இந்த பதிவில் “எனக்கு சிறகு இருந்தால் கட்டுரை” என்ற தலைப்பில் இரண்டு (02) பதிவுகளை காணலாம். ஒவ்வொன்றும் 150 சொற்களை கொண்டமைந்துள்ளன.
எனக்கு சிறகிருந்தால் ஏனைய பறவைகள் போல விவசாய நிலங்களிற்கு தீங்கு விளைவிக்காமல், வயல்களையும் தோட்டங்களையும் சேதப்படுத்தாமல் வாழ்வேன்.
Table of Contents
எனக்கு சிறகு இருந்தால் கட்டுரை – 1
கற்பனைகள் நிறைந்த வாழ்க்கை ஒருவித மகிழ்வை தேடித்தரும். வானத்தில் பறவைகளை காணும் போதெல்லாம் பறவைகள் போன்று வானத்தில் சிறகடித்துப் பறக்க வேண்டும் என்ற ஆவல் எனக்குள் எழுவதுண்டு.
பட்சிகள் போல சிறகடித்து கண்டம் விட்டு கண்டம் தாண்டி உலகை சுற்றி வர ஆசை கொள்வேன். எனக்கு சிறசிருந்தால் எல்லைகளற்ற வானவீதியில் சுதந்திரமாக சிறகடித்து பறந்து மகிழ்வேன்.
காடுகள், மலைகள் கடல்கள் அனைத்தையும் தாண்டி உயரப் பறப்பேன். வானத்தில் பஞ்சுப் பொட்டலங்களென மிதக்கும் மேகக் குவியல்களினூடே பறந்து அவற்றின் அழகைக் கண்டு களிப்பேன்.
எனக்கு சிறகிருந்தால் மழைகாலத்தில் சுதந்திரமாக வானத்தில் பறப்பேன். வானில் இருந்து விழும் மழைத்துளிகளில் நனைந்து விளையாடுவேன். வீட்டிற்குள் இருந்து மழையை வேடிக்கை பார்க்கும் எனக்கு மழையில் விளையாடுவது பேரானந்தமாய் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.
மழையில் நனைந்தபடி வயலில் வேலை செய்யும் விவசாயிகளையும், மழைக்கு அஞ்சி வீட்டிற்குள் ஒளிந்து கொள்ளும் மனிதர்களையும் வேடிக்கை பார்ப்பேன். மழைவிட்டவுடன் நீரில் காகித கப்பல் விட்டு மகிழும் சிறுவர்களை பார்த்து உற்சாகம் அடைவேன்.
ஆகாயத்தில் விமானங்கள் பறக்கும் போதெல்லாம் கீழே இருந்து அவற்றை பார்த்து வியந்து, அவற்றை அருகில் பார்க்க ஆசை கொள்வது வழமை. எனக்கு சிறகிருந்தால் உயரப் பறந்து விமானங்களை பார்த்து ரசிப்பேன்.
வாழ்க்கையை பற்றி எந்த கவலையும் இன்றி அங்கும் இங்கும் அலைந்து திரிவேன் அதுமட்டுமின்றி மனிதர்களைப்போல் நாளையை நினைத்து பயம் கொள்ளாமல், மகிழ்ச்சியாக என் வாழ்நாளை கழித்திடுவேன்.
எனக்கு சிறகு இருந்தால் கட்டுரை – 2
ஒருநாள் மாலை வேளையில் வீட்டின் பின்புறம் இருந்த தோட்டத்தில் அமர்ந்திருந்தேன். அங்கே பூத்துக் குலுங்கும் பூக்களையும், அவற்றை நாடி வரும் வண்டுகளின் ரீங்கார ஒலிகளை கேட்பதும் மனதிற்கு இதம் தரும்.
தோட்டத்தின் அழகை இரசித்துக் கொண்டிருந்த வேளையிலே எங்கிருந்தோ பறவைக் கூட்டமொன்று தோட்டத்தை நாடி வந்தது. திடிரென என்னைக் கண்டு பயந்து படபடவென சிறகளை அசைத்தவாறு திரும்பிப் பறந்தன.
அவற்றைப் பார்த்தவுடன் அவற்றைப் போல சிறகடித்து பறக்க வேண்டுமென்ற ஆவல் எனக்குள் தோன்றியது.
எனக்கு சிறகிருந்தால் இவ்வாறு தனித்திருக்காமல் கூட்டங்கூட்டமாகப் பறந்து களிப்புறுவதோடு, அனைத்து தோட்டங்களையும் சுற்றி வலம் வருவேன்.
ரோஜாவும் மல்லிகையும் பிறவண்ண மலர்களும் கொத்துக் கொத்தாக பூத்திருக்கும் அழகை பார்ப்பதோடு, அவற்றின் அருகில் சென்று அவை தரும் நறுமணத்தை நுகர்வேன்.
மனிதர்களைப் போல் பறவைகளிற்கு எதிர்காலத்தை பற்றிய பயமோ, வாழ்க்கையைப் பற்றிய சிந்தனைகளோ இருப்பதில்லை. அன்றாடம் தேவைப்படுகின்ற உணவை தேடி உண்டு நிறைவாக வாழுதல் பறவைகளின் சிறப்பியல்பு.
எனவே அந்த பறவைக் கூட்டத்தோடு நானும் இணைந்து அவற்றைப் போன்று மகிழ்வான வாழ்க்கை வாழ்ந்திடுவேன்.
எனக்கு சிறகிருந்தால் ஏனைய பறவைகள் போல விவசாய நிலங்களிற்கு தீங்கு விளைவிக்காமல், வயல்களையும் தோட்டங்களையும் சேதப்படுத்தாமல் வாழ்வேன்.
மனிதர்களைப் போல் சோம்பியிராமல் அதிகாலையில் நித்திரை விட்டெழுந்து தூரதேசத்திற்கு சென்று இரைதேடி சுறுசுறுப்பாய் வாழ்ந்திடுவேன். எல்லைகளற்ற வானவீதியில் உற்சாகமாய்ப் பறந்து வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாய் வாழ்ந்திடுவேன்.
சிறகுகளுடன் பறந்து கொண்டிருந்த என் எண்ணவோட்டங்கள், என்னை சூழ்ந்திருந்த இருளைக் கண்டதும் தடைப்பட்டன. நேரமாகி விட்டதை உணர்ந்தவனாக வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.
You May Also Like : |
---|
நான் விரும்பும் பள்ளி கட்டுரை |
எங்கள் ஊர் கட்டுரை |