தமிழில் பிற மொழி கலப்புக்கான காரணங்கள்

தமிழில் பிற மொழி கலப்பு

நம் எண்ணங்களை பிறருக்கு தெரிவிக்கவும், பிறருடைய உணர்வுகளை நாம் புரிந்து கொள்ளவும் உதவுவது மொழியேயாகும். அந்த வகையில் நம் தாய்மொழியாம் தமிழ்மொழி உலகில் தொன்மையான மொழிகளில் ஒன்றாக காணப்படுகின்றது.

தமிழ் மொழியில் 30% பிற மொழிகளின் கலப்பு உள்ளது என மொழியியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். தமிழில் பிற மொழி கலப்புக்கான காரணங்கள் பற்றி இப்பதிவில் காண்போம்.

தமிழில் பிற மொழி கலப்புக்கான காரணங்கள்

#1. தொழில்நுட்ப வளர்ச்சி

அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க நாளுக்கு நாள் புதிய சொற்கள் பிறக்கின்றன. புதிய சொற்கள் நாளைடைவில் தமிழ்மொழியில் புகுத்தப்படுகின்றன. இதன் மூலம் பிற மொழிக்கலப்பு தமிழ் மொழியில் ஏற்படுகின்றது.

#2. பிறமொழி இனத்தவர்களுடனான தொடர்பு

பிறமொழி இனத்தவர்களுடன் தொடர்புகளை கொண்டு பழகும்போது, அவர்களது மொழிப் பயன்பாடு எம் பேச்சுக்களோடு தமிழ்மொழியில் ஊடுருவுகிறது. குறிப்பாக புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழர்கள் மத்தியில் பிறமொழி சொற்களின் தமிழ்ப்படுத்தப்பட்ட தமிழ்ச் சொற்களைக் கேட்க முடிகின்றது.

#3. வேலை வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்காகப் பிறமொழிகளில் கவனம் செலுத்துகின்றனர்

இன்று பொது மொழியான ஆங்கில மொழியில் நன்கு புலமை பெற்றுக் கொள்ளும் போது தான் சிறந்த மற்றும் உயர்தர வேலைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இக்காரணத்திற்காக தமிழ் மக்கள் ஆங்கில மொழியை கற்கின்றனர். இது தமிழ்மொழியில் பிறமொழிக் கலப்பிற்கு வித்திடுகின்றது.

#4. நாகரிகம் எனக் கருதும் மனநிலை

பிறமொழிகளில் பேசும் போது தான் அது நாகரிகமானது என சிலர் கருதுவது உண்டு. இதனால் தமிழ் மொழியுடன் ஆங்கில மொழிகளை அல்லது பிற மொழிகளை பேசுகின்றனர். இது நாளடைவில் தமிழ் மொழியில் பிற மொழிகள் கலப்பதற்கு வழிவகுக்கின்றது.

#5. வெளிநாட்டு வாழ்க்கை

அந்நிய நாடுகளில் வசிக்கும் போது அந்நாட்டின் தேவைக்கேற்ப புதிய மொழி, கலாச்சாரம் ஆகியவற்றை பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. இது தவிர்க்க முடியாத ஒன்றாகும். இதனாலும் தமிழ் மொழியில் பிற மொழிகளின் ஊடுருவல் ஏற்படுகின்றது.

#6. தாய்மொழிக் கல்வியைத் தவிர்த்தல்

இன்று செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகள் தாய்மொழிக் கல்வியை பெரிதும் தவிர்க்கின்றனர். தமிழ் மொழியில் பேசத் தெரிந்தாலும், தமிழ் மொழியை எழுதத் தெரிவதில்லை. இவர்கள் தமிழ் மொழி பற்றிய அறிவினைக் குறைந்ததாகவே கொண்டுள்ளனர்.

#7. பிறமொழி நூல்களைத் தமிழில் மொழி பெயர்தல்

பிறமொழியில் உள்ள நூல்களை தமிழ் மொழிக்கு மொழிபெயர்க்கும் போது, மொழிபெயர்ப்பு நூல்களில் புறமொழிச் சொற்கள் பயன்படுத்தப்படுகிறது. அதனைப் படிக்கும்போது சொற்கள் வழக்கத்தில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

#8. பிற நாட்டவர் வருகை

பிற நாட்டவர் வருகையானது அவர்களின் மொழியியல் சார்ந்த பேச்சுக்கள் பழக்கத்திற்கு வருகின்றன. அவர்களுடன் உரையாடலுக்கான சந்தர்ப்பம் ஏற்படுகின்றபோது அவர்கள் மூலம் பிற மொழிக்கலப்பு தமிழ் மொழியில் இடம் பெறுகின்றது.

#9. தமக்குரிய மொழியை வளம்பெறச் செய்வதில் பற்று இல்லாமை

இன்று தமிழ் மொழி மூலம் கல்வி கற்பது என்பது அரிதாகிவிட்டது. அத்தோடு தமிழ் மொழியை சிறப்புப் பாடமாக தேர்ந்தெடுத்து அதில் பட்டப்படிப்பை முடித்தவர்கள் அரிதாகவே உள்ளனர். புதிய வகை பாடநெறிகள் பலவும் தோற்றம் பெற்றதால் தமிழ்மொழி பாடங்களை கற்பது அருகிவிட்டது. ஏனைய பாடநெறிகளைக் கற்பதற்காக ஆங்கில மொழி அதிகம் பயன்படுத்தப்படுகின்றது.

#10. ஊடகங்களில் ஆங்கிலக் கலப்பு

காகித ஊடகம், காட்சி ஊடகம், கணினி ஊடகம் என ஊடகங்களில் மூன்று வகை உள்ளன. இவற்றில் ஆங்கிலக் கலப்பு என்பது சாதாரணமாகிவிட்டது. இதன் மூலம் தமிழ் மொழியில் கலப்பு ஏற்படுகின்றது.

பொதுவாக ஊடகங்கள் மொழியை வளர்க்கும் ஒரு சாதனமாக பார்க்கப்படுகின்றது. இவற்றில் பிற மொழி கலப்பு பயன்படுத்தப்படும்போது, அது மொழியிலும் கலப்பை ஏற்படுத்தி விடுகின்றது.

You May Also Like :
மணிமேகலை காப்பியத்தின் சிறப்புகள்
ஆடி மாதம் சிறப்புகள்