பாசிசம் என்றால் என்ன

பாசிசம்

இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தீவிர அரசியல் சித்தாந்தங்களில் பாசிசமும் ஒன்றாகும். பாசிச சித்தாந்தத்தின் தந்தையாக இத்தாலிய சர்வாதிகாரி முசோலினி கருதப்படுகின்றார்.

1922 ஆம் ஆண்டு முசோலினியும் அவரது பாசிச கட்சியும் இத்தாலியின் பதவிக்கு வந்ததோடு பாசிசக் கோட்பாடு ஆரம்பமாகியது.

1933ஆம் ஆண்டு ஜெர்மனியில் பதவிக்கு வந்த சர்வாதிகாரியான ஹிட்லர் முசோலினியைப் பின்பற்றி நாசிசம் என்ற பெயரில் பாசிச கோட்பாட்டை உருவாக்கினார்.

உலகையே ஒருவகை ஆதிக்கத்துக்கு உட்படுத்தி இரண்டாம் உலக யுத்தத்திற்கு வித்திட்ட கருத்தியல் பாசிசவாதமாகக் கருதப்படுகின்றது. முதலாம், இரண்டாம் உலக யுத்தங்களுக்கிடைப்பட்ட காலத்தில் ஒரு அரசியல் இயக்க செயல்முறையாக இந்த கருத்தியல் அறிமுகப்படுத்தப்பட்டது.

முதலாம் உலகப் போரின் பின் வெற்றி பெற்ற நேச நாடுகளுக்கும் தோல்வியுற்ற ஜெர்மன், இத்தாலி போன்ற நாடுகளுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்ட வெர்சஸ் உடன்படிக்கை மற்றும் பரிஸ் உடன்படிக்கை 1920 ஆம் ஆண்டு உலகப் பொருளாதார நெருக்கடி என்பன பாசிசத்தின் தோற்றத்திற்குக் காரணமாக அமைந்தன.

ஆரம்ப காலத்தில் இத்தாலியில் மையப்படுத்தி தோற்றம் பெற்ற பாசிச கருத்தியலானது ஜெர்மனிய நாசிசத்துடன் இணைந்து பலம்மிக்க நடைமுறை வடிவமாக மாற்றமுற்றது.

1925, 1926 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் சிறைக்கைதியாக இருந்த ஹிட்லரின் எனது போராட்டம் எனும் நூலில் பாசிசத்தின் அடிப்படை மற்றும் அதன் நோக்கங்கள் என்பன பற்றி மிகவும் தெளிவாக எழுதப்பட்டுள்ளது.

இச்சித்தாந்தத்தின் கோட்பாடு சர்வாதிகார ஆட்சி முறையை நடைமுறைப்படுத்துவதே ஆகும்.

அதாவது பாசிச கட்சிக்கு எதிராக வேறு கட்சி இருக்கக்கூடாது, விமர்சனம் இல்லா நிலை, நாட்டையும் நாட்டு மக்களையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்தல், அரசுக்காகத்தான் மக்கள் மக்களுக்காக அரசு இல்லை.

கம்யூனிசம், சோசலிசம், சமாதானம், அஹிம்சை போன்றவற்றிற்கு எதிரான கோட்பாடாகும்.

பாசிசம் என்றால் என்ன

பாசிசம் என்பது Facis என்ற லத்தீன் மொழிச் சொல்லிலிருந்து தோற்றம் பெற்றது. இது “ஒன்றாக இணைதல்” எனும் பொருளைத் தருகின்றது.

அதாவது, ஒரு சமுதாயத்தின் அதிகார வர்க்கத்தால் சர்வாதிகார முறையில் பொருளாதார மற்றும் பிற விடயங்களைத் தீர்மானித்தல் பாசிசம் என்கின்றனர்.

தனிமனித உரிமைகளை நாட்டின் நலனுக்காக, வல்லமைக்காக எனக்கூறி மதிக்காமலும், அரசுக்கு எதிராக கேள்வி கேட்பவர்களை அடக்குமுறைகள் மற்றும் வன்முறைகள் மூலமாக நசுக்குகின்றதுமான அரசியல் நடைமுறையே பாசிசம் எனப்படும்.

முசோலினியின் இத்தாலி, ஹிட்லரின் ஜெர்மனி பாசிசத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

பாசிசத்தின் பிரதான பண்புகள்

அரசியல் அணைத்தாண்மை அதாவது பாசிசமானது சர்வாதிகார அரசை கட்டியெழுப்புவதை நோக்கமாக கொண்டுள்ளது. இது அரசியல் கோட்பாட்டுக் கருத்தில் அனைத்தாண்மை என்ற கருத்தை அடையாளப்படுத்தியுள்ளது.

பாசிசம் அதிகாரம் மிக்க ஒரு தலைவனையும், அத்தலைவனை கண்மூடித்தனமாக பின்பற்றும் மக்கள் கூட்டத்தினையும் கொண்ட அரசாங்க முறையாகும்.

ஜனநாயகத்தினை பாசிசம் நிராகரிக்கிறது. பாசிசம் தனியொரு கட்சியை கொண்ட ஒரு ஆட்சி முறையாகும். பாசிசவாதிகள் தமது கட்சி அங்கத்தவர்களை இராணுவ நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள். மேலும் உயர்குழாம் அரசியலை வலியுறுத்துகின்றது.

தனிமனிதனை அறிவாளியாகவோ, ஆற்றல் மிக்கவனாகவோ, ஆளத்தகுதியானவனாகவோ பாசிசம் கருதுவதில்லை.

Read more: அரசியல் என்றால் என்ன

சமூக நீதி என்றால் என்ன