பண்டைத் தமிழர் வாழ்வில் பெரிதும் பேசப்பட்டது அகம், புறம் எனப்படும் காதலும், வீரமும் ஆகும். இன்றைய இலக்கியங்களிலும், ஊடகங்களிலும் இன்றும் இவை பேசுபொருளாக உள்ளன.
தமிழர்களின் வீரத்தின் அடையாளமாக புற வாழ்வு காணப்படுகின்றது. புறவாழ்க்கை எனப்படும் வீரநிலை அக வாழ்க்கையிலிருந்தே தோற்றம் பெற்றிருக்க வேண்டும்.
அக வாழ்விலுள்ள தனக்கான ஒன்றை மற்றவர்களால் அபகரிக்க முற்படும் நிலையிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளவே புற வாழ்க்கை என்ற போரியல் முறை முக்கியத்துவம் பெற்றது எனலாம்.
எனவே மனிதனாகப் பிறந்த எவரும் இயல்பாகப் போரை விரும்புவதில்லை. மனிதர்களின் மனதில் தற்காப்புக்காக ஏற்பட்ட வீரநிலை உணர்வுகளின் செயற்பாடுகள் காலப்போக்கில் மற்றவர்களை அடக்கும் எண்ணத்திற்கும், ஆளும் நிலைக்கும் கொண்டு சேர்த்தன.
நிலம், வளம், இனம், மொழி, சமயம், பண்பாடு போன்ற எண்ணற்ற காரணங்களால் மனித சமுதாயம் போரியல் சிந்தனைகளை தலைமுறைகள் கடந்தும் எடுத்துச் செல்கின்றன.
உலக வரலாற்று நெடுங்கிலும் பல போர்கள் பல்வேறு நோக்கங்களுக்காக இடம்பெற்றிருப்பதனை வரலாறுகள் எடுத்துரைக்கின்றன. இப்போர்களை படைகள் மூலமாகவே முன்னெடுத்துச் சென்றிருப்பதனைக் காணமுடிகின்றது.
பண்டைய தமிழர்களின் வீரத்தைத் தொல்காப்பியப் புறத்திணை இயல் எடுத்துக் கூறுகின்றது. தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என்ற நால்வகைப் படைகளும் போரில் ஈடுபட்டன.
இன்றைய நவீன உலகில் நாடுகள் தரைப்படை, கடற்படை, வான்படை என முப்படை இராணுவங்களைக் கொண்டுள்ளன. இவற்றின் பலத்தின் அடிப்படையிலும் ஒரு நாடு சர்வதேச ரீதியில் பலம் வாய்ந்ததாகத் திகழ்கின்றது.
போர் நிகழ்வுகளில் தங்கள் உடல் வலிமைகள் மட்டும் பயன்படுத்தாமல் பல்வேறு உத்திகளையும் கையாள்கின்றனர்.
வலிமை, ஆற்றல், வெற்றி, புகழ் ஆகிய அனைத்தும் வெறும் உடல் வலிமையினாலோ, பொருள் வளத்தினாலோ, படைகள் படைக்கலன்கள் பல பெற்றிருந்தாலோ மட்டும் வருவதில்லை.
மாறாக மனத்திடம், மதிநுட்பம், நிர்வாகத்திறன், அரசமைப்பு முறைகள், நற்பயிற்சியாளர்கள், நல்லறம் மீது நாட்டம் கொண்டவர்கள், இடம் காலத்திற்கு ஏற்றவாறு எண்ணிச் செயற்படும் ஆற்றலுடையவர்களைப் பெற்றிருத்தல் ஆகிய காரணங்களால் வருவதாகும்.
காலாட்படை என்றால் என்ன
போரியல் சூழலில் போக்குவரத்துக்கு வாகனங்களைப் பயன்படுத்தாது காலால் நடந்து மாந்தவலுவால் காவக்கூடிய படைக்கலங்களையும் எடுத்துச் சென்று சமராடும் படை காலாட்படை ஆகும்.
காலாட்படை என்பது கால்களால் நடந்து தாக்கும் படை காலாட்படை ஆகும். (கால்+ஆள்+படை)
அதாவது காலாட் படை என்பது கால்களால் சென்று போரிடும் படை ஆகும். பண்டைக்காலம் தொடக்கம் இன்று வரை காலாட் படை படைத்துறையின் ஒரு அடிப்படை பிரிவாக இருந்து வருகிறது.
ஆரம்ப காலங்களில் நூற்றுக்கணக்கான எண்ணிக்கையிலான வேல் ஏந்திய காலாட்படை வீரர்கள் தனித் தனிக் குழுக்களாகப் பிரிந்து, அணிவகுத்து செல்வர். போரில் இப்படையினரே முன் செல்வார்கள்.
காலாட்படையில் அவ்வப்பொழுது தேவைக்கேற்ப வீரர்கள் சேர்க்கப்பட்டனர். இதனைக் கூலிப்படை என்றும், இடங்கை படையென்றும், தூசுப்படை என்றும் கூறுவர்.
மறவர்கள் பெரும்பாலும் காலாட்படையில் பணியாற்றியவர்களே. இதனை “வில்லேர் வாழ்கை விழுந்தொடை மறவர்” (அகநானூறு 35) “நல்லமர்க் கடந்த நாணுடை மறவர்” (அகநா 67) “ஒளிருவாள் மறவர்” (புற 227:4) “மறப்படை நுவலும்….. துன்னரும் மறவர்” (புற 270:8,9) போன்ற பாடல் வரிகள் விளங்குகின்றன.
Read more: செவ்வாய் கிழமை செய்ய கூடாதவை