சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமானுக்கு உரிய விரத நாட்களுள் பிரதோஷமும் ஒன்றாகும். இது சிவ வழிபாட்டுக்கு சிறப்பு வாய்ந்த நாளாக காணப்படுகிறது.
Table of Contents
பிரதோஷம் என்றால் என்ன
பிரதோஷம் என்பது ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய வளர்பிறை மற்றும் தேய் பிறையில் வரும் திரயோதசி திதி தினத்தில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரதோஷ காலமாக கடைப்பிடிக்கப்படும் சிவனுக்குரிய விசேட விரத நாள் ஆகும்.
அதாவது சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும். இப்பிரதோச காலத்தில் நிகழும் வழிபாடு பிரதோச வழிபாடு எனவும், பிரதோச தினத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் பிரதோச விரதம் எனவும் அழைக்கப்படுகின்றது.
பிரதோஷம் உருவான வரலாறு
தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்தை பெறுவதற்காக திருப்பாற்கடலை கடைய தீர்மானித்து, மந்தரம் எனும் மலையை மத்தாகவும் சிவபெருமானின் கழுத்தில் உள்ள உள்ள வாசகி என்னும் பாம்பினை கயிறாகவும் கொண்டு ஒரு புறம் அசுரர்களும் மறுபுறம் தேவர்களும் சேர்ந்து திருப்பாற்கடலை கடைய முயற்சித்தனர்.
அப்போது மந்தரமலை கடலில் மூழ்க ஆரம்பித்தது. அதனால் திருமால் கூர்ம அவதாரம் எடுத்து கடலுக்கடியில் சென்று மந்திர மலையை தன்னில் தாங்கிக் கொண்டார். பின்னர் அசுரர்களும் தேவர்களும் மீண்டும் திருப்பாற்கடலை கடைய ஆரம்பித்தனர்.
கடையும் பொழுது வலி தாங்க முடியாத வாசுகி பாம்பானது தனது ஆலகால விடத்தை கடலிலே கக்கியது. அந்த நச்சுத்தன்மையின் வீரியத்தால் அசுரர்களும் தேவர்களும் அச்சம் அடைந்து சிவபெருமானிடம் உதவியை நாடி சென்றனர்.
சிவபெருமான் அவர்களை காத்தருளும் பொருட்டு அந்த கொடிய ஆலகால விடத்தை எடுத்து உட்கொண்டார்.
உமாதேவியார் அதனை சிவபெருமானின் வயிற்றிற்குள் செல்ல விடாது, அவரது கழுத்தில் தடுத்து நிறுத்தினார். இந்நிகழ்வுகள் நடந்த நாளே பிரதோஷ நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது.
பிரதோஷ பூஜை
பிரதோஷ நேரத்தில் நந்தி பகவானுக்கு அருகம்புல் அல்லது வில்வ இலை மாலை சாற்றி நெய் விளக்கு ஏற்றி, பச்சரிசி, வெல்லம் வைத்து பூஜை செய்வது வழக்கம்.
சாதாரண நாளில் சிவன் கோயிலில் வலம் வருவதைப் போல் இல்லாமல், பிரதோஷ நேரத்தில் சற்று வேறு விதமாக வலம் வருதல் வேண்டும். அதற்கு சோமசூக்தப் பிரதட்சணம் என்று பெயர்.
அதாவது, நந்தியை வணங்கி சிவனுக்கு அபிஷேகம் செய்யும் நீர் வரும் கோமுகி வரை சென்று அங்கு நின்று வணங்கி, பின்னர் அதே வழியாக வலம் வந்து சண்டிகேஸ்வரர் வரை வந்து அவரை வணங்கி மீண்டும் கோமுகிக்குச் செல்ல வேண்டும். இப்படி மூன்று முறை வணங்க வேண்டும். இந்த பிரதட்சண முறைக்கு பிரதோஷ பிரதட்சணம் என்று பெயர்.
பிரதோஷ வகைகள்
தினசரி பிரதோஷம் : தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு முக்தி நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம்.
பட்சப் பிரதோஷம் : அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் திரயோதசி திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு சிறந்தது.
மாசப் பிரதோஷம் : பௌர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் திரயோதசி திதியே மாதப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் பாணலிங்க வழிபாடு சிறந்தது.
நட்சத்திரப் பிரதோஷம் : பிரதோஷ திதியாகிய திரயோதசி திதியில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்.
பூரண பிரதோஷம் : திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது சுயம்பு லிங்கத்தைத் தரிசனம் செய்வது உத்தம பலனை தரும்.
திவ்யப் பிரதோஷம் : பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது திவ்யப் பிரதோஷம் ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு வழிபாடு செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.
தீபப் பிரதோஷம் : பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும்.
அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் : வானத்தில் வ வடிவில் தெரியும் நட்சத்திர கூட்டங்களே, சப்தரிஷி மண்டலம் ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும்.
மகா பிரதோஷம் : ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் மகா பிரதோஷம் ஆகும்.
உத்தம மகா பிரதோஷம் : சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும்.
ஏகாட்சர பிரதோஷம் : வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை ஏகாட்சர பிரதோஷம் என்பர்.
அர்த்தநாரி பிரதோஷம் : வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர்.
திரிகரண பிரதோஷம் : வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும்.
பிரம்மப் பிரதோஷம் : ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம். இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.
அட்சரப் பிரதோஷம் : வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகள். சூநான் என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.
கந்தப் பிரதோஷம் : சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இது முருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு.
சட்ஜ பிரபா பிரதோஷம் : ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, சட்ஜ பிரபா பிரதோஷம் எனப்படும்.
அஷ்ட திக் பிரதோஷம் : ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.
நவக்கிரகப் பிரதோஷம் : ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக் கிரகங்களின் அருளும் கிடைக்கும்.
துத்தப் பிரதோஷம் : அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் பிறவி குறைபாடுகள் கூட சரியாகும்.
Read more: கரிநாள் என்றால் என்ன