இந்த குற்றியலுகரம் என்றால் என்ன, அதன் வகைகள் மற்றும் உதாரணங்கள் என்பவற்றை விரிவாக பார்க்கலாம்.
- Kutriyalugaram Vagaigal
- Kutriyalugaram Endral Enna
மயங்கொலி எழுத்துக்கள் யாவை இங்கே சென்று பாருங்கள்.
Table of Contents
குற்றியலுகரம் என்றால் என்ன
உ – என்ற உகரம் தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து அரை மாத்திரையாக ஒலித்தால் அது குற்றியலுகரம் எனப்படும். (குறுமை + இயல் + உகரம் = குற்றியலுகரம்)
உகரம் ஒரு மாத்திரை ஒலி அளவு உடையது. இந்த ஒரு மாத்திரை அளவும் குறைந்து குறுகி ஒலிக்கிற இடங்களும் உண்டு. அது குற்றியலுகரம் (குறுகி ஒலிக்கின்ற உகரம்) என்று அழைக்கப்படும்.
அதற்கு சில வரையறைகள் உண்டு.
- வல்லின மெய்களோடு சேர்ந்த உகரம் மட்டுமே குற்றியலுகரமாக வருவதற்கு வாய்ப்பு உண்டு. கு, சு, டு, து, பு, று ஆகிய ஆறு எழுத்துகள் மட்டுமே இந்த வகையில் அடங்கும்.
- இறுதியில் 1 மாத்திரைக்கு பதிலாக 1/2 மாத்திரை அளவே ஒலிக்கும்.
- தனிக்குறில் எழுத்தை அடுத்து வந்தால் அது குற்றியலுகரம் ஆகாது. (உதாரணம்: அது, பசு, வடு, அறு முதலியவை.)
குற்றியலுகரம் எழுத்துக்கள் யாவை
கு, சு, டு, து, பு, று
குற்றியலுகரம் எடுத்துக்காட்டு
மாடு, காடு, காது, ஆறு, எஃகு, அஃது, அரசு, கயிறு, பாக்கு, பேச்சு, பத்து, காற்று, நுங்கு, மஞ்சு, வண்டு, அம்பு, மார்பு, மூழ்கு, எய்து, சால்பு
குற்றியலுகரம் எத்தனை வகைப்படும் அவை யாவை
இந்த குற்றியலுகரம் ஆறு வகைப்படும். இவற்றை கு, சு, டு, து, பு, று ஆகிய ஆறு எழுத்துகளுக்கு முன் உள்ள எழுத்தை வைத்து அடையாளம் காணலாம். அவையாவன
- நெடில் தொடர் குற்றியலுகரம்
- ஆய்தத் தொடர் குற்றியலுகரம்
- உயிர்த் தொடர் குற்றியலுகரம்
- வன்தொடர் குற்றியலுகரம்
- மென்தொடர் குற்றியலுகரம்
- இடைத்தொடர் குற்றியலுகரம்
நெடில் தொடர் குற்றியலுகரம்
தனி நெடிலைத் தொடர்ந்து (ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ) குற்றியலுகர எழுத்துக்கள் (கு,சு,டு,து,பு,று) வந்தால் அது நெடில் தொடர் குற்றியலுகரம் என அழைக்கப்படும். அதாவது குற்றியலுகர எழுத்துக்கு முன்னால் நெடில் எழுத்துக்கள் இருந்தால் நெடில் தொடர் குற்றியலுகரம் எனப்படும்.
- தனி நெடிலைத் தொடர்ந்து வரும்
- ஈரெழுத்து சொற்களாகவே அமையும்.
எடுத்துக்காட்டு: மாடு, காடு, காது, ஆறு
ஆய்தத் தொடர் குற்றியலுகரம்
குற்றியலுகர எழுத்துக்கு முன்னால் ஆய்த எழுத்து இருந்தால் அது ஆய்தத் தொடர் குற்றியலுகரம் ஆகும். அதாவது ஆய்த எழுத்தை தொடர்ந்து குற்றியலுகர எழுத்துக்கள் காணப்படும்.
- ஆய்த எழுத்தை தொடர்ந்து வரும்
- மூன்று எழுத்து சொற்களாக அமையும்
எடுத்துக்காட்டு: எஃகு, அஃது
உயிர்த் தொடர் குற்றியலுகரம்
தனி நெடில் அல்லாத உயிர் எழுத்துக்களை (அ, இ, உ, எ, ஒ) தொடர்ந்து குற்றியலுகரம் (கு,சு,டு,து,பு,று) வந்தால் அவை உயிர்த் தொடர் குற்றியலுகரம் எனப்படும்.
- தனி நெடில் அல்லாத உயிரெழுத்தை தொடர்ந்து வரும்.
- இரண்டு எழுத்துக்கு மேற்பட்ட சொற்களாக அமையும்
எடுத்துக்காட்டு: அரசு, கயிறு
வன்தொடர் குற்றியலுகரம்
வல்லின மெய் எழுத்துக்களை (க்,ச்,ட்,த்,ப்,ற்) தொடர்ந்து குற்றியலுகரம் (கு,சு,டு,து,பு,று) வந்தால் அவை வன்தொடர் குற்றியலுகரம் எனப்படும்.
எடுத்துக்காட்டு: பாக்கு, பேச்சு, பத்து, காற்று
மென்தொடர் குற்றியலுகரம்
மெல்லின மெய் எழுத்துக்களை (ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்) தொடர்ந்து குற்றியலுகரம் (கு,சு,டு,து,பு,று) வந்தால் அவை மென்தொடர் குற்றியலுகரம் எனப்படும்.
எடுத்துக்காட்டு: நுங்கு, மஞ்சு, வண்டு, அம்பு
இடைத்தொடர் குற்றியலுகரம்
இடையின மெய் எழுத்துக்களை (ய், ர், ல், வ், ழ்,ள்) தொடர்ந்து குற்றியலுகரம் (கு,சு,டு,து,பு,று) வந்தால் அவை இடைத்தொடர் குற்றியலுகரம் எனப்படும்.
- மெய் எழுத்துக்களில் “வ்” வராது.
- சு, டு, று ஆகிய மூன்று குற்றியலுகர எழுத்துக்களில் சொற்கள் முடிவடையாது.
எடுத்துக்காட்டு: மார்பு, மூழ்கு, எய்து, சால்பு
You May Also Like: