இந்த பதிவில் “தைப்பொங்கல் சிறுவர் கட்டுரை” என்ற தலைப்பில் இரண்டு (02) கட்டுரைகளை காணலாம். இவை ஒவ்வொன்றும் 150 சொற்களை கொண்டமைந்துள்ளன.
தன் ஒளிக்கதிர்கள் மூலம் விவசாயத்திற்கு உதவும் சூரியனிற்கு நன்றி செலுத்தும் முகமாகவே தைப்பொங்கல் கெண்டாடப்படுகின்றது.
Table of Contents
தைப்பொங்கல் சிறுவர் கட்டுரை – 1
தமிழர்களின் வாழ்வியலை எடுத்தியம்பும் பல்வேறு பண்டிகைகள் காலம் காலமாக கொண்டாடப்பட்டு வருகின்றன. அவற்றுக்கு உதாரணமாக தைப்பொங்கல் மற்றும் சித்திரை வருடப்பிறப்பு ஆகியவற்றை குறிப்பிடலாம்.
அவற்றில் தைப்பொங்கல் விசேடமானதும் மிகமுக்கியமானதுமான ஒன்றாகும். ஒவ்வொரு தமிழ் வருடத்திலும் முதல் மாதமான தைமாதத்தில் வருகின்ற முதலாம் நாள் தைப்பொங்கலானது கொண்டாடப்படுகின்றது.
இந்த உலகிலுள்ள அனைவரிற்கும் உணவைத் தருகின்றவர்கள் விவசாயிகள். அந்த விவசாயிகள் உணவை உற்பத்தி செய்வதற்கு உறுதுணையாக இருப்பவன் சூரியன்.
தன் ஒளிக்கதிர்கள் மூலம் விவசாயத்திற்கு உதவும் சூரியனிற்கு நன்றி செலுத்தும் முகமாகவே தைப்பொங்கல் கெண்டாடப்படுகின்றது.
நன்றாக மழை பொழிந்து விவசாயம் வளரவும், நாடு செழிக்கவும் தமிழர்கள் தைத்திருநாளை தமது மரபுவழியாக சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
கிராமப் புறங்களில் தைப் பொங்கல் தினத்தன்று அதிகாலையில் நித்திரை விட்டெழுந்து, வீட்டின் முன்போ அல்லது வயல்களை ஓரங்களிலோ கோலமா கோலமிட்டு, அதனை சுற்றி தோரணங்களால் அலங்கரிப்பர்.
அதில் புத்தம்புது மட்பானை வைத்து அறுவடையில் கிடைத்த அரிசியில் பொங்கல் பொங்கி அதனை சூரியனிற்கு படைத்து வழிபடுவது வழமை.
வருடம் முழுவதும் வயல்களில் கடினமாக உழைத்த மனிதர்கள், தம் உழைப்பின் பயனை நுகரத்தொடங்கும் ஆரம்ப நாளே அதுவாகும். எனவே தாம் மகிழ்ச்சியோடு பொங்கிய பொங்கலை உறவினரோடு பகிர்ந்து தமது மகிழ்ச்சியை கொண்டாடித் தீர்ப்பர்.
தைப்பொங்கலிற்கு அடுத்த தினம் மாட்டுப்பொங்கல் தினமாகும். இதனை பட்டிப் பொங்கல் என்றும் அழைப்பர். வயல்களில் கடினமாக உழைத்த மாடுகளிற்கு நன்றி செலுத்துவதற்காகவே இத்தினம் கொண்டாடப்படுகின்றது.
மாடுகளை குளிப்பாட்டி, அலங்கரித்து உணவு படைத்து வழிபடுவர். தைப்பொங்கலும் அதனோடு இணைந்த பட்டிப்பொங்கலும் விவசாய மக்களின் வாழ்வியலையும் தமிழர்களின் சமூகவியலையும் அழகாக எடுத்தியம்புகின்றன.
தைப்பொங்கல் சிறுவர் கட்டுரை – 2
உழவர் திருநாள், அறுவடை திருநாள் என சிறப்பாக அழைக்கப்படும் தைப்பொங்கலானது தமிழர்களுக்கு மிகமுக்கியமான பண்டிகை ஆகும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று முன்னோர்கள் சொல்வார்கள்.
ஆண்டு முழுவதும் வயல்களிலும் வெயிலிலும் மழையிலும் கடினமாக உழைத்த விவசாயிகளிற்கு மகிழ்ச்சியை கொண்டுவரும் மாதமே தை. அந்த மகிழ்ச்சியை இன்னும் அதிகப்படுத்து முகமாகக் கொண்டாடப்படுவே தைப் பொங்கல்.
நன்றாக மழை பொழியவும் பயிர் செழித்து வளரவும் உறுதிணையாக இருப்பவன் சூரியன். தம்முடைய விவசாயத்திற்கு உதவிய சூரியனிற்கு நன்றி கூறவே இப்பண்டிகையை கொண்டாடுவர்.
வயல்களில் அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்களை உலர்த்தி உமி நீக்கி அதிலிருந்து பெறப்பட்ட புதிய அரிசியைக் கொண்டு பொங்கல் பொங்கி சூரியனிற்கு படைத்து வழிபடுவர்.
தாமும் உண்டு அயலவர்களுடன் பகிர்ந்துண்டு களிப்புறுவர். பானையில் பொங்கல் பொங்கி வழிவதனைப்போல் விவசாயிகள் வாழ்க்கையில் அந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும் என்பதே ஐதீகம்.
பொங்கி வழியும் போது பொங்கலோ பொங்கல் என கூக்குரல் இட்டு ஆனந்தமடைவர். பொங்கல் தினத்தன்று இசைக் கச்சேரிகளும், விளையாட்டு நிகழ்வுகளும் நடைபெறும்.
தைத்திருநாளன்று நடைபெறும் விளையாட்டுகளில் முக்கியமானது ஐல்லிக்கட்டு ஆகும். மாடுகளைக் கொண்டு விளையாடப்படும் இவ்விளையாட்டு தமிழர்களின் மரபுவழி வீரவிளையாட்டுகளில் ஒன்றாகும்.
இவ்வாறு வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வந்த தைத்திருநாளை கொண்டாடும் ஆர்வம் தற்காலத்தில் வெகுவாகக் குறைந்துள்ளது. எனவே நாம் அனைவரும் தைத் திருநாளை வாழ்வின் முக்கியமான அங்கமென கருதி கொண்டாடி மகிழ்வாக வாழ்வோமாக.
You May Also Like : |
---|
எங்கள் ஊர் கட்டுரை |
எனக்கு சிறகு இருந்தால் கட்டுரை |