இந்த பதிவில் “விஞ்ஞானத்தின் விந்தை கட்டுரை” பதிவை காணலாம்.
நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போல விஞ்ஞானத்தின் வளர்ச்சி நன்மை, தீமை என இரண்டு விளைவுகளையும் கொண்டுள்ளது. விஞ்ஞானம் காட்டி நிற்கும் வளர்ச்சியானது மனிதனை உச்ச விருத்தியுள்ள உயிரினக் கூட்டமாக வகைப்படுத்தியுள்ளது.
Table of Contents
விஞ்ஞானத்தின் விந்தை கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- விஞ்ஞானத்தின் வரலாறு
- தற்கால விஞ்ஞான விந்தைகள்
- விஞ்ஞான விந்தையின் நன்மைகள்
- விஞ்ஞானம் எதிர்கொள்ளும் சவால்கள்
- முடிவுரை
முன்னுரை
உலகத்தை ஆழ்வது விஞ்ஞானத்தின் வளர்ச்சி என்றால் அது மிகையாகாது. விஞ்ஞானத்தின் விந்தையால் உலகம் சுருங்கி கைக்குள் அடங்கி விட்டது. நாளுக்கு நாள் விஞ்ஞானத்தின் விந்தை வளர்ச்சி கண்டு வருகின்றது.
விஞ்ஞானத்தின் விந்தையால் மனித வாழ்வியலானது எண்ணற்ற மாற்றங்களும்⸴ முன்னேற்றங்களும் அடைந்துள்ளன. சாத்தியமற்றது எனக் கருதப்பட்டது எல்லாம் இன்று சாத்தியமாகி வருகின்றன.
விஞ்ஞானம் காட்டி நிற்கும் வளர்ச்சியானது மனிதனை உச்ச விருத்தியுள்ள உயிரினக் கூட்டமாக வகைப்படுத்தியுள்ளது. இக்கட்டுரையில் விஞ்ஞானத்தின் விந்தை பற்றி காண்போம்.
விஞ்ஞானத்தின் வரலாறு
பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே விஞ்ஞானம் வளர ஆரம்பித்து விட்டது. கைவினை வரலாறே விஞ்ஞானத்தின் வரலாறாக வளர ஆரம்பித்தது எனலாம்.
பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தீக்கற்களால் ஆக்கப்பட்ட கருவியே முதன் முதலில் உருவாக்கப்பட்ட கருவியாகும். கற்களாலும்⸴ எலும்புகளால் கருவிகள் வடிவமைக்கப்பட்டன.
குறிப்பாக ஆயுதங்கள் எலும்புகளாலும்⸴ கொம்புகளாலுமே வடிவமைக்கப்பட்டன. விஞ்ஞான வளர்ச்சியானது கிரேக்கர் கால விஞ்ஞானம்⸴ சீனர் கால விஞ்ஞானம்⸴ அரேபியர் கால விஞ்ஞானம்⸴ மத்தியகால விஞ்ஞானம்⸴ மறுமலர்ச்சிக் கால விஞ்ஞானம்⸴ தற்கால விஞ்ஞானம் எனப் பல வரலாற்று வளர்ச்சி காலகட்டங்களை கண்டு இன்றுவரை பிரமிக்கத்தக்க வளர்ச்சியை காட்டி வருகின்றது.
தற்கால விஞ்ஞான விந்தைகள்
இன்று விஞ்ஞானமும்⸴ தொழில்நுட்பமும் முன்னெப்போதும் இல்லாத வகையில் முன்னேறியுள்ளன. கல்லை உரசித் தீயைக் கண்டுபிடித்ததிலிருந்து ஆரம்பமான மனிதனின் கண்டுபிடிப்புகள் இன்று வானளாவிய ரீதியில் வளர்ந்து மண்ணுக்கும்⸴ விண்ணுக்கும் இடையில் விந்தைகள் புரிகின்றன.
மருத்துவக் கண்டுபிடிப்புகள் ஆயுட்காலத்தை அதிகரிக்க செய்து வருகின்றன. கல்வித் துறையில் விஞ்ஞானத்தின் பங்கு அளப்பரியதாகும். நவீன கற்பித்தல் யாவும் விஞ்ஞானத்தின் விந்தைகளேயாகும்.
