Table of Contents
அறம் அறிமுகம்
உலகம் முழுவதும் எப்போதும் மாறாத, அழியாத உண்மை உண்டு. நிலையற்ற பொய்களை பெரிதென எண்ணி நிலையான உண்மைகளை விட்டு விலகி நிற்பதால் தான் அறம் பற்றி பெரிதாகத் தெரிவதில்லை.
நம் முன்னோர்கள் வாழ்வு முழுவதும் அறத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அறவழியில் வாழ்ந்தனர். தமிழர் வாழ்வானது அறம், பொருள், இன்பம் என்ற மூன்று கோட்பாடுகளால் அமைந்தவை. இவை மூன்றிலும் அறத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர்.
அறம் என்றால் என்ன
அறம் என்னும் சொல்லுக்கு கடமை, தர்மம், புண்ணியம், அறக்கடவுள், அறச்சாலை, தருமதேவதை, ஞானம், நல்வினை, நோன்பு எனப் பொருள் உரைக்கின்றது அகராதி.
நிலையான உண்மையுடன் இணைந்து எப்போதும் அந்த உணர்வுடன் இருப்பதே உண்மையான இயல்பாகும். இதுவே அறமாகும். மேலும் அறம் என்றால் ஒழுக்கம் எனப் பொருள்படும்.
அறமானது ஒருவர் சமூகத்தில் எவ்வாறு நடக்க வேண்டும் என்பது தொடர்பான பார்வைகளைக் குறிக்கின்றது. இதை நல்லவை, தீயவை என்பன தொடர்பில் ஒரு சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடத்தைகளின் தொகுப்பு எனலாம்.
திருக்குறள் கூறும் அறம்
உலகப்புகழ் பெற்ற இலக்கியமான திருக்குறளானது இரண்டடிகளில் மக்களுக்குத் தேவையான அனைத்து நெறிகளையும் கூறியுள்ளமை சிறப்புக்குரியதாகும்.
ஒழுக்கத்தை உண்மையாக நேசித்து ஒழுகுபவன் அறன். அவன் தன்னை ஒத்த ஒழுக்கமான ஒரு பெண்ணுடன் நடத்துகின்ற வாழ்க்கை இல்லறம். இதை விரும்பாமல் விலகி நின்றால் துறவறம்.
இவ்வாறு ஒழுக்கத்தோடு வாழ்வோருக்கு எப்படியெல்லாம் வழிவகை இருக்கின்றன என்று வகுத்தும், தொகுத்தும் தெளிவாகச் சொல்லப்பட்ட கருத்துக்களே அறத்துப்பாலில் இடம் பெறுகின்றன.
“அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்”
என்று அறம் பற்றித் திருக்குறள் எடுத்தியம்புகின்றது. அதாவது பொறாமை, ஆசை, சீற்றம், கடும்சொல் என்னும் தீய தன்மைகள் நான்கையும் விட்டு நீங்கி நடப்பதே அறம் எனக் கூறப்படுகின்றது.
“மனத்துக்கண் மாசிலன் ஆதல்அனைத்தறன்
ஆகல நீர பிற”
அதாவது மனத் தூய்மையாக, குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும். அதுவே அறமாகும். மனத் தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை என்கின்றது திருக்குறள்.
“ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்”
அதாவது செய்யக்கூடிய செயல்கள் எவையாயினும் அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலே செய்யப்பட வேண்டும் எனக் கூறப்படுகின்றது.
“அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊரஆந்தான் இடை”
அதாவது அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து செல்பவர்களைப் போல் வாழ்க்கையில் வரும் இன்ப, துன்பங்கள் இரண்டையும் எளியவாகக் கருதி மகிழ்வுடன் பயணத்தை மேற்கொள்வார்கள்.
தீய வழியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்களோ பல்லக்கைத் தூக்கிச் சுமப்பவர்களைப் போல் இன்பத்திலும் அமைதி கொள்ளாமல் துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் இன்றி வாழ்வையே பெரும் சுமையாகக் கருதுவர்.
அறத்தின் சிறப்பு
திருக்கோவில் பணி செய்தல், விருத்தோம்பல், ஆதரவற்றாரைப் பேணுதல், கருணை கூர்ந்து வேண்டுவன ஈதல் இவையெல்லாம் அறமாகின்றன.
அறம் கொண்டு வாழ்பவர் வாழ்க்கையானது எப்போதும் சீரும் சிறப்புமாகத் திகழும். அறம் வாழ்வினை மேன்மையடையச் செய்கின்றது.
மக்களாகப் பிறந்த அனைவருமே உயர்வாக மதிக்கப்படுவதில்லை. அறவழி வாழ்பவர்களே உயர்ந்தவர்கள் என மதிக்கப்படுகின்றனர்.
எனவே எந்தச் சூழ்நிலையிலும் அறவழி தவறாது வாழ்ந்து உயர்வு பெறுவோம்.
You May Also Like : |
---|
அறம் செய்ய விரும்பு கட்டுரை |
அன்பு பற்றிய கட்டுரை |