பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் கட்டுரை

pirapokkum ella uyirkkum katturai in tamil

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் கட்டுரை

“ஒன்றே குலம் ஒருவனே தேவன்” எனும் திருமூலரின் கருத்தும் அனைவருக்கும் ஓருலகம் என பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதற்கு ஒத்ததாகவே அமைகிறது.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. உயிர்களின் பெருமை
  3. பிரிவினைவாதம்
  4. முக்கியத்துவம்
  5. தனிமனித சுதந்திரம்
  6. முடிவுரை

முன்னுரை

பிறப்பினால் அனைவரும் சமமானவரே என உலகப்பொதுமறையான திருக்குறளிலே பெருமை எனும் அதிகாரத்திலே வள்ளுவர்,

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்”

என்ற குறளினூடாக உலகிற்கு எடுத்தியம்புகிறார். இதற்கு “ எல்லா மக்களும் பிறப்பால் சமமே அவரவர் செய்யும் செயல் வேறுபாடுகளால் மட்டுமே பெருமை வரும்” என சாலப் பொருளுரைக்கிறார் சாலமன் பாப்பையா.

செயல் வேறுபாடுகள் என்பதனால் கருதப்படுவது செய்யும் செயலில் காணப்படுகின்ற சிறப்பியல்பு தன்மையேயின்றி உயர்தொழில், தாழ்தொழில் அன்று.

உயிர்களின் பெருமை

நேற்று இருந்தவன் இன்றும் இருப்பான் என்று கூறிட முடியாத நிலையாமை உலகில் பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற அத்தனை ஜீவராசிகளும் பெருமை மிக்கதே.

“பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே
கட்டளைக் கல்”

எனும் வள்ளுவரின் குறளும் “பிறப்பொக்கும்..” என்னும்  குறளுக்கு வலுச்சேர்ப்பதாக ஒருவர் செய்யும் தொழிலுக்கும் பெருமைக்கும் தொடர்பில்லை என பொருளுணர்த்துகிறது.

ஆக, ஒருவருடைய குடிப்பிறப்பினாலோ அல்லது தொழிலினாலோ பெருமை வருவதில்லை. அவரவர் புரியும் நற்செயல்களே உண்மையில் பெருமை சேர்க்கும்.

பிரிவினைவாதம்

செய்யும் தொழிலால் வேறுபாடு காண்பிக்கும் சமூகக்கட்டமைப்புக்கள் இன்றைய நவீன தொழில்நுட்ப யுகத்திலும் தொடர்வது கவலையளிப்பதாக உள்ளது.

சக மனிதனை மனிதனாக நோக்காது அதிகாரம் செலுத்துதல், சாதி, மத, இன, மொழி பாகுபாடுகளினால் பிளவுபட்டிருத்தல் என்பன என்னதான் நவீன யுகத்தில் நாகரிக பாதையில் நடைபோட்டாலும் நாகரிகமற்ற செயற்பாடுகளாகவே நோக்கப்படும்.

முக்கியத்துவம்

பிறப்பிலும் குலப்பெருமை பேசி ஏற்றத்தாழ்வுகள் கற்பிக்கப்படும் இவ்வுலகிலே பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது பாரிய புரட்சிக்கருத்தாகவே நோக்கப்பட வேண்டியிருக்கிறது.

இவ்வுலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளையும் ஒரே தரத்தில் வைத்து நோக்கும் வள்ளுவரின் மனப்பாங்கு உயர்ந்த எண்ணப்பாட்டைக் கொண்டோரால் மட்டுமே உணர்ந்து கொள்ளப்படக்கூடிய உண்மையாகும்.

“ஒன்றே குலம் ஒருவனே தேவன்” எனும் திருமூலரின் கருத்தும் அனைவருக்கும் ஓருலகம் என பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதற்கு ஒத்ததாகவே அமைகிறது.

தனிமனித சுதந்திரம்

“தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்ற பாரதியின், உடல் உழைப்பாளி குறைந்த ஊதியம் என பசித்திருக்க நேருகின்றதென்றால் இவ்வுலகையே அழித்திடலாம் என்னும் ஆக்ரோஷமான சிந்தனையின் அடிநாதம் இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர்களும் சரிசமமாக வாழ்வதற்கான உரிமையை கொண்டுள்ளதென்பதே ஆகும்.

அதற்கு தடையாக உள்ள வர்க்க வேறுபாடுகள் களையப்பட வேண்டியன என்பதையே மனித உரிமைகள் என்பதால் விளக்கப்படுகிறது.

ஒவ்வொரு தனி மனிதனும் உயிர் வாழ இயற்கையாக உள்ள உரிமையை கூட அமைப்புக்களை நிறுவி கண்காணித்து செயல்படுத்த வேண்டியிருப்பது அதிகார வர்க்கத்தின் சுயநலநோக்கின் விளைவுகளாகும்.

ஆயினும் அத்தகைய அமைப்புக்களின் ஊடாகவேனும் தனிமனித சுதந்திரம் நிலைநாட்டப்பட்டுவிட்டது என்றிடமுடியாத இயலாமை என்பது வர்க்க வேறுபாடுகள் இன்னும் நிலைபெற்றிருக்கின்றன என்பதற்கான சான்றாகவே எடுத்துக்கொள்ளப்பட வேண்டியிருக்கிறது.

முடிவுரை

தெளிந்த நீரோடையாக சிறந்த வாழ்வுக்காக ஆழமான அறக்கருத்துக்களை சுருக்கி இரண்டடிக்குள் எடுத்தியம்பிய வள்ளுவரின் பெருமைகளில் ஒன்றாகிய பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற உயிர்த்துடிப்புள்ள அடிகளால் கூறவிளையும் சத்தியத்தை பின்பற்றி வாழ வேண்டியது பகுத்தறிவுடைய ஒவ்வொரு மனிதனதும் தலையாய கடமையாகும்.

Read more: தமிழுக்கு அமுதென்று பெயர் கட்டுரை

உடல் எடையை அதிகரிக்கும் உணவுகள்