தொழிற்சாலை பாதுகாப்பு பற்றிய கட்டுரை

Tholirsalai Pathukappu Katturai In Tamil

இந்த பதிவில் பணியாளர்களின் நலனுக்கு அவசியமான “தொழிற்சாலை பாதுகாப்பு பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

திட்டமிடப்படாத அமைப்புகள் மற்றும் பாதுகாப்பற்ற இடங்களில் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு இருப்பதனால் விபத்துக்கள் நிகழ்கின்றன.

தொழிற்சாலை பாதுகாப்பு பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. தொழிற்சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம்
  3. தொழிற்சாலை விபத்துக்கான காரணங்கள்
  4. தொழிற்சாலை விபத்துக்களை தடுக்கும் வழிமுறைகள்
  5. விபத்துக்களும் தொழிலாளர்களும்
  6. முடிவுரை

முன்னுரை

நாட்டின் பொருளாதாரத்தில் பங்களிப்புச் செய்வதில் தொழிற்சாலைகள் முக்கியம் பெறுகின்றன. இத்தகைய தொழிற்சாலைகளில் பாதுகாப்பு என்பது இன்றியமையாததாகும்.

தொழிற்சாலைகளையும், இயந்திரங்களையும் முறையாக பராமரித்து அவைகளின் பணிகளைத் தவறில்லாது செய்யும் வகையில் காத்திடுதல் அவசியம். தொழிற்சாலைகளுக்கு மட்டுமின்றி பணியாளர்களுக்கும் உரிய பாதுகாப்பினை வழங்கிட வேண்டும்.

இக்கட்டுரையில் தொழிற்சாலை பாதுகாப்பு பற்றி நோக்கலாம்.

தொழிற்சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம்

தொழிற்சாலைகளில் விபத்து இல்லாத நிலை எய்திட பாதுகாப்பு மிக அவசியம். தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களின் உயிர்களை விபத்துக்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தொழிற்சாலை பாதுகாப்பு முக்கியம் பெறுகின்றது.

தொழிலாளர்களுக்கு பணியிடத்தில் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதற்கு தொழிற்சாலை பாதுகாப்பு என்பது இன்றியமையாததாகும். தொழிலாளர்கள் நேர்த்தியாகவும் அச்சமற்ற நிலையிலும் பணிகளை செய்திட தொழிலாளர் மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு முக்கியம் ஆகும்.

தொழிற்சாலை விபத்துக்கான காரணங்கள்

இயந்திரங்கள் அல்லது கருவிகள் பழுதடைந்த நிலையில் விபத்துக்கள் ஏற்படலாம். அல்லது இவற்றில் பாதுகாப்பு கவசங்கள் பொருத்தப்படாமல் இருப்பதால் ஏற்படலாம்.

திட்டமிடப்படாத அமைப்புகள் மற்றும் பாதுகாப்பற்ற இடங்களில் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு இருப்பதனால் விபத்துக்கள் நிகழலாம்.

தொழிற்சாலைப் படிக்கட்டுகள் பாதுகாப்பற்ற முறையிலும் தரமற்ற முறையிலும் அமைக்கப்பட்டு இருத்தல் மற்றும் மின் இணைப்புகள் ஒழுங்கற்ற முறையிலும்
பராமரிப்பற்ற நிலையிலும் இருப்பதனாலும் தொழிற்சாலைகளில் விபத்துக்கள் நிகழ்கின்றன.

அபாயகரமான இயந்திரங்கள் மூலமும் விபத்துக்கள் ஏற்படுகின்றன.

தொழிற்சாலை விபத்துக்களை தடுக்கும் வழிமுறைகள்

தொழிலாளர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பணியில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு, சுய பாதுகாப்பு சாதனங்கள், பொருட்களை கையாள்வதில் பாதுகாப்பு, தொழில்முறை ஆரோக்கியம் போன்றவற்றில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

செய்யும் பணியிலும் அதைச் சார்ந்த பாதுகாப்பு முறைகளிலும் தொழிலாளர்கள் தேர்ச்சி பெறும் வகையில் சிறப்பாகப் பயிற்சி அளிக்க வேண்டும்.

முறையான தொழிற்கூடங்களையும், இயந்திரங்களையும் அமைத்தல் வேண்டும். தொழிற்சாலைகளையும், இயந்திரங்களையும் முறையாக பராமரித்தல் வேண்டும்.

பயிற்சி பட்டறை மூலம் தொழிற்சாலைகளில் விபத்து இல்லாத நிலையை எய்திட முடியும்.

விடுதியில் தங்கியிருக்கும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

விபத்துக்களும் தொழிலாளர்களும்

ஒரு தொழிற்சாலையில் தொழிலாளர்கள் இன்றி எதுவுமே சாத்தியம் ஆகாது. இன்றைய நவீன உலகில் பல்வேறு சாதனங்கள், இயந்திரங்கள் காணப்படுகின்ற போதிலும் மனித உழைப்பு என்றும் தவிர்க்க முடியாத அளவு முக்கியம் பெறுகின்றது.

அந்த வகையில் தொழிற்சாலை விபத்துகளில் தொழிலாளர்களுக்கு காயம் அல்லது உயிரிழப்பு ஏற்படும் நிலையினை காணமுடிகின்றது.

தொழிற்சாலைகளின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்கும் தொழிலாளர்கள் தொழிற்சாலை பாதுகாப்பு இன்மையினால் உயிர் இழக்கும் துர்பாக்கிய நிலை வேதனைக்குரியதாகும்.

முடிவுரை

இந்தியாவில் பல மாநிலங்களில் உள்ள தொழிற்சாலைகள், இரசாயன ஆலைகள் மற்றும் சுரங்கங்கள் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பற்ற இடங்களாக மாறி வருகிறது.

இது தொழிற்சாலை பாதுகாப்பின்மையின் பிரச்சினை தீவிரம் அடைந்துள்ளதை நமக்கு காட்டுகின்றது.

எனவே தொழிற்சாலைகளையும், இயந்திரங்களையும் முறையாக பராமரித்து அவைகளின் பணிகளைத் தவறில்லாது செய்யும் வகையில் காத்திடுதல் அவசியம். பாதுகாப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி, தொழிலாளர்களின் நலன்களை பேணவேண்டும்.

சுற்றுசூழல் விதிகளை உள்வாங்கிய வளர்ச்சியே முழுமையான வளர்ச்சியாக இருக்க முடியும் என்பதை உணர்ந்து கொண்டு தொழிற்சாலைகள் அமைக்கப்பட வேண்டும்.

You May Also Like :
குழந்தை தொழிலாளர் கட்டுரை
போதைப்பொருள் பாவனை கட்டுரை