மொழி என்பது ஒருவரின் கருத்தை வெளியிடவும், அதை மற்றொருவர் புரிந்து கொள்ளவும் பயன்படுகிறது. அம் மொழியை பிழையின்றி பேசவும், எழுதவும் துணை செய்வது இலக்கணம் ஆகும்.
முத்தமிழில் ஒன்றான இயற்றமிழானது இலக்கணத்தை விளக்க உதவுகிறது. இந்த தமிழ் இலக்கணங்களின் வகைகளில் ஒன்றான அடைமொழி என்பதை பற்றி நோக்குவோம்.
Table of Contents
அடைமொழி என்றால் என்ன
ஒரு வாக்கியத்தின் உறுப்புகளை விளங்கிக் கொள்ளவும், விரித்து எழுதுவதற்கும் பயன்படுவதே அடைமொழி ஆகும்.
அதாவது எழுவாய், பயனிலை, செயற்படுபொருள் எனும் வாக்கிய உறுப்புகளை விசேடித்துக் கூறும் சொற்கள் அடைமொழிகள் எனப்படும்.
அடைமொழி எடுத்துக்காட்டு:
- அழகான பொம்மை அங்கே இருந்தது.
- நாய் விரைவாய் ஓடியது.
- வெள்ளநீர் பெரிய கட்டடங்களை வீழ்த்தியது.
அடைமொழியின் வகைகள்
அடைமொழியானது அது விசேடிக்க அல்லது விளக்குவதற்கு பயன்படுத்தப்படும் சொற்களை அடிப்படையாகக் கொண்டு இரண்டு வகைப்படும். அவையாவன,
- பெயரடை
- வினையடை
பெயரடை
பெயர்ச் சொற்களின் பண்பை உணர்த்தப் பயன்படுத்தப்படுகின்ற சொற்கள் பெயரடை எனப்படும்.
பெயரடை எடுத்துக்காட்டு:
- அழகான புத்தகம்
- பெரிய மரம்
- அமைப்பான வீடு
மேலுள்ள வாக்கியங்களில் புத்தகம், மரம், வீடு ஆகிய சொற்கள் பெயர்ச் சொற்கள் ஆகும். இப்பெயர் சொற்களின் பண்பை உணர்த்துவதற்காக அழகான, பெரிய, அமைப்பான ஆகிய சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆகவே இவ்வாறு ஒரு பெயர்ச்சொல் எப்படிப்பட்டது என்ற வினாவிற்கு விடையாக அழகான, பெரிய, அமைப்பான ஆகிய பண்புகள் காணப்படுகின்றன.
பெயரடைகளின் வகைகள்
பெயரடைகள் அவற்றின் அமைப்பு அடிப்படையில் இரண்டு வகையாக பிரிக்கப்படுகின்றன.
- தனிப்பெயரடை
- ஆக்கப் பெயரடை
தனிப்பெயரடை
பெயர்ச் சொற்களை விசேடித்து அதன் பண்பை விளக்கி வரும் பெயரடை தனிச்சொல்லாக அமைந்தால் அது தனிப்பெயரடை எனப்படும்.
உதாரணம்:
- சிவந்த கண்கள்
- நல்ல புத்தகம்
- நீண்ட பயணம்
ஆக்கப்பெயரடை
பெயர்ச் சொற்களை விசேடித்து அதன் பண்பை விளக்கி வரும் பெயரடை கூட்டுச் சொல்லாக அமைந்தால் அது ஆக்கப்பெயரடை எனப்படும். இது கூட்டுப் பெயரடை எனவும் அழைக்கப்படுகிறது.
உதாரணம் :
- அழகான கிளி
- இனிமையான பாடல்
- பண்புள்ள மாணவன்
இதில் காணப்படுகின்ற அழகான, இனிமையான, பண்புள்ள சொற்களை அழகு +ஆன, இனிமை+யான, பண்பு+உள்ள என பிரித்து நோக்க முடியும். இவ்வாறு பிரித்து நோக்க கூடிய பெயரடைகளையே ஆக்கப் பெயரடை என்கின்றனர்.
வினையடை
வினைச் சொற்களின் பண்பை உணர்த்தப் பயன்படுத்தப்படுகின்ற சொற்கள் வினையடை எனப்படும்.
உதாரணம்:
- நான் நேற்று சென்றேன்.
- இவன் அடிக்கடி வருகிறான்.
- கமலா வேகமாக நடந்தாள்.
இதில் காணப்படுகின்ற சென்றேன், வருகிறான், நடந்தாள் எனும் வினைச்சொற்கள் தமது தன்மையை விவரிப்பதற்காக அடிக்கடி, நேற்று, வேகமாக எனும் அடைமொழிச் சொற்களை பயன்படுத்துகின்றன. இவற்றையே வினையடைச் சொற்கள் என்கின்றனர்.
வினையடைகளின் வகைகள்
வினையடை அவை பயன்படுத்தப்படுகின்ற அமைப்பின் அடிப்படையில் இரண்டு வகைப்படும். அவையாவன,
- தனி வினையடை
- கூட்டு வினையடை அல்லது ஆக்க வினையடை
தனி வினையடை
வினைச் சொற்களை விசேடித்து வரும் வினையடை தனிச்சொல்லாக அமைந்தால் அது தனி வினையடை எனப்படும்.
உதாரணம்:
- சிறுவன் கீழே விழுந்தான்.
- கண்ணன் மாலையில் வருவான்.
- ஆசிரியர் உள்ளே வந்தார்.
இந்த வாக்கியங்களில் காணப்படுகின்ற விழுந்தான், வருவான், வந்தார் என்ற வினைச்சொற்களானது கீழே, மாலையில், உள்ளே என்ற தனித்து இயங்கக்கூடிய வினையடைச்சொற்களை கொண்டு காணப்படுகின்றமையாலேயே, இவை தனிவினையடை எனப்படுகின்றது.
கூட்டு வினையடை அல்லது ஆக்க வினையடை
பெயர்ச் சொற்களுடன் ஆக, ஆய், ஆகிய விகுதிகள் இணைக்கப்படுவதால் ஆக்கப்படும் வினையடை கூட்டு வினையடை அல்லது ஆக்க வினையடை எனப்படும்.
உதாரணம் :-
- சிறுவன் வேகமாக ஓடினான்.
- கண்ணன் நிதானமாய்க் பேசினான்.
- ஆசிரியர் இனிமையாகப் பாடினார்.
வாக்கியங்களில் காணப்படுகின்ற ஓடினான், பேசினான், பாடினார் போன்ற வினைச்சொற்களானது வேகமாக, நிதானமாய், இனிமையாக போன்ற தனித்து இயங்காத கூட்டு வினையடைகளை கொண்டமைந்து காணப்படுகின்றது. அதாவது இவ்வினையடைகளை பின்வருமாறு பிரிக்கலாம்.
வேகமாக – வேகம் + ஆக
நிதானமாய் – நிதானம் + ஆய்
இனிமையாக – இனிமை + ஆக
இவ்வாறு பிரிக்கக் கூடியதாக அமையும் சொற்களை கூட்டுவினையடை சொற்கள் என்கின்றனர்.
Read more: வாக்கியம் என்றால் என்ன