விண்வெளிப் பயணங்களும்⸴ கோள்கள் வளிமண்டலங்கள் பற்றிய ஆராய்ச்சிகளும் விஞ்ஞானத்தின் விந்தைகளாகும். இயற்கை அழிவுகளை முன்கூட்டியே தடுத்து உயிர்களை பாதுகாப்பதும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களாலேயாகும்.
விவசாயத்தில் புதிய வகை பயிர் இனங்களை அறிமுகம் செய்வதில் இருந்து அறுவடை வரை நவீன முறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்தை இலகுபடுத்துவதில் பல போக்குவரத்துச் சாதனங்கள் துணைபுரிகின்றன.
மின்சாரத்தில் இயங்கும் புகையிரதங்கள்⸴ விமானங்கள்⸴ வாகனங்கள் என எண்ணிலடங்கா சாதனங்களும் விஞ்ஞானத்தின் விந்தையினாலேயே உருவாகியுள்ளன.
விஞ்ஞான விந்தையின் நன்மைகள்
விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளால் கையடக்கத் தொலைபேசி⸴ கணினி⸴ வானொலி போன்ற கண்டுபிடிப்புகள் கல்வித் துறைக்கு பெரிதும் பயனளிக்கின்றன. இவற்றின் மூலம் நவீன கல்வி முறைமைகள் அறிமுகப்படுத்தப்பட்டு மாணவர்களின் அறிவாற்றல் விருத்தியடையச் செய்யப்படுகின்றது.
மருத்துவத் துறையில் இதன் பங்களிப்பானது போற்றுதற்குரியதாகும். குணப்படுத்த முடியாத நோய்களைக் குணப்படுத்தக் கூடிய மருத்துவ கருவிகள்⸴ உபகரணங்கள்⸴ சிகிச்சை முறைகள் போன்றன உதவுகின்றன.
இதனால் இழப்புக்கள் தவிர்க்கப்படுகின்றன. விவசாயத்தின் வளர்ச்சிக்கும் புதிய வகை பயிர்களுக்கும் விஞ்ஞானம் துணைபுரிகின்றது.
விஞ்ஞானம் எதிர்கொள்ளும் சவால்கள்
விஞ்ஞானம் பல நன்மைகளை மனிதனுக்கு தந்தாலும் சூழல் மாசடைதல்⸴ பேரழிவு⸴ அழிவினைத் தரும் ஆயுதங்கள்⸴ புதிய புதிய நோய் நிலைமைகள்⸴ மனித மனங்களில் ஏற்படும் பிறழ்வுகள் எனப்பல சவால்களை விஞ்ஞானத்தின் விந்தை எதிர்கொள்கின்றன.
விஞ்ஞானம் ஏற்படுத்துகின்ற சவால்களே நாளைய எதிர்கால சந்ததி எதிர்கொள்ளப் போகும் மிகப்பெரிய சவாலாகும். விஞ்ஞான வளர்ச்சியிலே நாடுகள் ஒன்றையொன்று போட்டி போட்டுக் கொள்கின்றன. அதிகரித்த வீதி விபத்துக்கள் ஏற்படவும் காரணமாகின்றன. பண்டைய விவசாயமுறை அழிவதற்கு விஞ்ஞானத்தின் அபரிவிதமான வளர்ச்சியே காரணமாகின்றது.
முடிவுரை
விஞ்ஞானத்தின் விந்தைகள் யாவும் வியப்பிற்குரியது. மனித வாழ்வியலோடு பின்னிப்பிணைந்து தவிர்க்க முடியாததுமாக விஞ்ஞானம் இரண்டறக் கலந்துள்ளது.
ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போலவே விஞ்ஞான விந்தைகளும் நன்மை⸴ தீமை என இரண்டையும் கலந்து உள்ளன. எனவே விஞ்ஞானத்தின் சரியான பாவனை⸴ சரியான திசையை நோக்கிய நகர்வு போன்றன உலகில் தொடர்ச்சியான நிலவுகைக்கு உறுதுணையாக அமையும்.
You May Also Like :