ண பட்ச ஏகாதசி என்றும் அழைக்கின்றனர்.
ஏகாதசி தோன்றிய புராண வரலாறு
முரன் என்னும் அரக்கன் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் மானிடர்களுக்கும் மிகுந்த தொல்லை அளித்து வந்தான். இதனால் அவனை அழித்து தங்களைக் காக்கும்படி ஈசனிடம் முறையிட்டனர்.
சிவபெருமான் அவர்களை மகாவிஷ்ணுவிடம் சரணடையக் கூறினார். அதன்படி அனைவரும் மகாவிஷ்ணுவைச் சரணடைந்தனர். அவர்களைக் காக்கவென அசுரனுடன் மகாவிஷ்ணு போர் புரிந்தார்.
போர் 1000 ஆண்டுகள் கடுமையாக நீடித்தது. அதன் பின்பு மிகவும் களைப்படைந்தவராய் மகாவிஷ்ணு பத்ரிகாஸ்ரமத்திலுள்ள ஒரு குகையில் படுத்து ஓய்வெடுத்தார்.
அவ்வேளையைச் சாதகமாகப் பயன்படுத்த எண்ணிய முரன் பகவானைக் கொல்லத் துணிந்தான். அப்போது அவருடைய திவ்ய சரீரத்திலிருந்து சக்தி பெண் வடிவில் வெளிப்பட்டது. அதிலிருந்து வெளிப்பட்ட ஓங்காரமே அசுரனை எரித்துச் சாம்பலாக்கியது.
விழித்தெழுந்து நடந்ததைக் கண்ட நாராயணன் அந்த சக்திக்கு “ஏகாதசி” என்று பெயரிட்டார்.
“உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் சகல நன்மைகளையும் தருவேன்” என வரமளித்து சக்தியைத் தன்னுள் மீண்டும் ஏற்றுக் கொண்டார்.
ஏகாதசி விரத பலன்கள்
ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிக்க விரும்புபவர்கள் ஏகாதசிக்கு முதல் நாளான தசமி அன்று ஒரு வேளை உணவு மட்டும் உண்ண வேண்டும்.
அடுத்த நாள் ஏகாதசி அன்று முழு நாளும் விரதமிருந்து விஷ்ணுவை நினைத்து தியானிக்க வேண்டும். இவ்வாறு விரதமிருந்தால் பல பலன்களைப் பெற முடியும்.
ஏகாதசி நாளில் இருந்து எவருக்கேனும் உணவு வழங்குவது மிகுந்த புண்ணியத்தைத் தரக்கூடியது. நோயற்ற வாழ்க்கை, குறைவற்ற செல்வம், அன்பான பிள்ளைகள் மற்றும் நீடித்த புகழ் அனைத்தையும் இறைவன் அருள்புரிவார் என்பது ஐதீகம்.
ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்தவர்களது கர்ம வினைகளின் கடுமை குறையும் என்று புராணங்களில் சொல்லப்படுகின்றது. பகைவர்கள் அனைவரும் நண்பர்கள் ஆவார்கள்.
இந்த ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பவர்கள் அரசர்கள் செய்யும் அஸ்வமேத யாகம் செய்த பலனை பெறலாம் என்று புராணங்கள் கூறுகின்றன.
ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிப்பதால் மனித மனத்தின் மும்மலங்களான கோபம் குரோதம் மாச்சர்யங்கள் விலகி எண்ணங்கள் தூய்மை அடையும்.
நன்மைகள் கோடி வழங்கும் ஏகாதசி விரதத்தை அனைவரும் முழு மனதுடனும், தூய்மையாகவும் கடைப்பிடித்தால் பெருமாளின் அருளைப் பெற்று ஏற்றம் காண முடியும்.
Read more: அக்னி நட்சத்திரத்தில் செய்ய கூடாதவை