தேசப்பற்று பற்றிய கட்டுரை

Desa Patru Katturai In Tamil

இந்த பதிவில் “தேசப்பற்று பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

நம் இந்திய தேசம் முன்னேற்றம் அடையவும்⸴ வல்லரசு நாடாக உருவாகவும் அனைவரும் தேசப்பற்றுடன் செயற்பட வேண்டும்.

தேசப்பற்று பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. தேசப்பற்றின் அவசியம்
  3. காந்தியடிகளின் தேசப்பற்று
  4. பாரதியாரின் தேசப்பற்று
  5. மாணவர்களின் தேசப்பற்று
  6. முடிவுரை

முன்னுரை

தேசத்தின் மீது கொண்டுள்ள அளவு கடந்த அன்பு தேசப்பற்று ஆகும். ஒவ்வொரு மனிதனுக்கும் தான்⸴ தன்னுடைய குடும்பம்⸴ சுற்றம், தன்னுடைய இனம்⸴ மொழி⸴ மதம்⸴ பண்பாடு என்று தான் சார்ந்த தேசத்திலும் வேர்கொண்ட ஒன்றே தேசப்பற்றாகும். தேசப்பற்று பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

தேசப்பற்றின் அவசியம்

நாட்டின் முன்னேற்றத்திற்கு தேசப்பற்று அவசியமாகின்றது. இனம்⸴ மதம்⸴ மொழி என பிரிந்து இருந்தாலும் தன் தாய் நாட்டை நேசிக்க வேண்டும். அதன் மீது பற்றுறுதி கொள்ளும் போது தான் தேசம் வளரும்.

அந்நியரின் ஆதிக்கத்தினை எதிர்க்க தேசப்பற்று அவசியமாகும். தேசத்தின் ஒற்றுமைக்கும் நாட்டுப்பற்று அவசியமாகும்.

ஒவ்வொரு குடிமக்களும் தான், தன்னுடைய என்று வாழாது தேசிய உணர்வுடன் நம் நாடு⸴ நம் மக்கள் என எண்ணும் போது சமுதாயத்தின் எதிர்காலத்திலும்⸴ முன்னேற்றத்திலும் தாழ்வு நிலை ஏற்படாது சமாதானமும்⸴ சகோதரத்துவமும் ஏற்பட்டு அன்பு⸴ அமைதி⸴ ஒற்றுமை நிலை நாட்டப்படும்.

காந்தியடிகளின் தேசப்பற்று

காந்தியடிகள் தேசப்பற்று மிகுந்த மகானாவார். இவர் தேசத்தின் மீது கொண்ட அளவு கடந்த அன்பும்⸴ பற்றும் தான் அந்நியரிடமிருந்து இந்திய தேசத்தை விடுதலை பெறச் செய்தது என்றால் அது மிகையாகாது.

அகிம்சை என்னும் வழியில் தேசப்பற்றை இந்திய மக்களுக்கு கொண்டு போய் சேர்த்தவர் காந்தி அடிகள் ஆவார். தேசத்தின் மீது இவர் கொண்ட அளவு கடந்த அன்பினாலும் அக்கறையாலும் அந்நியப் பொருட்களை புறக்கணித்து எளிமையான வாழ்வை வாழ்ந்தார்.

பாரதியாரின் தேசப்பற்று

நம் நாடு⸴ நம் தேசம் என்று வாழ்ந்து எழுத்துக்களாலும்⸴ பாடல்களாலும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் மகான் தான் பாரதியார்.

மக்களுக்கு விடுதலை உணர்வைத் தூண்டும் கவிதைகள் மற்றும்⸴ கட்டுரைகளை இந்திய விடுதலைப் போராட்ட காலங்களில் எழுதியவர் ஆவார்.

இந்தியா உலக நாடுகளுக்கெல்லாம் தலைமை ஏற்கும் முதன்மை நாடாக இருக்கவேண்டும் என எண்ணிய தேசப் பற்றாளன் பாரதியார் ஆவார்.

மாணவர்களின் தேசப்பற்று

இன்றைய மாணவர்களே எதிர்கால நாட்டின் தலைவர்களாவர். எனவே மாணவர்களுக்கு தேசப்பற்று மிகமிக அவசியமாகும். தேசப்பற்று மிக்க மாணவர்களின் உருவாக்கமே நாட்டின் வளர்ச்சிக்கும்⸴ பாதுகாப்பிற்கும் ஆரோக்கியமானதாகும்.

நேர்மையான லஞ்சமற்ற எதிர்கால இந்தியாவை உருவாக்க மாணவர்களுக்கு தேசப்பற்று கல்வி அவசியமாகும்.

தாய் நாட்டின் எதிர்காலப் பாதுகாவலர்கள் மாணவர்களே. எனவே மாணவர்களுக்கான நாட்டுப்பற்று கல்வி முறை முக்கியமானதாகும். சிறுவயதிலிருந்தே நாட்டுப்பற்றுள்ள சிறுவர்களாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.

முடிவுரை

நம் சுதந்திர போராட்ட வீரர்களின் தேசப்பற்றுத் தான் நம் இந்திய தேசத்தை அந்நியர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலை பெற வைத்தது. தாயை நேசிக்கும் ஒவ்வொருவரும் தாய் நாட்டையும் நேசித்தல் வேண்டும்.

இந்திய தேசம் முன்னேற்றம் அடையவும்⸴ வல்லரசு நாடாக உருவாகவும் அனைவரும் தேசப்பற்றுடன் செயற்பட வேண்டும். எனவே மாணவர்களாகிய நாம் நம் தாய் நாட்டின் மீது மிகுந்த அக்கறையும்⸴ அன்பும் கொண்டு நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைப்போம்.

You May Also Like :

குடியரசு தினம் பற்றிய கட்டுரை

தேசியக் கொடி பற்றிய கட்டுரை