சொல் என்பது ஏதொன்றையும் சுருக்கமாய் குறிக்கும் அடிப்படை மொழி கூறு. மொழிகளிலேயே மூத்த மொழியாம் தமிழ்மொழிக்கு அப்படி பல சொற்கள் உண்டு. அவை எண்ணிலடங்காதவை ஆகும்.
பொதுவாகத் தமிழில் சொற்கள் நான்கு வகைப்படுத்தப்படுகின்றன. பெயர்ச்சொல், வினைச்சொல், உரிச்சொல், இடைச்சொல் என்பனவே அவையாகும். நால்வகைச் சொற்கள் பற்றி இப்பதிவில் காண்போம்.
Table of Contents
நால்வகைச் சொற்கள் யாவை
இலக்கண அடிப்படையில் சொற்கள்
- பெயர்ச்சொல்
- வினைச்சொல்
- இடைச்சொல்
- உரிச்சொல்
என நான்கு வகைப்படும்.
நால்வகைச் சொற்கள் மற்றும் அதன் விளக்கம்
பெயர்ச்சொல்
பெயர்ச் சொல் என்பது ஒன்றன் பெயரை உணர்த்தும் சொல் ஆகும். பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் பெயர்ச்சொற்கள் தோன்றும்.
ஆதலால் பெயர்ச்சொல் – பொருட்பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர், குணப்பெயர் (பண்புப்பெயர்), தொழிற்பெயர் என ஆறு வகைப்படும்.
பெயர்ச்சொல் எடுத்துக்காட்டு
மனிதன், பசு, புத்தகம், கோவில், காடு, மலை, வானம்
வினைச்சொல்
வினைச்சொல் என்பது ஒரு பொருளின் செயலை உணர்த்துவதாகும். வினைச்சொல் வேற்றுமை உருபுகளை ஏற்காது காலம் காட்டும் என்கிறார் தொல்காப்பியர்.
வினைச்சொல் எடுத்துக்காட்டு
கமலா பாடினாள்.
கந்தன் விறகு வெட்டினான்.
இங்கு பாடினாள், வெட்டினான் என்பது வினைச் சொற்களாகும்.
இடைச்சொல்
இடைச்சொல் என்பது தனித்து நின்று பொருள் தராது. பெயரும் வினையும் சார்ந்து நின்று இலக்கண பொருள் தரும் சொல் இடைச்சொல் ஆகும்.
இவை நுணுக்கமான பொருள் வேறுபாடுகளை உணர்த்துவதற்கும் உணர்ச்சிகளையும், கருத்துகளையும், மிகத்தெளிவாகவும் சுருக்கமான முறையிலும் வெளிப்படுத்தவும் பயன்படும்.
இடைச்சொல்லிற்கான விளக்கத்தை நன்னூல் வெளிப்படுத்தியுள்ளது.
“வேற்றுமை வினைசா ரியைஒப்பு உருபுகள் தத்தம் பொருள இசைநிறை அசைநிலை குறிப் பெனெண்பகுதியின் தனித்தியல்பு இன்றிப் பெயரினும் வினையினும் பின்முன் ஓரிடத்து ஒன்றும் பலவும் வந்து ஒன்றுவது இடைச்சொல்” – நன்னூல் 420
இடைச்சொல் வகைகள்
- வேற்றுமை உருபுகள்
- வினையுருபுகள்
- சாரியைகள்
- ஒப்புருபுகள் (உவம உருபுகள்)
- தத்தம் பொருளை உணர்த்துவன
- இசை நிறைப்பன
- அசை நிலைகள்
- குறிப்புப் பொருளை உணர்த்துவன
என்னும் எட்டும் இடைச்சொற்களின் வகைகளாகும்.
இடைச்சொல் எடுத்துக்காட்டு
கமலாவைப் பார்த்தேன் (ஐ)
மலர் போன்ற கை (போன்ற)
சென்றானா (ஆ)
அக்கானை, இக்கானை (அ, இ)
உரிச்சொல்
உரிச்சொல் என்பது ஒன்றுக்கு ஒன்று உரிமை உடையதாக விளங்கும் சொல் ஆகும். தமிழில் உரிச்சொல் முழுச்சொல்லாகவும், குறைச்சொல்லாகவும் வரும்.
தொல்காப்பியர் சொல்லதிகாரம் உரியியலில் 120 உரிச்சொற்களைக் குறிப்பிடுகிறார். பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்ற நான்கு வகைச்சொற்களின் வரிசையில் உரிச்சொல் இறுதியாக வருகிறது.
உரிச்சொல் வகைகள்
- பெயர் உரிச்சொல்
- வினை உரிச்சொல்
என இரு வகைப்படும்.
உரிச்சொல் எடுத்துக்காட்டு
“கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லாத திருக்கப் பெறின்”
[கல்லாதவரும் மிக நல்லவர்களே கற்றவர்கள் முன்னிலையில் தம் அறியாமை தோன்றப் பேசாது இருந்தால் என்பது இதன் பொருளாகும்.]
நனி தின்றான் – இங்கு நனி என்பது தின்றான் என்னும் வினையுடன் வருவதால் நனி என்பது வினை உரிச்சொல் எனப்படும்.
பலபொருட் குறித்த உரிச்சொற்களாக கடிமனை (காவல்), கடிவாள் (கூர்மை), கடிமலர் (சிறப்பு) போன்றவற்றை உதாரணங்களாகக் கூறலாம்.
You May Also Like : |
---|
ஐம்பெரும் காப்பியங்கள் யாவை |
எட்டுத்தொகை நூல்கள் யாவை |