தமிழ்க் கடவுளான முருகப் பெருமான் சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் வெளியான நெருப்பில் இருந்து அவதரித்தவர் என்று புராணங்கள் கூறுகின்றன. தொல்காப்பியரின் கூற்றுப்படி தொன்மையான தமிழர்களின் ஐந்திணை வழிபாடுகளில் முருகன் சேயோனாக வருகிறார்.
முருகு என்றால் தமிழில் அழகு என்று பொருள். அதன் அடிப்படையில் முருகனானவன் அழகனாகின்றான். முருகப்பெருமானின் வெற்றிச் செயல்கள் பற்றி புராணங்கள் கூறுகின்றன. முருகப்பெருமானின் வெற்றிச் செயல்கள் பற்றி இப்பதிவில் காண்போம்.
முருகப்பெருமானின் வெற்றி செயல்கள் யாவை
சூரனை வதம் செய்தமை.
ஆணவம், அகங்காரம் கொண்டு, தேவர்களை சிறைப்பிடித்து துன்புறுத்திய சூரபத்மனை சம்ஹாரம் செய்தார். இதனையே கந்தசஷ்டி விழாவாக நாம் கொண்டாடி வருகின்றோம். சூரபத்மனை வதம் செய்தது-திருச்செந்தூர் ஆகும்.
தாரகாசுரனை வதம் செய்தமை.
சூரபத்மன் என்னும் அரக்கனின் அட்டகாசங்கள் எல்லை மீறிக் கொண்டிருந்தன. இதனால் அவனை அழிக்க முருகனை சிவபெருமான் படைத்தார். முருகன் வேலோடு சூரபத்மனை அழிக்கப் புறப்பட்டார். இவ்வாறு புறப்பட்டபோது முதலில் சிங்கமுகனையும், தாரகாசுரனையும் அழித்தார்.
சிங்க முகாசுரனை வதம் செய்தது.
சூரபத்மன் மற்றும் தாரகாசுரனின் சகோதரன்தான் சிங்கமுகன் ஆவான். சிங்கமுகன் வதம் செய்யப்பட்ட இடம் போஷரூர் ஆகும். சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசூரன் ஆகியோர் முறையே சைவசித்தாந்தத்தில் பேசப்படும் ஆணவம், கன்மம், மாயை எனும் மலர்களை குறிப்பதாகக் கருதப்படுகின்றது.
கார்முகியை வதம் செய்தார்.
நக்கீரரும் அவருடன் 999 புலவர்களும் கார்க்கிமுகி என்ற பூதத்தினால் சிறை வைக்கப்பட்டு உணவாக உண்ணப்பட இருந்த நிலையில், முருகனைப் போற்றும் நக்கீரர் திருமுருகாற்றுப்படையை பாட, முருகன் உடனே அங்கு வந்து அந்த பூதத்தைக் கொன்று அங்கிருந்த ஆயிரம் பேர்களையும் விடுதலை செய்தார். ஆறுமுகனின் அருள் இல்லை என்றால் அவர்கள் அனைவருமே அந்த பூதத்தினால் கொல்லப்பட்டு இருப்பார்கள்.
சிகண்டி முனிவரைக் கொல்ல வந்த மதம் பிடித்த யானையை முருகன் தனது வேலால் கொன்றார்.
சிகண்டி எனும் முனிவர் கதிர்காமத்தில் இருந்தபோது ஒரு மதம் பிடித்த யானை அவரைக் கொல்ல வந்தது. ஆனால் கொஞ்சமும் பயம் அற்ற அந்த முருக பக்தர் வெற்றிலைக் காம்பை கிள்ளி அதன் மீது போட்டார்.
உடனே அந்த வெற்றிலைக் காம்பு முருகனின் வேலாக மாறி அந்த மதம் பிடித்த யானையைக் கொன்றது. முருகன் மீதான நம்பிக்கையும், பக்தியும் அந்த முனிவரின் உயிரைக் காப்பாற்றியது.
பிரும்மாவின் அகந்தை மற்றும் அறியாமையை அழித்தவர் முருகன்.
அகந்தை மற்றும் அறியாமை என்ற இரண்டுமே ஒன்றுடன் ஒன்று பின்னியுள்ளதினால் ஞானப் பண்டிதரான முருகன் பிரும்மாவின் அகந்தை மற்றும் அறியாமையை அழித்தக் கதை ஒன்று உள்ளது.
கைலாசத்துக்கு வந்த பிரும்மா முருகனை மதிக்காமல் இருக்க, அதனால் கோபமுற்ற முருகன் பிரணவ மந்திரத்தின் அர்த்தத்தை பிரும்மாவிடம் கேட்க , அவரால் அதை சரிவர கூற முடியாததினால் அவரை சிறை பிடித்து வைத்தார்.
அதன் பின் சிவபெருமானே பிரும்மாவை மீட்டுக் கொண்டு செல்ல வந்தபோது முருகன் சிவபெருமானையே தன்னுடைய மாணவராக ஏற்றுக் கொண்டு பிரணவ மந்திரத்தின் அர்த்தத்தைக் கற்றுக் கொடுத்தார்.
பிரும்மாவிற்கு அவர் கொடுத்த தண்டனை அவருடைய செருக்கு அல்லது தலைகனத்தை குறைக்கவே தவிர வேறு எதற்கும் இல்லை. சர்வ வல்லமை படைத்தவர் என்றாலும் சிவபெருமான் எளிய முறையில் தனது மகனிடம் வந்து பாடம் கற்றுக் கொண்டது முருகனின் பெருமையை உலகிற்கு எடுத்துக்காட்டவே ஆகும்.
You May Also Like : |
---|
சனி பகவான் வழிபடும் முறை |
ஆவணி மாத சிறப்புகள் |